Tuesday, October 27, 2009

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