Sunday, May 9, 2010

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி

" ஹும் நேத்து எனக்கு  சிவராத்திரி" , "அய்யய்யோ! அப்ப இன்னைக்கு உனக்கு  வைகுந்த ஏகாதசினு சொல்லு"  ஏனோ தூங்காத இரவுகளை  இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.  நோயாளி கூட "நேத்து தாம்பா அதுவும் விடியற்காலம் தான் அப்படி கண் அசந்தது. ஆனா நல்ல தூக்கம்"  என்கிறார். அசந்தது கண்ணா மனசா?

மனிதர்கள் ஏன் தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். தூக்கம் என்பது முதல் இரண்டு மணி நேரம் தான் படுக்கையில் வீழ்த்தப்பார்க்கிறது. அதற்கு பின் "எப்படினா ஒழி" என்று விட்டு விடுகிறது. 

தூக்கத்திற்கு மனிதர்கள் இத்தனை முக்கியத்துவம் தருவது அது தரும் ஓய்வுக்காகவா ? புத்துணர்ச்சிக்காகவா? இல்லை விழிப்பிலிருந்து தப்பி கனவுலகில் சஞ்சரிக்கவா ?

மனிதர்களுக்கு யதார்த்தத்தின் மீது ஏன்  இத்தனை கசப்பு. அதை சிக்கலாக்கியது தம் விழிப்பே என்ற உள்ளுணர்வால் தான்  விழிப்பிலிருந்து விலகவே தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்களா?

ஒரு இரவு தூங்காவிட்டால் மறு நாள் பகல் 12 க்கெல்லாம் கண் முன்னே சிலந்தி கூடு கணக்காய்  கோடுகள் விழுகின்றன. கண்கள் எரிகின்றன. கண்கள் பஞ்சடைத்து, கன்னம் ஒட்டிப்போய் சில சமயம் உதறலே வந்துவிடுகிறது. மதியம்   கர்ட் ரைஸ் அடிச்சுட்டு குடு குப் என்று படுக்கச்சொல்கிறது. உயிர் கடிகாரம் டிஸ்டர்ப் ஆகி மறு நாள் இரவும் தூக்கம் வர மறுக்கிறது.

ஏறக்குறைய உடலுழைப்பே இல்லாத போதும் டாண் என்று தூக்கம் வருவது எப்படி புரியவில்லை. கொலுத்து வேலை செய்பவர்கள் காலை 5.30 அ 6 க்கெல்லாம்  சவுக்கில் வந்து கூடி விடுகிறார்கள். மாலை 6 வரை உடலால் உழைத்தும் ஊட்ட போய் சேரலாம் என்று நினைக்காது மீண்டும் அதே சவுக்கில் கூடுகிறார்கள்.ஏன் புரியவில்லை.

ஹ்யூமன் மைண்டை சைக்காலஜி நீள வராந்தாவில்  மூன்று அறைகள் கொண்ட வீடாக கூறுகிறது. மனித ப்ரக்ஞை முதல் அறையிலிருந்து தான் உலக விவகாரங்களை கவனிக்கிறது .

" என்ன மனைவிக்கு அபார்ஷனா? ஜி.ஹெச் போக  நூறு ரூபா வேணுமா நாய்க்கு ஷாம்பூ வாங்கன்னு ஒரே ஒரு நூத்துபத்து ரூபா வச்சிருக்கேம்பா.. ஏன் உன் அண்ணன் தரமாட்டானா?"

ப்ரக்ஞை தூக்கத்துக்கு  நழுவும்போது பிரசவ அறையில் மனைவி இருக்க நடைபோடும் கணவனை போல்  அது மூன்றாம் அறைக்கும், இரண்டாம் அறைக்கும் நடமாடுகிறது..

விழிப்பில் மனித உடலின் ஆயிரக்கணக்கான செல்கள் தேய்ந்தும் இறந்தும் விடுகின்றனவாம். தூக்கத்தில் தான் அவை ரிப்பேர் பார்க்கப்படுகின்றனவாம். புதிய செல்கள் பிறக்கின்றனவாம். குழந்தை கூட பிறந்த புதிதில் தூங்கிக்கொண்டே தான் இருக்கிறது.

மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி பேசிக்கொண்டிருந்தாலோ (கோடையில் மொட்டை மாடி ஸ்ரேஷ்டம். குறைந்த பட்சம்  மனதை பேசும் ஃபிக்ஷனோ நான் ஃபிக்ஷனோ இருந்தாலும் ஓகே. சரிய்யான முடிச்சு மாட்டி எழுத ஆரம்பிச்சுட்டாலும் ஓகே. 1986 ல் ஒரு நாள் இரவு 9 மணி முதல் விடியல் 6 வரை எழுதிக்கொண்டே இருந்தேன். இடையிடையே  ஒரு செம்பு தண்ணீர் ,ஒரு பீடி, ஒன் பாத்ரூம் .

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா இரவுகளில் 9 முதல் 12 வரை போனதே தெரியாது. அதற்கு மேல் 3 மணி வரை நேரம் சண்டித்தனம் செய்யும். அதை தாண்டி விட்டால் வலசம்மா கணக்காய் ஓடியே போய்விடுகிறது.

கடைசி பஸ்ஸை கோட்டை விட்டு பஸ்ஸ்டாண்டில் மாட்டுவதும் ( கணக்கற்ற முறை  சித்தூர் திருப்பதி சாலையில் நேண்ட்ர குண்டா கிராஸில் இப்படி சிக்கியிருக்கிறேன்  அப்போது பாகாலாவில் வாசம்) நெருக்கமற்ற உறவினர் வீடு / நண்பர்கள் அறையில் தூங்குவதாய் நடிப்பதுமே நரகம்.

