அருண் வந்தான். "சாமீ உனக்கு ஒரு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு"ன்னான். அருணால சாமீன்னு விளிக்கப்பட்ட நான் ஒரு ஜோசியன். வயசு 43. அருண் ஹோம் கார்டா ( ஊர்காவலர்) வேலை செய்றான். என் க்ளையண்ட். க்ளையண்டுங்கறத விட பக்தன்னு சொல்லலாம்.
நான்" என்னப்பா அது சூப்பர் சான்ஸு அது இதுங்கறே நிதானமா சொல்லு" ன்னு கேட்டதுதான் தாமதம். "அதான் சாமீ ..எங்க ஏரியால இருக்கிற ராதாம்மா பையனுக்கும் அவிக எதிர்த்த வீட்ல இருந்த கண்ணாலமான பொம்பளைக்கும் கனெக்சன் இருந்தது.. அந்த பொம்பளைக்கு அப்பன் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டான். எஸ்.ஐ தினம் தினம் அவிக வீட்டுக்கு போலீஸ் காரவுகளை அனுப்பி டார்ச்சர் பண்ணிக்கிட்டிருந்தான். நீங்க ராதாம்மாவோட நச்சரிப்பு தாங்காம ஸ்டேஷனுக்கு போயி வீட்ல வயசு வந்த பொண்ணிருக்குப்பா .. நேரங்கெட்ட நேரத்துல போலீஸ்காரவுங்களை வீட்டண்டை அனுப்பாதேன்னு ரிக்வெஸ்ட் பண்ணிங்களே"ன்னு ஃப்ளாஷ் பேக்கை எடுத்துவிட்டான்.
"ஆமாப்பா. இத்தனைக்கும் அந்த பொம்பள பல கை மாறினவன்னு நான் கூட கேள்விப்பட்டேன். அவள் காலேஜுல படிக்கிற காலத்துல இருந்து அவளோட அப்பனுக்கு . இதான் வேலைன்னும் தெரியவந்தது . அதனால தான் ஸ்டேஷனுக்கு போனேன். ஆனால் அந்த எஸ்.ஐ தான் என்னையே கண்டமேனிக்கு பேசி அனுப்பிட்டானே. அப்புறம் ராதாம்மா பையன் எவனோ கவுன்சிலரை கூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு போக ராட்டினம் ஏத்தி ஒரு வாரம் வாரம் வச்சிட்டு
பின்னு பின்னுன்னு பின்னி அஞ்சாயிரம் ரூபா லஞ்சம் வாங்கிக்கிட்டுத்தான் வெளிய விட்டானாமே. ராதாம்மா ரொம்ப வருத்தப்பட்டுச்சு."
அருண் ,"சாமீ.. உங்களை அவமானப்படுத்தின எஸ்.ஐக்கு கேடுகாலம் வந்துருச்சி. ஏ.சி.பில வசம்மா சிக்கிக்கிட்டான். திருப்பதி போறச்ச ஆக்சிடெண்ட் ஆகி இவனுக்கு கால் முறிவு, பெண்டாட்டிக்கு ஸ்பைனல் கார்ட்ல அடிப்பட்டு இன்டென்சிவ் கேர்ல இருக்காள். எஸ்.ஐ முனி அடிச்சமாதிரி ஹாஸ்பிட்டல்ல அட்மிட்ல கிடக்கான். நான் மெதுவா உங்களை பத்தி எடுத்து விட்டேன். உங்களை கையோட கூட்டிவரச்சொல்லியிருக்கான். உங்களுக்கு இதான் சான்ஸ். அவனை அப்படியே பேதியாக்கிரனும். நீங்க பேசாம இருந்தா நான் சுளையா அஞ்சாயிரம் பத்தாயிரம் கறந்து கொடுத்துர்ரன்"ன்னான்.
நான் சொன்னேன், " அருண் ! வித்தைங்கறது ஒரு ஆயுதம். ஆயுதத்தை ஆயுதபாணி மேல பிரயோகிக்கலாமே தவிர நிராயுதபாணி மேல பிரயோகிக்க கூடாது. வித்தை தெரியாதவன் நிராயுதபாணி. அவனோட தொழில் அவனுக்கு பிறரை அவமானப்படுத்தி பார்க்கிற புத்திய கொடுத்திருக்கலாம். ஆனால் என்னோட தொழில் அடுத்தவங்களுக்கு உதவற புத்தியத்தான் கொடுத்திருக்கு.. வா போகலாம்"