Saturday, August 11, 2007

என்னைப்பற்றி அறிய

என்னைப்பற்றி அறிய தமிழ் வலையுலகம் காத்திருக்கிறது என்று கூறமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் பாலகுமாரனின் இரட்டை வேடத்தை ஆர்குட்டில் வெளிப்படுத்திவிட்டு என்னைப்பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது. அதனால் தான் முதலில் நான் யார் என்பதை சொல்லிவைக்க முடிவு செய்துவிட்டேன். இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.

"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. " (இதே வாதத்தை என்னால் விமர்சிக்கப் படவிருக்கும் பிரபலங்களும் முன் வைக்கலாம் . அது அவர்கள் சவுகரியம்.)

பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..

என் இலக்கிய உலக பிரவேசம் 1987 ல் என் 20 ஆவது வயதில்தான் ஆரம்பித்தது. முதல் சிறுகதை அந்த நாளில் பெத்த பெயர் கொண்டிருந்த கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் பிரசுரமானது.(முளைச்சு மூணு இலை விடலை) எந்த காலத்திலும் தேவைக்கு அதிகமாக உழைத்து (ஓவர்) நஷ்டப்பட்டிருக்கிறேனே தவிர சோம்பலுக்கு என் விலாசம் தெரியாது.

(நிறைய பேருக்கும் தெரிவதில்லை அடிக்கடி வீடு மாற்றிவிடுவதால்) 1990 வரையில் பிரசுரமான கதைகளின் எண்ணிக்கை 5 தான். பிரசுரித்த பத்திரிக்கைகள்: பாக்யா,கல்கி,வாசுகி,உதயம்,கவிதாசரண். 1991-ல் என் எதிரிகளின் தவத்துக்கு மெச்சி இறைவன் அவர்களுக்கு கொடுத்த வரமாய் என் மனைவி என் வாழ்வில் பிரவேசித்தாள். அது எனக்கு சாபம் என்று அவர்கள் மயங்க , சதிகாரனான(மாகிர்-இசுலாமிய 99 போற்றிகளில் ஒன்று) இறைவன் அதையே எனக்கும் என் தாய் நாட்டுக்கும் ஒரு வரமாக்கி விட்டான்.

எனக்கு திருமணமான பிறகுதான் பத்திரிக்கைகள்,இலக்கியங்கள் காட்டும் உலகமும்,பெண்ணும் யதார்த்தத்தில் இல்லவே இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன். பாலகுமாரன் தன் கதைகளில் வீடு முக்கியம்,மனைவி முக்கியம் என்று புலம்பும்போதெல்லாம் எனக்கு அல்ப சங்கியைக்காக இறைவன் படைத்த பாகங்கள் எல்லாம் எரிய இதுதான் காரணம்.

இத்தனைக் காலம் நான் இருட்டில் இருக்க என் ஏழ்மையை காரணமாக சொல்லவே முடியாது. லக்சரி என் வாழ்வில் கிடையாது. ஒட்டகத்தைப் போல் ,பாலைவன தாவரத்தைப் போல் கிடைத்த போது புசித்து, கிடைக்கதபோது பசித்து வாழ்ந்தேன்.

என் குரள் வளையை நெறித்த கீழ்காணும் பிரமுகர்களை விட ஆனந்தமாகவே வாழ்ந்தேன். என்னிடத்தில் இருந்த விலை உயர்ந்த ஒரே பொருள் நான் தான் என்பதை இந்த உலகத்தினரை விட முன்பாகவே உணர்ந்து கொண்டேன். என்னை ப்ரமோட் செய்து கொள்ள கிடைத்த சின்னவாய்ப்ப்பையும் நான் விட்டதில்லை. அதற்கு என் ஏழ்மை தடையாக இருக்க அனுமத்ததுமில்லை.


என் இருண்ட காலத்துக்கு காரணமான பிரமுகர்கள்+அவர்களுடனான என் அனுபவங்கள் வருமாறு:

தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,

என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.

தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை தொடரை பாதியில் நிறுத்திய ஆன்மீகம் மாத இதழின் ஆசிரியர்,

என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் இப்படி எத்தனையோ பேர்,எத்தனையோ துரோகங்கள்..

அவர்களின் பெயர்கள் மட்டும் இங்கே...

ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம்,
திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,
சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,
தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,
பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,
அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,
மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம்,
ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன்,
வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!)
எழுத்தாளர் ராஜேஷ் குமார்,
இப்படி எத்தனை எத்தனை பிரபலங்கள்..எத்தனை எத்தனை துரோகங்கள்..மொத்தத்தையும் இங்கே கொட்டப் போகிறேன்..


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.