Tuesday, July 20, 2010

எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி  மனைவியை  வெட்டிக்கொலை செய்து  பிடிபட்டவன் பெண் நிருபரை கிட்னாப் செய்துகொண்டு போவதாய் ஒரு குறுகிய கால தொடர் ஒன்றை ஆரம்பித்து அதை டீலில் விட்டுவிட்டேன். அதை இந்த பதிவில் தொடர்கிறேன்.  அதை படிக்காதவுக, அல்லது படிச்சு மறந்து போனவுக கீழே தந்துள்ள முதல் அத்யாயத்தை ஒரு தாட்டி படிச்சுருங்கண்ணா

நான் ஒரு சரித்திர (?) பின்னணி வாய்ந்த  பிரபல தினசரியின் அண்டை மானில  பெண் நிருபர். என் பேர் நிருபமா.( பொருத்தமான பேர், நேமாலஜி காரவுக கவனிக்கவும்).

நான் அடுத்த அரைமணி நேரத்துல கடத்தப்படுவேனு கனவுல கூட நினைக்கலை.  அதிர்ச்சி போதும்னு நினைக்கிறேன். சரி மேட்டரை கொஞ்சம் விலாவாரியாவே சொல்றேன்.

உங்க வகுப்புல மானிறமா, ஒல்லி பீச்சானா, சோடாபுட்டி கண்ணாடி ,எலிவால் கூந்தலோட இருந்தாளே ரமாவா ,உமாவா ஞா இருக்கா? அந்த மாதிரி ஃபிசிக் தான்.
என்னைக்கு ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு அமாவாசை இருட்ல
தனியா நடந்து போறாளோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம்னாரே காந்தி. அதுல பாதியை என்னை வச்சு நிரூபிக்கலாம். நகை போட்டுக்காம நான் ராத்திரி
நடந்து போனா அவனவன் தன் வேலைய பார்த்துக்கிட்டு போயிருவான்.
இருந்தாலும் என் தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் மயங்கி பத்திரிக்கைல  வேலை கொடுத்துட்டாய்ங்க.

கொள்ளை போன வீட்டை, கொலையான இரவு ராணியோட உடலை, அல்லது கொலை செய்த ரங்கனுக்கு விலங்கு மாட்டினதை எங்க நிருபர் நேர்ல பார்க்கனும். எங்க ஃபோட்டோ கிராஃபர் படம் பிடிக்கனும். அப்பதான் அது  செய்தியாகும்.புலன் விசாரிச்சு எழுதறது,பேசிக்கொள்கிறார்கள், கருதப்படுகிறது மாதிரி கட்கத்தை மோந்து எழுதறதெல்லாம் எங்க அகராதில கிடையாது,

எங்க பத்திரிக்கையோட மரியாதைக்கு ஏம்பா "......... நிருபர்" வந்தாச்சான்னு கேட்டுட்டுதான் ப்ரஸ் மீட்டே ஆரம்பமாகும். ஏன்னா பிரபலங்களோட பேச்சுக்கு எங்க  வியாக்யானங்களை சேர்த்து எழுதமாட்டோம். இன்னார் கூறியதாவதுனு ஆரம்பிச்சு அப்படியே  போட்டுருவம். இதனால செய்தி எங்களை தேடி வரும். விளம்பரத்துக்காக ஆஃபீஸ் ஆஃபீஸா சுத்தறது. விளம்பரம் கிடைக்கலன்னா  கண்டபடி செய்தி போடறதுங்கற பாவத்தெல்லாம் கிடையாது. விளம்பரமெல்லாம் ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ்லயே போயிரும். 

 ஒரு நாள் ஸ்டேசன்ல இருந்து "பெண்டாட்டி சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய போட்டு தள்ளின பார்ட்டிய புடிச்சு வச்சிருக்கம் வந்துரும்மானு
ஃபோன்.

அலறியடிச்சுக்கிட்டு ஓடினேன். "சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய கொலை பண்றதா?ன்னு ஒரே பதைப்பு. ஒரு சம்பிரதாய பிரஸ் மீட்டுக்கான ஏற்பாட்டுக்கிடையில் டி.எஸ்.பி  கொலையாளிய ஒரு ஓரமா நிக்க வச்சு பேசினார்.ஆசாமி அரவிந்தசாமி மாதிரி இருந்தாலும் கை,கை விரலெல்லாம் புடைச்சு  கண்ல ஏதோ ஒருவித தீவிரம். எங்களையெல்லாம் ஒரு மாதிரி கேவலமா பார்த்து, கோணலா சிரிச்சிக்கிட்டிருந்தான்.

டி.எஸ்.பி பேச ஆரம்பிச்சாரு." இவர்பேர் மனோகரன்.வயசு 40 இவரு ...............மண்டலம்.............பஞ்சாயத்து................கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 2001ல அதே கிராமத்தை சேர்ந்த  லல்லி என்ற லலிதாவுடன்  கல்யாணம் ஆச்சு லலிதாவோட வயசு 28. மனோகரன் கார்ப்பெண்டர்.  நம்ம டவுன்ல ப்ரேம் நகர்ல காமினி காம்ப்ளெக்ஸ்ல  குடியிருந்தாங்க. நேத்து மதியம் சாப்பிட வந்தவர் சாம்பார் சரியா இல்லேனு  தட்டை தூக்கி மனைவி  முகத்து மேல எறிஞ்சிருக்காரு.

அந்தம்மா இன்னைக்கு ஒரு நாள் தவறிப்போச்சுங்க. இனிமே நல்லா வைக்கிறேனு சொல்லியிருக்கு. இருந்தாலும் மனோகர் காய் கறி நறுக்கிற கத்திய எடுத்து மனைவியோட நெஞ்சுல சதக் சதக்குனு குத்தியிருக்காரு. அந்தம்மா சம்பவ இடத்துலயே செத்துட்டாங்க. மனோகர் டவுன் பஸ் பிடிச்சு நேர ஸ்டேஷனுக்கு  வந்து சரண்டர் ஆயிட்டாரு."

எல்லா நிருபர்களும் பரபரனு விவரங்களை குறிச்சிக்கிட்டு பறந்தாங்க. எங்க பேப்பர் டெட்லைன் சாயந்திரம் அஞ்சு. ப்ரஸ் மீட் முடிஞ்சப்ப நேரம் அஞ்சரை. இனி எப்ப செய்தி அனுப்பினாலும் நாளைக்கு மறு நாள்தான் வரும்.சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரட்டுமேனு டி.எஸ்.பி கிட்டே பர்மிஷன் கேட்டேன். "சார் ..மிஸ்டர் மனோகர் கிட்டே நான் கொஞ்சம் பேசலாமா?" பக்கத்துல இருந்த எஸ்.ஐ எங்க பேப்பர் பேரை சொன்னாரு போல. உடனே டி.எஸ்.பி அதுக்கென்னம்மா தாராளமா பேசுங்கன்னிட்டாரு.

அப்போ என் வாக்குஸ்தானத்துல சனி இருந்திருக்கனும்.அவனோட  ரெண்டு கையையும் சேர்த்து விலங்கு போட்டிருந்தாங்க. உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலா இருந்தாலும் விலங்கை நினைச்சு தைரியம் வரவச்சுக்கிட்டு கிட்டே போனேன். அதான் தப்பாயிருச்சு. ரைட்டர் டேபிள் மேல ஏதோ கத்தி குத்து சம்பவத்துல உபயோகிச்ச கத்தி பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் போட்டோ கிராஃபருக்காக காத்திருக்க மனோகர் படக்கென்று அதை எடுத்து என்னை பின்னிருந்து இழுத்து மார்போட அழுத்திக்கிட்டு  கத்தியை கழுத்தில் வைத்தான். தன் விலங்கை அவிழ்க்கச்செய்தான். 

