இன்று சென்னை புறப்படுகிறேன். ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்பவன் கூட இந்த அளவுக்கு பயப்படுவானா தெரியாது. நான் மட்டும் ஒவ்வொரு முறையும் பயந்து சாகிறேன். ஏன் என்றால் ஓஷோ சொன்னது போல் சென்னை தான் என் இலக்கு போலும். அதனால் தான் சென்னை என்றாலே ஒரு பயம்,வெறுப்பு.
முதல் முதலாய் நானும் அருஞ்ஜுனை பாண்டியனும் சென்றோம். திருமணமாகாத நண்பன் ஒருவனின் அறையில் தங்கி சினிமா மீது படையெடுக்க திட்டம். நாங்கள் சென்னையில் இறங்கிய தினம் தான் அவனுக்கு நிச்சயதார்த்தம்.( த பார்ரா!). இதற்காக கள்ளக்குறிச்சி சென்று பாண்டியனின் மனைவியை அங்கு விட்டு விட்டு சென்னை போனதும் அங்கு அதிரடி படையெடுப்பு நடத்தியதும் தனிக் கதை.அப்போது பாக்யாவில் 5 கதைகள் வரை பிரசுரமாகியிருந்ததால் ஒரு தைரியம். சங்கிலி முருகனுக்கு கதை சொல்லியது ஒரு சாதனை.
பின்பு ஒருமுறை சென்னை வானொலி நிலையத்திலிருந்து தந்தி வந்ததால் செல்ல வேண்டி வந்தது. நான் அனுப்பிய படைப்புகள் காணாமல் போன சுப செய்தியை எனக்கு நேரில் சொல்லத்தான் தந்தி என்று அறிந்தது தனிக்கதை.
அவ்வப்போது சென்னை நண்பர்கள் ஜோதிடம் பார்க்க அழைப்பதும் என்னை அடை காத்து பஸ் ஏற்றிவிடுவதும் ஆரம்பித்தப் பிறகுதான் சென்னை பயம் சற்று குறைந்தது.