Wednesday, October 21, 2009

சந்திப்பு: 2

முன் கதை சுருக்கம்:

இருபது வருடங்களுக்கு முன் திருச்சியில் சந்தித்த ரா.கியை மீண்டும் சித்தூர் பஸ் நிலையத்தில் சந்திக்கிறேன்.சித்தப்பாவுடன் சொத்து தகராறு காரணமாய் சொந்த ஊர் விட்டு வந்திருக்கிறான். ஏற்கெனவே 1989 ல் தஞ்சம் புகுந்து மொக்கையான ரா.கி.என் அழைப்பின் பேரில் வீட்டுக்கு வருகிறான்.

ஆனாலும் உள்ளூர உதறல் தான்.என் மனைவி இந்த உலகத்தின் பிரதி நிதி. என் பார்வையில் எதெது புனிதமானதோ அதெல்லாம் அவளுக்கு அசூயை தருவனவாகும்.
என் பார்வையில் எதெது முக்கியமானதோ அதெல்லாம் அவளுக்கு ..ரோடு சமம். சரி பார்த்துக்குவம். எப்படியும் ஆஃபீஸ் ரூமுனு ஒன்னு இருக்கு அதுல தங்க வச்சுட்டா போவுது என்று ஒரு தைரியம்." லக்கேஜெல்லாம் எங்கே ரா.கி.?" என்றேன் . "என்னத்த லக்கேஜு . கட்டின துணியோட வந்துட்டன்" என்றான். பஸ்ஸ்டாண்டிலிருந்து பொன்ன்னியம்மன் கோவில் தெருவழியாக சர்ச் தெருவில் நுழைந்து ராமர் கோவில் தெருவில் புகுவதற்குள் பத்து பனிரெண்டு " நமஸ்காரம் ஸ்வாமிகள்" "ஹாய்கள்" "ஹலோக்கள்". வீடு வந்து சேர்ந்தோம். ரா.கி.கேட்டே விட்டான் "என்ன முருகேசன் எங்க ஏரியா எம்.எல்.ஏவுக்கு கூட இத்தனை மரியாதை கிடைக்காதே ..அப்படி என்னதான் பண்றிங்க" ."எல்லாம் நிதானமா பேசிக்கலாம் ரா.கி. முதல்ல சாப்பிட என்ன இருக்கு பார்ப்போம்." என்றேன்.

ஏதோ நல்ல காலத்துக்கு அடையாளம். மனைவி நோயாளி வேடத்தில் இல்லாதிருக்கவே சூடான தோசையும் ஊறுகாயும் கிடைத்தது . ராகி. கைகால் கழுவி சாப்பிட்டான். பக்கத்து அறைக்கு போனோம். அதுதான் ஆஃபீஸ் ரூம் என்று என் குடும்பத்தாரால் குறிப்பிடப்படுகிறது. பாதி ஆஸ்பெஸ்டாஸும்,பாதி ஓடு வேய்ந்ததுமாக நடுத்தர வர்கத்து அட்டாச் டு பாத்ரூம் சைஸுக்கு ஃபேன், ட்யூப்லை இத்யாதி வசதி கூட இல்லாது கிடந்த அதை கண்டதும் ரா.கி. லேசாய் நொந்து போனது புரிந்தது. " டோண்ட் வொர்ரி ரா.கி. ஒரு வாரத்துல ஏற்பாடு பண்ணிக்கலாம்' என்றேன். இதையே பல பேரிடம் 9 மாதமாய் சொல்லிக்கொண்டிருப்பது ஞா வந்தது. என்ன செய்ய கொசுவர்த்தியும் , குடிக்க தண்ணிரும் கொடுத்து வாடகை வீட்டிலான கழிவறை நிபந்தனைகளையும் சொல்லி விட்டு பிரிந்தேன்.

