Tuesday, October 23, 2007

4. ராகு

4. ராகு
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும். சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள். இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.பரிகாரங்கள் :1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
(தொடரும்)