சமுதாயத்தில் சிலர் சில காரணத்தால் பொருளாதார ரீதியில் நாசமாகிறார்கள். நான் நாசமானதற்கு காரணம் மட்டும் தமிழ் பத்திரிக்கை ஆசிரியன் கள் தான். அதிலும் பாக்யா பத்திரிக்கை தான் என்றால் அது மிகையில்லை. வெறுமனே பாக்யராஜின் சினிமா புகழை முதலீடாக வைத்து நடந்த பாக்யா இதழில் என் கதைகள் வரிசையாக 5 வரை பிரசுரமானதும் என் சிந்தனைப் போக்கே மாறிவிட்டது. நான் எழுதியவை மேம்போக்கான கதைகள் என்று அறிவேன். எனவே தவறுதலாக கிடைத்துவிட்ட அங்கீகாரத்துக்கு உண்மையாக உழைக்க முடிவு செய்து உழைத்தது தான் தவறாகி விட்டது.
இந்த உழைப்பு கவிதாசரணில் படைத்தவன் கிடைத்தான் என்ற சிறுகதை எழுதும் அளவுக்கு போய்விட்டது. மாவட்ட கருவூல அதிகாரியான என் தந்தை நிழலிலேயே வாழ்ந்து விட்டிருந்தால் இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டேன். சமுதாயத்தை திருத்துவது என் வேலையில்லை என்று சுஜாதாவைப் போல் எழுதியிருந்தால் பையும்,வயிறுமாவது நிரம்பியிருக்கும்.
கலை மக்களுக்காக. மக்கள் பணத்தில் வளரும் கலை மக்கள் நலம் நாடவேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டதால் என் எழுத்துக்கள் பிரசுரத்துக்கான தகுதியை இழந்துவிட்டன. மேலும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு இலக்கிய கர்த்தாக்கள் தம் கதைகளில் சித்தரித்த காதல்கள்,காதலியர் எல்லாம் அவரவர் சித்த பிரமைகள் என்ற தெளிவு ஏற்பட என் மனைவி அயராது உழைத்ததில் எப்படியோ போயிருக்க வேண்டிய என் வாழ்வு * ஆப்பரேஷன் இந்தியா 2000 த்தில் வந்து நின்றது. அதற்காக உதவாக்கரை முதல்வர்கள்,பிரதமர்கள்,நீதிபதிகளுக்கு கூரியர் மூலம் அந்த திட்டத்தை அனுப்பியே முழுக்க முழுக்க திவாலானேன். ஜோதிடத்தொழில் மூலம் வரும் வருமானத்தை ஏழை மக்கள் என் திட்டம் நிறைவேற கொடுக்கும் நிதியாக கருதி செலவழித்தேன். இன்றும் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல் மற்றொருவர் இந்த பாவிகளால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது என்று தான் இந்த வலைப் பூவை எழுதுகிறேன்.
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
பீடிக் கட்டுகள் மேல் மண்டையோடு சிம்பல் போடாவிட்டால் குடி முழுகி விடாது. தயவு செய்து உங்கள் லோகோ மீது இதில் உள்ளவை எங்குமில்லை , இது எங்கள் பிழைப்பு. இதில் உள்ளவற்றை நம்பிவிடாதீர்கள், படித்ததும் மறந்து விடுங்கள் என்று ஒரு வரி பிரசுரியுங்கள். புண்ணியமாகப் போகும்.