மறு நாள் நான் எழுந்தபோது காலை மணி 9 .முதலில் எழுந்த எண்ணம் " பாவம் ரா.கி." என்பதே. ஆஃபீஸ் ரூம் வந்து பார்த்த போது ரா.கி. குளித்து ,பட்டையடித்து பூஜை கூட முடித்து தெலுங்கு பேப்பரில் படம் பார்த்துக்கொண்டிருந்தான்.அவனிடம் தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டு அவசரமாய் பல் துலக்கி வாங்க ரா.கி டீ சாப்பிட்டு வரலாம் என்றேன். மார்க்கெட் சவுக் சென்றோம். டீ சாப்பிட்டு நான் சிகரட் பற்ற வைத்து கொண்டேன்.

"என்ன ராகி ! இந்த சொத்து பிரச்சினை 1989லயே வெடிச்சு தீர்ந்துருச்சுல்லயா "
" நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன். ஏதோ தினமலர்ல வேலை தைரியத்துல வீட்டை மராமத்து பண்ணிருவம், வீட்டுக்கு பக்கத்துல காலியிடம் இருந்தது. அதுல சின்னதா கடைகட்டி வாடகைக்கு விடலாம்னு இறங்கினேன். சித்தப்பன் வெட்ட வரான். அந்தாளு என் அப்பா மேல விரோதத்தை எல்லாம் என் மேலே தீர்த்துக்க பார்க்கிறான். அப்பா காலத்துலயே பாகபிரிவினை ஆயிருச்சு. மறுபடி 1989 ல இருந்ததுல பாதிய வாயடிச்சு பிடுங்கிகிட்டான். இப்ப அந்த காலியிடமும் தனக்குத்தானு வம்படி பண்றான். ஊர் பெரிய மனுஷன் எல்லாம் அவன் பக்கமே பேசரான்." ஏதோ கெட்டுப்போயிட்டான். அவனுக்கு வயசாயிருச்சு நீ தான் விட்டுக்கொடுத்து போகனுங்கறாங்க. என் மனைவிக்கு என் சித்தப்பன் கேரக்டர் இந்த மாதிரினு இது வரைக்கும் தெரியாது. அவன் கொடுத்த ரப்சர் தாங்காம குழந்தையை தூக்கிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாள் . நான் ஸ்டேஷன்ல பிராது கொடுத்தேன்
எஸ்.ஐ. நான் வேணம்னா அந்தாளை 18 நாள் ரிமாண்டுக்கு அனுப்பிர்ரன் . நீ வீடு கட்டுங்கறான். வெளிய வந்து வெட்டினா பிராது கொடுக்க நான் உயிரோட இருக்கனுமே ."

எனக்கு ரா.கி ஒரு வெள்ளை சாம்பார் என்று தெரியுமே தவிர இந்த அளவுக்கு பயங்காளி என்று தெரியாது. "இப்ப என்ன பண்றதா உத்தேசம் ரா.கி "என்று கேட்டேன். அவன் "மூதாதையர் சொத்து மூதேவி சொத்தும்பாங்க பேசாம அந்த ஊரையே விட்டுரலாம்னு இருக்கேன்" என்றான்.

"அது சரிப்பா மனைவி ?"

"ஏற்கெனவே அவ பார்வைல நான் டம்மி பீஸு. இப்போ இந்த சீன் வேற நடந்துருச்சா .ஜென்மத்துல அவள் முகத்துல விழிக்க கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்"

"சரி சரி நீ ஏதோ பதட்டத்துல இருக்காப்ல இருக்கு . நீ இருக்கறப்பவே இத்தனை ரப்சர் பண்ண சித்தப்பன் உன் வீட்டையும் ஆக்குப்பை பண்ணிட்டா என்ன பண்றது ?"
"எப்படியோ ஒழிஞ்சு போவட்டும்..அவனுக்கும் ஒரு சாவு வராதா . எப்படியும் பெண்டாட்டி பிள்ளைக்குட்டி ஏதுமில்லாத தனிக்கட்டை. மொடா குடியன். "

1989 ஐ விட ராகியின் கேரக்டர் எனக்கு பெட்டராகவே புரிந்தது.