Friday, October 16, 2009

1989 - 2009 நண்பர்களிடையில் ஒரு சந்திப்பு

பழைய தமிழ் சினிமா மாதிரி 20 வருடத்துக்கு பின் ராமகிருஷ்ணனை மீண்டும் சந்திப்பேன். அதுவும் சித்தூர் பஸ் நிலையத்தில் சந்திப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் அவன் ஏதும் என் பால்ய சினேகிதன் அல்லன். திருச்சி திருப்பராய்த்துறை மடத்தில் சந்தித்தோம். நான் கடிமணம் புரிந்த காதலி பிரிக்கப்பட்ட கோபத்தில் சேவை நிமித்தம் சென்றிருக்க ரா.கி லோக்கல் ஆசாமி. லால்குடியை சேர்ந்தவன் . அங்கு வேலை பார்த்து வந்தவன்.

முதல் சந்திப்பிலேயே ஒருவரை ஒருவர் எழுத்தாளர்களாக அறிமுகம் செய்துகொண்டோம். மடத்தின் அவுட் டேட்டட் முறைகள் எனக்கு ஒத்துவராது போக நான் ஊரிலிருந்து எம்.ஓ வந்தபிறகே கிளம்ப வேண்டிய நிலையில் தலைமை சாமியார் "விருப்பமில்லேனு ஆன பிறகு ரெண்டு மூணு நாள் கழிச்சு போவதேன்..இப்பவே கிளம்பலாமே என்றுவிட ராகியும், மற்றொரு முதிய பேயிங்க் கெஸ்டும் தான் சார்ஜுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

சில மாதங்களிலேயே ரா.கி. தன் சித்தப்பாவுடனான நில தகராறு காரணமாய் உயிர் பயத்துடன் சித்தூர் வந்துவிட்டான். அது நான் டிகிரி முடித்து இரண்டு வருடமாகி, காதல் , திருமணம் , மனைவி பிரிப்பு ,வேலையின்மை இத்யாதி காரணத்தால் படு மொக்கையாக இருந்த கால கட்டம் . இரண்டு மூன்று நாட்கள் மாடியில் என் அறையில் தங்கியிருந்த ரா.கி நிலைமை புரிந்து சார்ஜுக்கு ஏற்பாடு செய்தால் ஓடியே விடுகிறேன் என்று கேட்க கையில் பணமோ , கடன் கொடுக்க ஆளோ அருகில் இல்லாது முன்னொரு காலத்தில் (1987-89) நான் டெம்ப்ரவரி செக்ஷன் ரைட்டனாக வேலை பார்த்த கருவூல அலுவலக நண்பர்கள் இருவருக்கு சீட்டு(கவி) கொடுத்து அனுப்பினேன். அதில் ஒருவர் மட்டும் காசு கொடுக்க ராகி திருச்சிக்கு ஜூட். பின் சில காலம் கடித தொடர்பு மட்டும் தொடர்ந்தது. பிறகு அதுவும் நின்று போனது.
" நீ ...நீங்க ராம கிருஷ்ணன்தானே !"
"ஆமாம் நீ..நீங்க !"
" நான் முகேஷ்.. 1989 ல திருச்சி, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண மடத்துல சந்திச்சோம்"
"அட ஆமாம் ..அதுக்கப்புறம் நானும் ஒரு தடவை சித்தூர் வந்திருந்தேன்.. இப்ப எப்படி இருக்கிங்க..என்ன பண்றிங்க ?பாட்டி,அப்பா,அண்ணனுங்க தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா ?"
" ஏதோ ஓடுது வண்டி. நீங்க தினமலர்ல நிருபரா இருக்கறதா ஒரு தடவை லெட்டர் போட்டிருந்திங்க..இப்பவும் அதுல தானே இருக்கிங்க"
"ஆமாம் ஏதோ இருக்கேன். நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை . தம்பிய தவிர எல்லாரும் செத்துப்போயிட்டாங்க.
" அடடா எப்படி ?"
"அப்பாவுக்கு மூக்குப்பொடி பழக்கமிருந்துச்சு தெரியுமில்லே. மூச்சுத்திணறல் அதிகமாகி பதட்டத்துல ஹார்ட் அட்டாக் வந்து போயிட்டார். பெரிய அண்ணனும் ஹார்ட் அட்டாக் தான். சின்ன அண்ணனுக்கு ப்ளட் கேன்சர்."
"தம்பி என்ன பண்றார்?"
"எல்.ஐ.சி லயிருக்கான். வேலூர்லதான் இருந்தான். இப்போ எங்க ட்ரான்ஸ்ஃபர் ஆனானோ தெரியாது"