Tuesday, June 22, 2010

மழையும் கனவும்

மழை
பொறுப்பில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களின்
சுய நலத்தால்  பொது நலத்துக்கே மறு பெயரான மழையும்
விருப்பற்றுதான் பொழிகிறது
ஈங்கிவர் ஈன தனத்தால் பொழிந்ததும்
கடலுக்குத்தான் சேர்கிறது.

கல்லெடுத்து கடவுள் செய்தாலும்
சொல்லெடுத்து அவனுக்கு காவியம் செய்தாலும்
மனித மனங்களில் வறட்சிப்பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஓசோனுக்கே ஓட்டை போட்டாலும்
ஓஷோவுக்கு விஷத்தை தந்தாலும்
மனித மனங்களில் ஈரப்பதம் இருக்கத்தான் செய்கிறது.

என் பணி மனித மனங்களில் மனிதம் விதைப்பதே
மனிதம் முளைக்க வான் மழை பொழியாவிடினும்
பொழிந்ததுவும் கடல் தேடி போனாலும்
விதைப்பேன் மனிதம்.
அது முளைத்திட என் உதிரமும் சொரிவேன் நிதம்.

கனவு

உண்டு உறங்கி கனவு காணும் சாதி இவர்கள்
கனவை உண்டு கனவில் உறங்கி கனவே வாழ்வானவன் நான்
என் கனவெல்லாம் ஒன்றே
என் கனவை கலைத்துப்போடும் யதார்த்தம் கனவென கலைந்து போக வேண்டும்.

யதார்த்த கல்லறையில் கிடக்கும் உயிர் பிணங்களின் சிந்தையிலும் கனவு கசிய வேண்டும்
அவர்தம் கணிதம்  நசிய வேண்டும்.
புனிதங்களுக்கு திருத்தப்பட்ட புதிய பதிப்பு வரவேண்டும்.

என் கனவு ஒன்றே இங்கு இவர்களுக்கு கனவே உணவாகா விட்டாலும் பரவாயில்லை
செரிக்க முடியாத விஷயங்களை விழுங்கி வைக்க நீராகவேனும் ஆகட்டும்.