Tuesday, May 25, 2010

பாட்டி வடை சுட்ட கதை( 2020)

1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ ..  ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி  உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான்

2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும்  சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு.

3.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைப்பதற்குள் கருப்பு கோட்டு போட்ட ஒருவர் வந்தார். " தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"

பாட்டிக்கு எங்கிலாத ஆத்திரம் வந்தது. இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. நான் வடை சுடகூடாதுனு எந்த பன்னாடை கோர்ட்டுல கேஸு போட்டுச்சு." உனக்கு சொன்னா புரியாது. தா எதிர்க்கால கீது பாரு கருப்பு கண்ணாடி போட்டு ,ஏசி எல்லாம் பண்ணி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்கிறாய்ங்க பாரு. அவிக போட்டாங்க. இனி வடைல்லாம் அவிக தான் சுட்டு விக்கனும், வேற ஆரும் சுடக்கூடாதுனு கோர்ட்ல ஆர்டர் கொடுத்துட்டாய்ங்க"

பாட்டிக்கு அரசியல் என்றால் அது எம்.ஜி.ஆரோடு போச்சு. ஒரு கோர்ட்டு இப்படி கூட உத்தரவு  கொடுக்குமா, அப்படியே கொடுத்தாலும் ஒரு அரசாங்கம் அதை அமல் படுத்த முன் வருமா? இதெல்லாம் பொய். கருப்பு கோட்டு போட்டவன்  தன்னை முட்டாளடிக்கிறான் என்று முடிவு கட்டி " இன்னாடா படம் காட்றிங்கோ.. 20 வருசமா என் ஊட்டுக்காரன் செத்ததிலேருந்து இங்கனதான் கடை போடறேன். இன்னைக்கும் போடுவேன் என்று தன் வேலையை தொடர க.கோட்டுக்காரர் சமீபத்து ஸ்டேஷனுக்கு தன்  செல்லிலிருந்து ஃபோன் செய்ய ஜீப்பில் பறந்து வந்த எஸ்.ஐ..................................

4.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைத்து வடை போட ஆரம்பித்தாள்.  காகம் தான் கடைசி வரை வரவேயில்லை. வழக்கமாய் தன்னிடம் வடை வாங்கும் மணி அய்யரை கேட்டாள் '' ஆமா சாமி இந்த காக்காவுங்களுக்கு என்னாச்சு ..ஒன்னு கூட தென்பட மாட்டேங்குதே" அய்யர் சொன்னார்" ஆளுக்கு ஒன்னை கையிலை பிடிச்சுக்கிட்டு அலையறானுவளே - செல் ஃபோனை சொன்னேன்.அதுலருந்தும், செல் டவர்ல இருந்து வர்ர சிக்னல்ஸ் அதுகளை விரட்டி அடிச்சுருச்சு"

கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்..