Wednesday, September 8, 2010

மனிதர்கள்

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.
சதா சர்வ காலம் தம்மை பலவீனராய் கருதி
பரபலம், பண பலம் கூட்ட தம் பலத்தையெல்லாம்
இழந்து ..

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.

ஒரு மனிதத்தாய் தன் மகவை
சுற்றுலா அனுப்புகையில்
அதன் தேவை யாவும் கணித்து
ஒரு கூடையில் இட்டு அனுப்ப

அந்த தெய்வத்தாய் உமை
வெறுமனே விரட்டிவிட்டாள்
இந்த விசுவத்துக்குள் என்று
எப்படி எண்ணப் போகும்?
பலவீனராய் எப்படி கருதப்போகும்?

மனிதர்கள் ஏன் இத்தனை
பலவீனர்களாக இருக்கின்றனர்.
அதிலும் பலவான்கள் ...
இத்தனை பலவீனர்களாக இருப்பது தான் வியப்பு.

இழப்பதற்கு ஏதும் இருப்பதே பலவீனமா?
முற்றிலும் இழந்து பார்ப்பதே பலமா?

காதலுக்குள் காணாமல் போன பின்பும்
மனிதன் மனிதனாகவே திரும்பிவருவது ஏன்?

காமத்துள் காணாமல் போன பின்பும்
மனிதன் மனிதனாகவே திரும்பிவருவது ஏன்?

ஒரு வேளை தியானத்துள் காணாமல் போன
பின்பும் மனிதன் மனிதனாகவே திரும்புவானோ?

ஏன் இப்படி ?

என்னை நான் கண்டுகொள்ள
நான் முழுக்க காணாமல் போனதே காரணமோ?
காதலில்..  காமத்தில் ..

இவர்கள் ஏன் எதையும் முழுக்க செய்ய மறுக்கிறார்கள்?
கொலை. ?  தற்கொலை ? காதல் ? காமம்?
எதிலும் எதிலும் அரைகுறை

நான் மட்டும் எப்படி காணாமல் போக முடிகிறது
இந்த கவிதையில் உட்பட.

நிரந்தரமாய் தொலைக்க ஏதுமில்லை
தொலைக்க முடிந்தது ஏதும்  நிரந்தரமில்லை
என்ற ஊகம் தான்
எனக்கு அந்த துணிச்சலை தந்ததோ?

இந்த ஊகத்தை என்னில்
விதைத்த ஊடகம் எதுவோ?

அது இவர்களை ஊடுருவுவதை தடுக்கும்
அம்சம் எதுவோ?

என்னில் திறந்தது எதுவோ?
இவர்களில் மூடிக்கிடப்பதெதுவோ?

இவர்களை சிதைப்பது  யாவும்
என்னை செதுக்குவது ஏனோ?