Wednesday, June 23, 2010

குரான் படிக்கத்தக்கதல்ல

அண்ணே வணக்கம் இந்த சுறு சுறு விறு விறு பதிவோட அன்று மெக்சிக்கோ இன்று இந்தியாங்கற தலைப்புல இந்திய அரசாங்கம் சனங்க கிட்ட கை மாத்துகேட்டு எஸ்.எம்.எஸ் .கொடுக்கிற நாள் கிட்டே இருக்குன்னு நிரூபிச்சு அன்று மெக்சிகோ இன்று இந்தியாங்கற தலைப்புல  ஒரு தனி பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க.

பாக் நீதிமன்றம் கூகுல், யாஹூ, எம்.எஸ்.என் போன்ற பிரபல வலைதளங்களுக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டுள்ளது.  காரணம் குரானுக்கு எதிரான விஷயங்கள் மேற்படி வலைதளங்களில் வெளியாகிறதாம்.

பராசக்தி சினிமாலயே கலைஞர்"ஆண்டவன் ஆணைக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்"னு வசனம் எழுதிட்டாரு. அன்னைக்கு ஆண்டவன் கட்டளைக்கான காரணத்தை  டீ கடைலயும், தெருமுனை கூட்டங்கள்ளயும்  கேட்டாய்ங்க இன்னைக்கு வலைதளத்துல கேட்கிறாய்ங்க. அதான் வித்யாசம்

குரான் என்பது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையோ   என் சைக்ளோ பீடியாவோ  அல்ல . அதில் சொல்லப்பட்டதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக  இருந்தாகவேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

ஆன்மீகத்தின் இலக்கு வேறு. விஞ்ஞானத்தின் இலக்கு வேறு . ஆன்மீகத்தின் வீச்சு வேறு . விஞ்ஞானத்தின் வீச்சு வேறு.  இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதே ஆன்மீக வாதிகளின் பிழைப்பாய் போயிற்று.

ஒரே செய்தியை கலைஞர் டிவி ஒரு விதமாய், ஜெயா டிவி ஒரு விதமாய் கூறுவதை போல் ஒரே விதமான ஆன்மீக அனுபவத்தை  பெற்ற மனிதர்கள்  தம்  அனுபவத்தை  பல விதமாய் சொல்லியிருக்கிறார்கள். அந்த வெளிப்படுத்தலில் அவரவர் அகந்தை, சுயம், கால ,தேச,வர்த்தமானங்களின் தாக்கம் ஆகியன அவர்களையும் அறியாது  சற்றே கலந்திருக்கலாம். 

இங்கு எது ஒன்றுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அப்பாற்பட்டதென்று மூடி வைத்துக்கொண்டால் அது நாற்றமெடுத்துப்போகும். இந்து மதத்தின் பல விஷயங்களை ஒரு இனம் இப்படி மூடி வைத்ததால் தான் நாற்றமெடுத்து போனது. அவற்றின் உண்மையான விளக்கங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டன. டேமேஜ் ஆன ப்ளாக் பாக்ஸ் ஆகிவிட்டன.

நாற்றம் என்பது அழுகலின் விளைவு. அடைப்பின் விளைவு. தேக்கத்தின் விளைவு. நாற்றத்தை உணர்ந்ததும் நாம் செய்ய வேண்டியது அடைப்பை நீக்குவதே. சிலருக்கு வாய்ல பீ நாத்தம் அடிக்கும். அவன் செய்ய வேண்டியது வாய்க்கு தடை விதிப்பதல்ல. ஆசனத்துக்கு ஏற்பட்டுவிட்ட தடையை நீக்குவது .

ஒரு சில வலை தளங்களுக்கு தடை விதித்த மாத்திரத்தில் குரான் குறித்த விமர்சனங்கள் மாயமாய் மறைந்துவிட போவதில்லை. வேறு ஒரு ஊடகத்தில் ,வேறு ஒரு தளத்தில் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். இந்த விமர்சனங்களை உரிய வாதங்களுடன்,ஆதாரங்களுடன் முறியடிக்க வேண்டுமே தவிர  தடை என்பது கையாலாகாதோர் செயலாகும்

உண்மையில் சில விஷயங்களின் மீதான தடைகள் தாம் அவ்விஷயங்களின் கவர்ச்சியை கூட்டியுள்ளன. உ.ம் செக்ஸ்

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

தடை விதிப்பது நோய் பிடித்த மனதின் அறிகுறி.  ஆயிரம் கருத்துக்கள் மோதும்போதுதான் சத்தியம் மின்னலாக பளீரிடும். இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகம் குறித்த விமர்சனங்களே இளைய தலைமுறையை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும்.

இதை பாக் நீதிமன்றம் உணராமல் போனது வருந்தத்தக்கது.  உடல், மனம்,புத்தி ஆகியவற்றை கடந்தால் தான் ஆன்மா தரிசனம் அளிக்கும்.

ஆன்ம தரிசனம் கருத்துப்புயலுக்கு பின் கிடைக்கக்கூடியது. குரான் வெறுமனே படிக்கத்தக்கதல்ல. புரிந்துகொள்ள தக்கதல்ல. சைக்காலஜி கூறும் கான்ஷியஸ்,சப்கான்ஷியஸ் மைண்ட்ஸ தாண்டி உள்ள  உள்ளார்ந்த ஒருமை உணர்வுகளால் உணரத்தக்கது. அதை உணர படிப்பவர் மனதில் பிக் பேங் , என்ற  மகாவெடிப்பே நிகழ வேண்டும். அதை விமர்சனங்கள் நிகழ்த்தும். எனவே பாக் அரசு கருத்து தடை என்ற பெயரில் ஆன்மீக பாய்ச்சலுக்கு தடை விதித்து விடக்  கூடாது.

பி.கு: விமர்சனங்கள்  சரோஜாதேவித்தனமாக சாக்கடை நடையில்  இருப்பின் குறிப்பிட்ட அந்த வலைதளங்களை தடை செய்யலாம். அதை விட்டு தேடு தளங்களையே தடை செய்வது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதே .