Wednesday, September 22, 2010

அவள்

அண்ணே வணக்கம்ணே, எத்தனையோ தொடர்கள் ..எல்லாம் அரைகுறை. இருந்தாலும் என்ன இதோ இன்னொரு தொடர். இதுல அவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசம். அவள்னா யாருனு கேப்பிக.



எவளுக்குள்ளயும் ஆணினம்  அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.



சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.



அவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் - ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.



ஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை. அவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.



வாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.



நான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்கு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.



இருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.



ஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். "இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே"ன்னு புலம்பினேன்.



அவரு யாரோ பேய்ங்க் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல " என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க"ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.



உ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், "அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்!"னுட்டு துடிச்சேன்.



அதுக்கு அவரு " முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்"னாரு.



அவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.



அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.



முக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.



மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.



ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை. திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தது. மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.



கர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)



ஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் "அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.



இந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.



கவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.



அப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.



அந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம் கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.



இதுல ரகசியம் என்ன? அந்த மந்திரம் இதான் :



ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்



நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.



அந்த மூலமந்திரம் இதான்:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ



இதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயம் இதெல்லாம் ப்ளாங்கா இருந்திருக்கும்)



மந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.



எப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.



அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்