வான் மழை பொழியட்டும்
ஆறு குளம் நிறையட்டும்
ஆகாச கங்கை கொணரும்
பகீரதர்கள் இன்றில்லை
கல்லணை கட்டிட கரிகாலர்கள் இல்லை
தென்னாடுடைய சிவனே உன் சிரசில்
கங்கையை சிறை வைத்து
வடக்கிருந்து வாட்டுகின்றனை.
பெண்ணடிமை மௌடீகமென்று
சந்திர மவுளீஸ்வரா அறியாயோ
கங்கையை விடுவித்து
தென்னாட்டின் தாகம் தீர்
பேரணைகள் கட்டி பாசனம் பெருக்கிடவே
நவ பாரத சில்பிகள் இல்லை
வான் மழை பொழிந்தாலன்றி - மனித
உயிர் பயிர் தழைப்பதாயில்லை
பயிர் உயிர் தரிப்பதாயில்லை
கலைமகள் பெற்றெடுத்த கடைக்குட்டி
நானிங்கு கவித் தேன் மழை பொழிய வல்லேன்
வான் மழை பொழிந்திடவே
கலைத்தாய் வாய் திறந்து நல்ல வழி சொல்லேன்
வேட்டி வரிந்து கட்டி
அரசின் வெட்டி வேலைகளை
தள்ளி வைத்து
ஜல யக்னம் புரிந்திடவே
ராஜ சேகரர்கள் இல்லை
வான் மழை பொழிந்தாலன்றி
வரப்புயர வழியில்லை
வாட்டம் ஒழிவதாயில்லை.
தரணி சிரிக்க தானழும் வான் மகளும்
கெட்டாளோ?
கருணை விட்டாளோ?
அணைக்கதவை பூட்டி வைத்து
நிலமகள் வாய் பிளக்க
அவளுக்கு உழுதுண்டு வாழ்வோர்
வாய்க்கரிசி போடவும் வழியிலாது செய்யும்
அண்டை மானில அரசர்கள்
மனமிரங்கார்
உட் சண்டை மறந்திவரே
நீர் கொணர களமிறங்கார்
வான் மழை பொழிந்தாலன்றி வையத்தோர்
ஊன் வளர்த்தல் கனவாமே.
பதவிக்கனவே உணவாய்
உன்மத்தராய் மலினத்தில் வீழ்ந்திருக்கும்
மண்ணாள்வோர்
வறட்சியால் மாள்வோர் திசையும் பாரார்
வான் மழை பொழிந்தாலன்றி
வறுமை ஒழிவதாயில்லை.
வான் மழை பொழியட்டும்
ஆறு,குளம் நிரம்பி வழியட்டும்
மேகமங்கை கருக்கட்டும்
மழை நீர் கருக்கொள்ளட்டும்.
நிலமகள் தகிப்பெல்லாம்
தன்னாலே அடங்கட்டும்