Wednesday, June 2, 2010

உனக்கு 22 எனக்கு 32

மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்போ இந்த ஃபோன்  அய்யய்யோ என் லைஃப்ல  மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..

"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."

"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "

கண்ணாடி டோர் வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.

சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.

ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட  வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து  வீட்டுக்கு போலாம் வான்னாரு

பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"

காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"

அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டிட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன்  நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."