5. குரு
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே! உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.(தொடரும்)