அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?
அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்
ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்
மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.
எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?
தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?
ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்
ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்
அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்