Saturday, October 17, 2009

தமிழ் ஓவியா அவர்களே !

சாதாரணமாகவே அச்சு வடிவத்தில் உள்ளவற்றையே கருத்தூன்றி படிக்கும் வழக்கம் குறைவு. இதில் இணையம் வந்த பிறகு சும்மா மேய்ச்சல் தானே தவிர ஒரு இழவுமில்லை. தங்கள் பதிவுகளை கூட ச்சும்மா மேய்ந்துள்ளேனே தவிர படித்தேன் என்ற வார்த்தையை பயன் படுத்த முடியவில்லை.

ஏற்கெனவே தங்கள் பதிவு ஒன்றுக்கு மறுமொழி இடுகையில் இறை நம்பிக்கையாளர்களையும், மூட நம்பிக்கையாளர்களையும் ஒரே கொட்டிலில் கட்டாதீர்கள். பிரித்து மேயுங்கள் என்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன். மேலும் கடவுள் மறுப்பு கொள்கையை பிரச்சாரம் செய்வோரில் பலர் (நீங்கள் உட்பட) சுய அனுபவம் இன்றி பெரியார் சொன்னார் , பலான மேதை சொன்னார் என்று சொல்வதே அதிகம். இது போலி இறை நம்பிக்கையாளர்களின் போக்கை ஒத்ததாக இருக்கிறது.

விவேகானந்தர் "உன் பிரார்த்தனைக்கான பலன் எங்கிருந்தோ வரவில்லை. அது உன்னிலிருந்தே வந்தது "என்பார். விக்கிரக ஆராதனை பற்றி சித்தர்களை விட , வேமனாவை விட ஸ்ட்ராங்காய் பெரியார் கூட சொல்லியதில்லை. கோவில்கள் விஷயத்தில் ஓஷோவின் "மறைந்திருக்கும் உண்மைகள்" என்ற நூலை ஒரு முறை படித்து பாருங்கள். அதில் ஓஷோ விக்கிரக ஆராதனை, கோவில்கள், புண்ணியதலங்கள்,ஜொதிடம் பற்றி கூறியுள்ள கருத்துக்களை படியுங்கள். அவற்றின் மீதான கருத்தை ஒரு பதிவாகவே போடலாம்.

சதுர்வித வர்ண பேதம் பற்றியும் சித்தர்கள் ,வேமனா, வீர பிரம்மேந்திர ஸ்வாமிகள் (தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ்) , ஆகியோர் பெரியார் போன்றே புரட்சி கர கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

பிரம்மனின் பல்வேறு அங்கங்களிலிருந்து சதுர் வித வர்ணத்தார் பிறந்ததாகதான் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிலுள்ள உண்மை மறைக்க ப்பட்டுவிட்டது. படைப்பவனே பிரம்மா. அதாவது உடலுறவில் ஈடுபடும் ஆணே பிரம்மன். வீரியம் நழுவும்போது தலை, தோள், வயிறு,பாதம் ஆகிய பாகங்களில் ஏதோ ஒரு பாகத்திலிருந்து ஒரு ஒளி சென்று வீரியத்துடன் சேரும் . அது புறப்பட்ட அங்கத்தை பொருத்து பிறக்கும் குழந்தை பிராமண், ஷத்திரிய ,வைசிய அ சூத்திர குணங்களுடன் பிறக்கும் என்று ஒரு தியரி உள்ளது. இதன் படி ஒரே தந்தைக்கு வெவ்வேறு வர்ண குணங்கள் கொண்ட பிள்ளைகள் பிறக்கலாம். ஆனால் அக்காலத்தில் கலப்பு திருமணங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பதால் மேற்படி குணங்கள் ஜீன்களின் வழியே அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.

தாங்கள் இதுவரை எழுதிய பதிவுகள் எல்லாமே பெரியார் சிந்தனைகளின் மீள் பதிவே. தாங்களோ அ தங்களை சார்ந்தவர்களோ ஒரு புதிய ஆராய்ச்சியை துவங்க வேண்டும். நாடி ஜோதிடமாகட்டும், ஜோதிடமாகட்டும், விக்கிரக வழிபாடு ஆகட்டும், தியானமாகட்டும், வாஸ்து ஆகட்டும் புதிதாக ஆராய வேண்டும் .குறைந்த பட்சம் இது தொடர்பான ஆத்தன்டிகேட்டட் பெர்சன்சை பேட்டி கண்டு , பல்லாயிரக்கணக்கான மக்களை (மேற்படி விஷயங்களில் இறங்கி பலன் பெற்றவர்கள், பெறாதவர்கள்,வாழ்வை இழந்தவர்கள்) பேட்டி கண்டு எழுத வேண்டும்.

மூட நம்பிக்கையாளர்கள் "இது பலான வேதத்தில் உள்ளது/பலான சாமியார் சொன்னது/எங்கள்ள இதான் வழக்கம்" என்று கண் மூடித்தனமாக சொல்லிவிடலாம். ஆனால் தங்களை போன்ற பகுத்தறிவு வாதிகள் மூட நம்பிக்கையாளர்களை போல "இது பெரியாரின் பலான பேட்டியில் உள்ளது/பலான தொகுப்பில் உள்ளது "என்று எழுதிக்கொண்டே போவது நல்லதல்ல.

மேலும் மூட நம்பிக்கைகள் என்று தாங்கள் சாடும் விஷயங்களில் 70 சதம் வரை கால,தேச,வர்த்தமான மாற்றங்களால் உண்மையிலேயே மூட நம்பிக்கைகளாகிவிட்டன. உ.ம் வெள்ளிக்கிழமை விளக்கு வைத்தபிறகு குப்பையை வெளியில் கொட்டக்கூடாது. லட்சுமி வெளியேறிவிடுவாள். அக்காலத்தில் பெண்கள் வெள்ளியன்று எண்ணெய் குளியல் செய்வது வழக்கம். நகைகளில் எண்ணெய் இறங்கிவிடும் என்று கழட்டி வைப்பார்கள். அவற்றின் திருகாணி அ மூக்குத்தி இத்யாதி சிறு பொருட்கள் தவறியிருக்கலாம் . பெருக்கித்தள்ளப்பட்டு குப்பையில் இருக்கலாம். அக்காலத்தில் மின்சாரம் இன்மையால் மினுக் மினுக் விளக்குகள் தானே . மேற்படி குப்பை வெளியில் போய்விட்டால் தேடுவது கடினம். வீட்டிலேயே இருந்தால் கோழி மாதிரி கிளறி எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் மின்சாரம் வந்து விட்டதால் இந்த நம்பிக்கை உண்மையிலேயே மூட நம்பிக்கையாகிவிட்டது. மின்சாரம் இல்லாத குக்கிராமங்களில் ? இன்றும் பின் பற்ற வேண்டிய ஒரு விஷயம்தான்.

தாங்கள் இது போன்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வதாயிருந்தால் எனக்கிடும் கட்டளையை பெரியாரின் கட்டளையாக பாவித்து உதவ காத்திருக்கிறேன்.