என்னை  என் டூவீலரில் ஏறச்சொன்னான். தன்னை பின் தொடர்ந்தால் நிருபி குரூபியாகிருவானு போலீஸ் காரவுகளை   டெர்ரரைஸ் பண்ணான். சில விஸ்வாச கான்ஸ்டபிள்கள் ப்ரபரக்க டி.எஸ்,பி அவங்களை தடுத்தார். டூ வீலரை செக் போஸ்ட் பக்கமா விடச்சொன்னான் . செக் போஸ்ட் தாண்டினோம். வண்டிய புதருக்குள்ள மறைச்சுட்டு ரயில் தண்டவாளத்து மேலயே நடந்தோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்திருப்போம். இருட்டு கம்ம ஆரம்பித்திருந்தது. மேற்கு பக்கமாய் இருந்த மலை நோக்கி நடந்தோம்.

மலை மேல ஒரு கோவில் . கோவில்னா  நாலு சுவர். முன் சுவர் மேல ஒரு மாடம். மாடத்துல பட்டாகத்திய வச்சிருக்கிற ஒரு சிலை. கிட்டே போனதும்
"அம்மா ! " னு குரல் கொடுத்தான்.  உள்ளாற இருந்து ஒரு கிழவி வந்தது. ஒல்லியோ ஒல்லி. மடக்கினா ஒரு சி.டி.மெயிலர்ல அடக்கிரலாம் போல ஒல்லி.

கிழவி வெளி வந்தது வாயெல்லாம் பல்லாக " ஆத்தாடி! மனோகரா ஒன்னிய விட்டுட்டாய்ங்களா?.. நான் சொல்லலே சத்தியம் வெல்லும்டா.. அந்த தெய்வம் கண்ணை திறந்துருச்சு..வாப்பா வா.. ஆமா யாரிந்த பொண்ணு?" என்றாள்.

மனோகரன் , "யம்மா பேசிக்கிட்டிருக்க நேரமில்லே.. சாப்பிட ஏதாச்சும் இருந்தா இந்த பொண்ணுக்கு குடு. பாவம்  நடத்தியெ கூட்டிட்டு வந்தேன் என்றான்.

கிழவி ஒரு அலுமினிய தட்டில் சோறும் ,குழம்பும் ஊற்றிக்கொண்டுவர ரெண்டு பேரும் சாப்பிட்டோம். சின்னதா ஏப்பம் விட்ட மனோகரன் அம்மா பீடி கொண்டான்னிட்டு வாங்கி பத்த வச்சிக்கிட்டான்.ஆழமா புகைய இழுத்து வெளிய விட்டவன்.

"தபார்மா.. உனக்கென்ன நான் ஏன் என் பெண்டாட்டிய கொலை பண்ணேனு டீட்டெயில் வேணம் அவ்ளதானே.."ன்னிட்டு எதையோ சொல்ல ஆரம்பிச்சான். நான் பதறிப்போய் "அ ய்யய்யோ அதெல்லாம் வேண்டாங்க. வீ..ட்டுக்கு ன்னு இழுத்தேன். அவன் பீடிபுகைய இன்னொரு தரம் டீப்பா இழுத்தான் .இருட்ல பீடி  நெருப்பு அவனோட மூணாவது கண் மாதிரி ஒளிர்ந்தது.

திடீர்னு சிரிச்சவன் " தாளி எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி கீறிங்க. அதான் ஆச்சரியம். உங்களுக்கு உங்க வேலை முக்கியம். உனக்கு வீட்டுக்கு போவனும். அவளுக்கு டிவில சினிமா பார்க்கனும். அடுத்தவன் எப்படி வயிறெரிஞ்சு செத்தாலும் உங்களுக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இருக்காது"
(தொடரும்..