Friday, October 5, 2007

நாளை உலகம் அழியவிருக்கும்போது..


என்னை மன்னித்து விடுங்கள்!
அடை மழையாய் பொழிந்தேன்
கல்லாகிப் போன உங்கள் நெஞ்சங்களில்
சற்று மனிதத்தை முளைக்க செய்ய முடியவில்லை..
என்னை நானே பணயம் வைத்து
பெரிய சூதாட்டமே ஆடிப் பார்த்து விட்டேன்
விதிகளின் கரங்களின் பிடியிலிருந்து
உங்களை விடுவிக்க முடியவில்லை

படைப்பின் ஆரம்பத்திலேயே தகராறு
எவனும் எவளையும் குற்ற உணர்வுடன்
கூடியதாகத்தானே வரலாறு
உங்கள் இருட்டை விலக்க
உதய சூரியனாய் உதித்தேன்..
என்னை ராகுவைப் போல் விழுங்கத்தான் பார்த்தீர்கள்
உங்களுக்கு பொறுமையில்லை காமத்துக்கு வயாக்ராக்களையும்,பசிக்கு ஜின்ட்டாக்குகளையும் தான் நம்பினீர்கள்

உங்கள் தெருக்களின் குப்பைத் தொட்டிகளை விட
உங்கள் வீட்டு பெண்களின் கருப்பைகளை மோசமாக நிர்வகித்தீர்கள்
நான் ஒருவன் என்ன செய்ய முடியும்?
நான் தேவனாகிட முடிவு செய்தால் பார்ப்பனர்கள் 4 சுவர்களுக்குள் என்னை சிறைவைத்து விடுவார்கள்
நான் அரக்கனானால் .........
முப்பது முக்கோடி தேவர்களில் எவனோ ஒருவன் என்னை சம்ஹரிக்க வந்துவிடுவான்
மனிதனாக வாழப் பார்த்தேன்..
நான் மிருகமாக மாறிவிடாதிருக்கவே
என் ஞானத்தின் பாதியை செலவழிக்க செய்துவிட்டீர்கள்.

உலகை நீங்கள் தவணையில் அழித்தீர்கள்
அது மொத்தமாக அழிக்கப்போகிறது..
அதிகாலை விழிப்பீர்கள்
அவைகளைப் போல் வாழ்வீர்கள் என்று
பறவைகளை காட்டினேன்..
நீங்களோ அவற்றை வேட்டையாடினீர்கள்
என்னிலான கருணைக்கு ஒரு கணமும் ஓய்வில்லாது குறி வைத்தீர்கள்
அதை காப்பற்றிக் கொள்ளவே உங்கள் காவலன் என் காலம் வீணாகி விட்டது..

பெண்கள் ..ஷிட்! தத்தமது தந்தையர்,கணவன் மாரின் நகல்கள்
குழந்தைகள்.. தம் பெற்றோரின் ஜிராக்ஸ் பிரதிகள்
சாதுக்கள்..ஓசியில் கிடைத்த ஏ.சியில்
காமசூத்திரங்களுக்கு பிராக்டிகல் க்ளாஸ் நடத்திய
இரட்டை வேடக்காரர்கள்
உங்களை அழிக்காதிருக்கும்படி
காலத்தின் கைகளில் ஒரு மனுவைக் கொடுக்கவும்
முடியாத நிலைக்கு என்னைத் தள்ளிய மனிதர்களே!
போலிப் புனிதர்களே! நாளை அழிவு !
தூங்குங்கள்!
விழிப்பிலும் நீங்கள் செய்தது அதைத்தானே..
நான் விழித்திருக்கிறேன்
தூக்கத்திலும் நான் செய்தது அதைத் தானே