காதல் திருமணங்களை கந்தர்வ மணம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வகை திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றும் கூறுகிறது.
ஆனால் இன்றைய காதல் திருமணங்கள் விட்டகுறை தொட்ட குறையாக போன ஜென்ம பந்தங்களின் தொடர்ச்சியாக ஏற்பட்டால் இவ்விதி பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால் இப்போதைய காதல்களில் 60 சதவீதம் இனக்கவர்ச்சி, காதலன்/காதலியின் பொருளாதார வளர்ச்சி கருதியே ஏற்படுகின்றன. எனவே இவற்றிற்கு கூட பொருத்தம் பார்த்து மணப்பதே நல்லது.
சொந்தத்தில் திருமணம் குதிரும்போது பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றொரு பிரச்சாரமும் உள்ளது. (ஏண்ணே சொந்த அத்தை/மாமன்/அக்கா பொண்ணு விஷம் வச்சா சாகமாட்டோமா?) அது தவறு. பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும்.
திருமண பொருத்தம் என்பது ஜாதகங்களை வைத்துத்தான் பார்க்கப்படவேண்டும் .
வரன் தேட இறங்கும் முன்பே பெண்/பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.(7)
வரன் வர ஆரம்பிக்கும்போது முதலில் தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும். தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனை மணவாழ்வுக்கு மினிமம் கியாரண்டியை தரக்கூடியதாகும்.
ஜாதகங்களுக்கு ஃபவுண்டேஷன் போன்ற லக்னம்,லக்னாதிபதி நிலைகளை பார்க்கவேண்டும்.
பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்) உள்ளதா உறுதி செய்து கொள்ளவேண்டும்
இதையடுத்து பெண்/பிள்ளை ஜாதகப்படி வாழ்க்கை துணைக்கு இருக்க கூடிய லட்சணங்களாக குறித்து வைத்த மேற்சொன்ன அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும்.
ஜாதகங்கள் பொருந்திய பிறகே ஜன்ம நட்சத்திரங்களை வைத்து பொருத்தம் பார்க்கவேண்டும். இதில் பத்து பொருத்தம் பார்க்கப்பட்டாலும் ரஜ்ஜு, நாடி எனும் இரண்டு பொருத்தங்களே ரொம்ப முக்கியமானவை.
ஜாதகங்கள் நன்கு பொருந்திய பின்பு இந்த இரண்டு பொருத்தங்கள் மட்டுமே இருந்தாலும் தைரியமாக திருமணம் செய்யலாம்.ஜாதகங்கள் பொருந்தாது இந்த பொருத்தங்கள் பத்துக்கு எட்டு,ஆறு வந்தாலும் வீண் தான்.
ரஜ்ஜுப்பொருத்தம்:
ஆண்,பெண்ணுக்கு வேறு வேறு ரஜ்ஜுவரவேண்டும். ஏக ரஜ்ஜு வரக்கூடாது. மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை ரஜ்ஜு -பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
நாடி பொருத்தம்;
இதுவும் வேறு வேறு நாடி வரவேண்டும். ஒரே நாடி வந்தால் உடல் நலம் பாதிக்கும்.
அடுத்த பதிவில் திருமணத்தில் தாமதம் ஏற்பட காரணமாகும் கிரகஸ்திதிகளையும், அவற்றிற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.