இந்த கதைகள் 100 சதவீதம் கற்பனையே என்று சொல்ல மாட்டேன். ஆனால் சற்றே முன் பின்னாக நகர்த்தி சொன்னால் கற்பனை மாதிரி தான் இருக்கும். இந்த தொகுப்புக்கு கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்ட காரணம் ரவி. இவர் என் சின்ன அண்ணன் செல்வராஜின் நண்பர். ரவியின் அண்ணன் ப்ளாக் மேக்கர். ரவி கம்ப்யூட்டர் வந்த புதிதில் ஸ்க்ரீன் ப்ரிண்டிங்குக்கு மாறி கிராஃபிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கடை வைத்தார்.இதனால் ரவி பெயருடன் கிராஃபிக் ஒட்டிக் கொண்டது. ரவியால்,ரவிக்கு,ரவி நண்பர்களுக்கு நடந்த கதைகள் என்பதால் கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
முதல் கதை பரசுராமன் கதை:
ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர்,ஏஜ் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை சில சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன்.சம்பவங்கள் ஒரு சாக்கு மட்டுமே என்ன நீங்க ரெடியா?
பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல .
சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன்.
சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேண்டுமானாலும் விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன்.
மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்து சாப்பிடுகின்றனர். பரசுவின் தாய்க்கு இரண்டு மகள்கள். ஒருவர் சாந்தி,மற்றவர் வஸந்தா. சாந்தியை காட்பாடியில் பஞ்சாயத்து துறை ஊழியரான ராமலிங்கத்துக்கு கட்டி வைத்தார்.ராம லிங்கம் சம்பளம்,கிம்பளம் என்று விரைவிலேயே வசதியாகி விட்டார்.
பரசு கதையை மீண்டும் சொல்லத் தேவையில்லை.இருந்தும் இல்லாதது போலத்தான்.இந்நிலயில் பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார்.
பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ?
பேத்திகளை குழந்தையில்லாத ரா.லி கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ?சித்தூர் வீட்டை ரா.லிங்கத்தின் மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார்.பரசு ரா.லி. கஸ்டடியில் செட்டிலாகிவிட்டான்.
ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒன் ஃபைன் மார்னிங்க தன் கால் புண்ணுக்கு கட்டுப் போட வேண்டும் என்று சொல்லி ரா.லி யிடம் பணம் வாங்கினான். நேராக தாலுக்காஃபீஸுக்கு போனான், பணம் கொடுத்தான். ரா.லி.யின் மேல் ஒரு புகார் எழுதி காட்பாடி காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டான் சித்தூர் வந்து விட்டான்.
வந்து கிராஃபிக் ரவியை சந்தித்தான்.கிராஃபிக் என்னை பரசுவுக்கு அறிமுகம் செய்தான்.