Sunday, August 19, 2007

சந்திரனின் சோதரியே!


சந்திரனின் சோதரியே!
எனைச் சற்று ஆதரியேன்.
பாற்கடலில் உதித்தாயாம்(திருமால்)
தன் மார்பில் பதித்தாராம்
வாழ்வில் இழந்தவை ஆயிரம்
பெற்றவை ஆயிரம்
உன்னுறவு வாய்க்கவில்லை
முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை
கல்வி,செல்வம் கூடவில்லை
வறுமை என்னோடு ஊடவில்லை
செந்தாமரைப் பூவாசம் புரிகின்ற தேவி!
உனை வேண்டாத மாந்தரில்லை மண்ணில்
இன்னும் என்ன வேலை விண்ணில்
நீயும் எமை சேர துடியாய் துடிக்கின்றாய்
அந்தோ அந்தகரே உன் வரவை தடுக்கின்றார்
பாரில் மாதா விரும்பாத மகவுண்டு இம்மண்ணில்
பேரனை விரும்பாத பாட்டி உண்டோ ம(வி)ண்ணில்
நான் கலைமகளின் பிள்ளை
அவளொ நின் பிள்ளையின் கிள்ளை
பாட்டி நீ எனக்கு
பரவசம் இலையோ உனக்கு
பேரன் அருகிருப்பின் வயது கூடுமென்று
தயங்குதல் வேண்டாம் தேவி
அமுதுண்ணும் அமரர்க்கே வயதும் கூடுமோடி
நீ எம் இல்லம் சேருதற்கே ராஜபாட்டை போட்டு வைத்தேன்
இன்றைய சீர்கேட்டை சீராக்க திட்டமிட்டேன்
கலியுகம் என்பதாலோ? எந்தன் கலியாலோ?
ஆயிரம் தடை வந்து
முதுகெலும்பை முறிக்குதம்மா.,
வையத்து நாடுகளில்
போர் விதைக்கும் நாடொன்றால்
நாடெல்லாம் காடாச்சு (ஏழை)
பாடு பெரும் பாடாச்சு
தான் செழிக்க தரணியிலே போர் பலவும் திணிக்குதம்மா.
.நல்லுறவை துணிக்குதம்மா
தன்மானம் தாக்குண்டால்
எவரேனும் கொதித்தெழுவர்
எரியூட்டி ஊதிவிட்டு
கொதிக்குதே கும்பி என்று
எதிர்ப்புக்கு மதச்சாயம்
பூசி மழுப்புகின்றார்
உலகறிந்த ரகசியத்தை
ஊரில் சிலரேனும்தட்டிக்
கேளாக்கால்அழிவுப்பாதை மீளாக்கால்
செல்வத்தின் தேவதையே
நின் மூத்தவள் முடியிழப்பதெப்போ?
மக்கள் வாழ்வெல்லாம் வறண்டேத் தான் கிடக்க
சேனை பெருக்குகின்றார்.வீணை மீட்டுகின்றார்
மக்களாட்சி பெயர் சொல்லி
லட்சங்கள் முதலிட்டு
கோடிகள்ஈட்டுகின்றார்.
குடிநீரும் விலையாச்சு
குடிகள் நிலை இலையாச்சு
குடக்கூலி உசந்தாச்சு
குடித்தனம் கசந்தாச்சு
வேலை கிடைப்பதில்லை
கிடைத்தால்கூலி கிடைப்பதில்லை
சிந்திய குருதியிலே பாதியேனும் வருவதில்லை பணமாக
அம்மா நீ அருள் புரிந்தால்
ராஜ பாட்டையிலே உனை தேரேற்றி அனுப்பிடுவேன்
ஊர் தோறும் , வாசல் தோறும்
வலம் வரச் செய்திடுவேன்
கழிவறையில் உனை புதைக்கும்
புல்லரை நான் புதைப்பேன்
அம்மா நீ கண் பாரு
பாரெலாம் பரவாதோ உன் பெயரன் என் பெயரே
என் பேச்சு விலை போனால்
அம்மா நின் ஆட்சிஅகிலத்தில் பரவிவிடும்