ஒரு முறை கும்மிடி பூண்டியில் செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை பார்த்த சமயம் 3 தினம் தொடர்ந்து 3 ட்யூட்டி பார்த்திருக்கிறேன். வெறுமனே விழித்திருப்பதே ரத்தத்தை கொதிக்க செய்துவிடுகிறது. மூளை ஹை ஸ்பீடில் வைக்கப்பட்டுவிட்ட லோக்கல் ஃபேன் மாதிரி முரண்டு பிடித்து சத்தம் போட ஆரம்பித்துவிடுகிறது.  சிந்தனை தறி கெட்டு ஓட ஆரம்பித்து ஓடும். வர்ஜியா வர்ஜியமின்றி சிந்தனைகள் ரேஸ் குதிரைகளாய் சிதறி ஓட  அதை கவனிப்பதே ஒரு தியானமாகிவிடுவதை உணர்ந்திருக்கிறேன்.  அதுவும் சில நிமிடங்கள் தான்.  தூங்க முயற்சிப்பதும், தூக்கம் பிடிக்காத நிலையில் தூங்குபவர்களை கண்டு/ நினைத்து  எரிச்சலுறுவதும் , சட் இதென்ன சேடிசம் என்று கட்டுப்படுத்திக்கொள்வதும் செய்ய வேலையும் இல்லாது இருந்தாலும் செய்யும் அவகாசமிராது  உண்மையிலேயே அது  ஒரு நரகம்.


இது மாதிரி சந்தர்ப்பங்களில் நுரையீரல் வேகமாக வேலை செய்யுமோ என்னமோ செயின் ஸ்மோக்கர் அல்லாத நானே கட்டு பீடியை தீர்த்திருக்கிறேன். இதில் கையில் காசு இருந்தால் சர்ச் ரோடில் சேட்டுகளும், செட்டியார்களும் கடை போடும் சமயம் தள்ளி விட்டு சென்ற அட்டைபெட்டிகளையும், கம்பெனி டிஸ்ப்ளேசையும் அடுக்கி வைத்துள்ள டாட்டா சால்ட் பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளையும் பார்த்தபடி சென்று டீ சாப்பிட்டு பிரகாசம் சாலையில் சென்னை  செல்லும் முதல் பஸ்ஸுக்காக உள்ளூர் காரர்களும், என்னென்னவோ காரணங்களால்   லாரிகளை பிடிக்க காத்திருக்கும் வெளியூர்காரர்களையும் பார்த்தபடி வருகையில் தோன்றும் தாளி இங்கன காவாக்கரை மேல நிச்சிந்தையா தூங்கறான்.  நமக்கு ஏன் வரமாட்டேங்குது.

நாம ராத்தூக்கம் இல்லாம  நாறி நலிஞ்சு  காலை 9 அ 10 மணிக்கு  குயோன்னு பஜாருக்குள்ள போறச்ச அவனவன் நிம்மதியா தூங்கிட்டு ரொட்டீன் லைஃப்ல இருக்கிறதை பார்க்கும்போது இந்த ரொட்டீன் லைஃபுக்காகத்தான் சனம் பொசக்கெட்ட பொழப்பை பொழைக்க்தோன்னும் தோணும்.

 ஹீரோஷிமா நாகசாகி மீது அணு குண்டை வெடித்த அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி சொன்னாராம்.ஏறுமுகத்துல இருக்கிறச்சயாவது இந்த மாதிரி ராவுகளை சமாளிச்சுரலாம். இறங்கு முகத்துலயோ  டெட் லாக்லயோ இருக்கிறச்ச தூக்கம் கெட்டுதுன்னா போச்.

நம்ம நாட்ல வேற கொஞ்சம் முக்கி யோசிச்சாலே போதும்பா மூள கீள கலங்கிரப்போவுதுங்கற சனம் சாஸ்தி. அதுலயும் நமக்குள்ள இருக்கிற முரண்பாடுகள், வாழ்க்கைல கண்ட ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் தர்கமும் கிடையாது. உச்ச வரம்பும் கிடையாதா.. படக்குனு பயம் பிறக்கும் . மூளை கலங்கிருமோன்னு.

மூளை கலங்கறது.. பைத்தியம் பிடிக்கிறதுங்கறாங்களே அப்படின்னா என்னனு யோசிக்க ஆரம்பிக்கும்.  ஒரு ராத்திரி ஒரே ஒரு ராத்திரி நம்ம ஒப்பனைகள், இரட்டை வேடங்களையெல்லாம் தசராவுக்கு  பெயிண்ட் அடிக்கப்போற சேட் கடை சாமான் மாதிரி வெளியவந்து விழுந்துருது. ஒரு வேளை இதுக்கு பயந்துதான் சனம்
தூங்கி போயிருதா?

தூங்கா நகரம், தூங்கா விளக்கு, தூங்காத விழிகள்னு படிக்கிறச்ச லிட்டரரியா தோணுதே தவிர தூங்காத இரவுல  மட்டும் இலக்கிய ரசனைக்கு மட்டுமில்லை இடியாப்ப ரசனைக்கு கூட இடம்  கிடையவே கிடையாது.

ஜஸ்ட் ஒரு இரவு தூங்காம போனாலே இந்த பாடு. நமக்குள்ளே ஏதோ ஒன்னு துக்ளக்  சோ மாதிரி  முட்டை கண்ணை போட்டுக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்குங்கறாங்களே .. பாவம் அது.

நல்ல தூக்கத்துக்காகவாவது கொஞ்சமேனும் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டுதான் ஆகனும். இல்லாட்டி  மனசுங்கற குடைக்குள்ள  மழை மட்டும் பெய்யாது புயலும் அடிச்சுரும்.