நான் பதறிவிட்டேன். "சார் சார் ! நீங்க வேற இந்த பிரயாணத்துல நீங்க செய்ய நினைத்தது எதுவுமே செய்ய கூடாதுதான் அதுக்காக ஒரு சி,எம் ஹெலிகாப்டரோட காணாம போறதெல்லாம் லொள்ளு சார். நீங்க இத்தனை வருசமா கொஞ்சமாவது நிம்மதியா வாழவச்ச சனம் தான் அல்லாடும். பேசாம எமர்ஜென்சி லேண்டிங் பத்தி மாவட்ட எஸ்.பி க்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லுங்க . நெஞ்சு வலினு சீன் போடுங்க ..ஆஸ்பத்திரில 15 நிமிஷம் இருந்துட்டு ப்ரோக்ராம் கேன்சல் பண்ணிக்கிட்டு ஊரைப்போய் சேருங்க ..இன்னும் நேரமிருக்கு பார்த்துக்கலாம்." என்றேன். மறுபடி கண்மூடி சிந்தித்த ஒய்.எஸ் . ஓகே இது பெட்டர். என்றார்.
"சரி உன்னை மறுபடி எப்படி பிடிக்கறது?"
" இங்கே இருக்கிற உங்க எம்.எல்.ஏவுக்கு ஒரு ஹிண்ட் கொடுங்க சார் வாரி பிடிச்சு பார்சல் பண்ணிரமாட்டாரா"
"அதுவும் கரெக்டுதான்" என்ற முதல்வர் எனக்கு விடைகொடுத்தார். பின் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு . காட்டில் இறங்கியது. நெஞ்சுவலி காரணமாய் நிகழ்ச்சிகள் ரத்து என்று நான் வேலை செய்யும் பத்திரிக்கைக்கு செய்தி அனுப்பிவிட்டு வீடு போய் சேர்ந்தேன்.
மாலை நேரம்.
நான் சி.டி.ட்ரைவை தியாகம் செய்தும், யு.எஸ்.பி.கார்ட் போட்டும் தகராறு செய்து கொண்டிருந்த யு.எஸ்.பி போர்ட்டலை நோன்டிக்கொண்டிருந்த போது "இக்கட முருகேஷன் இல்லு ஏதிம்மா" என்ற விசாரிப்பு காதில் விழுந்தது. அவசரமாய் வெளியே வந்தேன். எம்.எல்.ஏ வின் பி.ஏ.வை பார்த்து " நான் தான் சார் .. என்ன விஷயம் என்றேன்"
"தம்பி , சுமோ பிள்ளையார் கோயில் கிட்டே இருக்கு பத்து நிமிஷத்துல ரெடியாயிருங்க ..எம்.எல்.ஏ.வோட ஹைதராபாத் போகனும்" என்றார் அவர்.
இங்கு எங்கள் எம்.எல்.ஏ வை பற்றி சில வரிகள். அவர் தெலுங்கர். ஜாதியில் ரெட்டி. ஆனால் அவரது சினேகங்கள் மட்டும் பல பட்டறை. அவருடைய இளமையில் தமிழனும், வன்னியர் வகுப்பை சேர்ந்தவனுமான ராமசந்திரன் என்பவன் கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த போது அவனது ஆதிக்கத்தை கல்லூரி தேர்தல்கள் முதல் அனைத்து தளங்களிலும் எதிர்த்தவர். மேற்படி ரௌடிக்கு அன்றைய பெரிய மனிதர்கள், ஆளுங்கட்சி சப்போர்ட். அனைத்தையும் மீறி ரவுடிகளை நாக் அவுட் செய்து மூன்று முறை எம்.எல்.ஏ. கடந்த முறை சொற்ப வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு இம்முறை மீண்டும் வெற்றி. அரசியல் கிரிக்கெட்டில் ஃபோர். வீடு கட்டமஞ்சியில். ஷீரட் சாயிபாபாவுக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார். நகராட்சியும் காங்கிரஸ் பிடியில். வீடு, கோவில், நகராட்சி அலுவலகம் மிஞ்சிப்போனால் க்ளப் தான் எங்கிருந்தாலும் தன்னை சந்திக்க வருபவர்களை சந்தித்து கொண்டே இருப்பார். அவர் ஊரில் இல்லை என்பது தலைப்பு செய்தி ஆகிவிடும். அந்த அளவுக்கு மக்களோடு இரண்டற கலந்தவர்.
ஏற்கெனவே பெட்டி படுக்கை தயாராக இருந்ததால் பரபரப்புக்கு இடமின்றி முகம் கழுவி பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டேன். பி. கோயிலருகே சுமோவில் ஏறும்போது பெண்கள் உட்பட சனம் குறு குறு என்று பார்த்தனர். அங்கிருந்து ஷீரடி சாயி பாபா கோவில். எம்.எல்.ஏ வுக்கு ஒரு வணக்கம். " என்ன புறப்படலாமா?" என்றார் அவர்.
எம்.எல்.ஏவின் ஸ்கார்ப்பியோ கார் புது மாலையுடன் காத்திருக்க, அதன் பின்னே ஒரு சுமோ .கன் மேன்கள் ஸ்கார்ப்பியோவில் பின்னால் ஏறிக்கொள்ள ( இவரை போட்டு தள்ள 25 வருடமாய் பல முயற்சிகள் . அதிலும் 2007 லேயே இரண்டு முறை கொலை முயற்சி நடந்ததில் 2+3 செக்யூரிட்டி ) என்னை தன் பக்கத்தில் உட்கார சொன்னார் எம்.எல்.ஏ. நான் "சுமோல ஏறிக்கறேன் சார்" என்றேன். எம்.எல்.ஏ முகத்தில் சுருக்கம். "
"முருகேஷ் ! சி.எம் எல்லா விஷயத்தையும் சொன்னாருப்பா! அதை பத்தி சீரியசா பேசனும்.. என்ன உனக்கு சிகரட் புகை பிடிக்காதா ? "(அவர் செயின் ஸ்மோக்கர்) ."
"ரொம்ப பிடிக்கும் அதான் பிரச்சினை"
"தூத்தேறி..அவ்ளதான அடிச்சு விடுப்பா.. கிங் அடிப்பே இல்லே !"
" நம்ம ரேஞ்சு பர்க்லிதான் சார்"
"அட இன்னிக்கு அடிப்பா. ரொம்பதான் தகராறு பண்றே. நானே டென்ஷன்ல இருக்கேன். ஏறு ஏறு.."
வண்டிகள் புறப்பட்டன. பக்கத்திலிருந்த எம்.எல்.ஏவை கிட்ட பார்த்தேன். இதுதான் முதல் முறை இத்தனை அருகில் பார்ப்பதும். இவரோடு பயணம் செய்வதும்.
"ரேய் ! டேப் ஆன் செய்ரா" என்று ட்ரைவருக்கு உத்தரவிட்டார். கன் மேன் , பி.ஏ.உட்பட அனைவரும் ஹெட் போன் களை எடுத்து காதுகளில் பொருத்திக்கொண்டனர்.