ஸ்ரீ ராமா !
உன் கருணை எல்லையற்றது என்பதற்கு என்னைக் காட்டிலும் வேறு ஆதாரம் தேவையா?
என்னை பார்த்ததும் 50 வயது பெண் கூட மாராப்பு சரி செய்து கொள்ளும் ஹீன நிலையில் இருந்த என்னை 14 வயது பெண் கூட ஒரு தந்தையிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நம்பி சொல்லும் நிலைக்கு கொண்டு வந்தது உன் கருணைதானே..
அந்த நாட்களை நினத்தால் இன்றும் உன் மீதான என் பக்தி இரு மடங்காகிறது. யத் பாவம் தத் பவதி என்பது போல் என்னையே ஒரு ராமனாக மாற்றியது உன் நாமம் தானே..
ஒரு நாலணா இனிப்பு கிடைத்தாலும் கழிவறையிலேனும் ரகசியமாக நானே உண்ண வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வந்த சுய நல பிசாசு நான். வருடம் இரு முறை ரத்த தானம் செய்தாலும் வேறென்னென்ன தானம் செய்ய முடியும் என்று பரபரக்க வைத்தது உன் நாமம் தானே..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உன் நாம மகிமையை சொல்லப் போன போதெல்லாம் மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தி பேச , அடடே இவ்வுலக வாழ்வின் பிரச்சினைகளை ஓரளவேனும் தீர்த்தாலன்றி இவர்களுக்கு ஆன்மீகம் போதிக்க முடியாது என்ற சிந்தனையை தந்ததும் உன் நாமம் தானே
என் நாட்டில் மீண்டும் உன் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க ஒரு திட்டம் தீட்ட வைத்ததும் உன் நாமம் தானே.. அதை அலட்சியப்படுத்திய அதிகாரிகளுடனும்,அரசியல் வாதிகளுடனும் மோதும் தெம்பை தந்தது உன் நாமம் தானே..
பிறப்பாலும்,வளர்ப்பாலும், வடிகட்டிய கோழையான என்னை நாடே..உலகமே போற்றிப் புகழ்ந்த ஒரு மாநில முதல்வரை எதிர்த்து போராடும் தீரத்தை தந்தது உன் நாமம் தானே..
ராமா..ஸ்ரீ ராமா.. இதோ இன்று அவரை மிக நெருக்கத்தில் சந்திக்கப் போகிறேன்..ஒரு நிருபனாக..
உன் நாமம் ஜபித்ததால் உன் பெயர் கொண்ட கயவரும்,கசடரும்,கழிசடைகளும் கூட எனக்கு துணை நின்ற சந்தர்ப்பங்கள் ஆயிரம்..
இதோ இவர் பெயரிலும் உன் பெயர் இருக்கிறது.. நீ ராம "சந்திர" மூர்த்தி.இவர் "சந்திர" பாபு. எப்படியாவது ஆட்சிக் கட்டிலிலேற வேண்டும் என்பது இவர் கோரிக்கை. எப்படியாவது இந்தியாவின் வறுமையை விரட்டி , ராம ராஜ்ஜியத்தை அதாவது உன் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்பது என் கோரிக்கை.
பார்ப்போம் ..உன் மனமெப்படியோ? இந்த தினமெப்படியோ?