பத்திரிக்கை தொழிலை சுதந்திரத்துக்கு முன் ,சுதந்திரத்துக்கு பின் ,என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சுதந்திரத்துக்கு முன் அது ஒரு தற்கொலை முயற்சி.சுதந்திரத்துக்கு பின் அது அட்சய பாத்திரமாகவே மாறிப்போனது. தொழிலுக்கு தொழிலுமாச்சு ,செல்வாக்குக்கு செல்வாக்குமாச்சு. பவர் ப்ரோக்கரிங் , கவிழ்ப்பு அரசியல் சதிகளில் பங்கு வகித்தல் அதில் வெற்றி பெற்றால், அரசு வகை,அரசியல் வகை லாபங்களையும் அடைதல் , குடும்ப சொத்துக்கு பாதுகாப்பு இப்படி ஒன்றல்ல இரண்டல்ல அனேக வகைகளில் பத்திரிக்கை தொழில் உதவுவதால் போட்டு தாளிக்கிறாங்கணா !
உள்ளடக்கத்துல ஓரளவு மரியாதை பார்க்கும் கல்கி மாதிரி பத்திரிக்கைகள் கூட குஜராத் அளவில் காய் நகர்த்தி அரசு விளம்பரங்களை கொத்தாக பறிக்கின்றன என்றால் அதற்கு தாம் பெயரளவுக்காகவாவது எதிர்த்து வந்த மதவாத அரசியலுக்கான மறு உருவமான குஜராத் அரசை தூக்கிப்பிடித்து ஒரு சப்ளிமெண்டையே வெளியிடுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
விளம்பரங்களை சேகரிப்பதும், வெளியிடுவதும் ஒரு பத்திரிக்கையின் பொருளாதார தன்னிறைவுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி பத்திரிக்கையின் மோரலுக்கு விரோதமாக மாறிவிட்டது தான் சோகம். ஒரு பத்திரிக்கையின் உள்ளடக்கம் வேறு , விளம்பரப்பக்கங்கள் வேறு என்பது சட்டப்படி சரியாக கூட இருக்கலாம்.
ஆனால் அதே சட்டம் சந்தேகாஸ்பதமான வைத்திய முறைகளை பற்றிய விளம்பரங்களையும், தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்துவதான விளம்பரங்களையும் வெளியிடக்கூடாது . என்று கூறுகிறது . மருத்துவ கழகத்தின் நாம்ஸ் படி ஒரு உண்மையான டாக்டரே விளம்பரம் வெளியிடக்கூடாது என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் விளம்பரங்களை வெளியிடாத பிரபல பத்திரிக்கைகள் எத்தனை ?
சட்டமன்றம், மந்திரிசபை ,நீதிமன்றம் ஆகிய அரசின் முக்கிய அங்கங்கள் மீது ஒரு கண் வைத்து ஆராய்ந்து அரசு இயந்திரம் சரிவர செயல்படுகிறதா என்று ஆராய்ந்து செய்திகள் வெளியிட வேண்டிய பத்திரிக்கைகள் எந்த அழகில் செயல்படுகின்றன என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
ஒரு வார இதழ் சில ஆண்டுகளுக்கு முன் கோழிக்கறி சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகளை பற்றி ஒரு தொடரே வெளியிட்டது. தொடர் வெளியாகும்போதேவா இல்லே முடிஞ்ச கையோடவா நினைவில்லே அதே பத்திரிக்கைல கோழிக்கறி சாப்பிடலைன்னா ஜன்ம சாபல்யமே கிடையாதுங்கற ரேஞ்சுக்கு தொடர் விளம்பரங்கள் வெளியானது. இது விளம்பர வேட்டைக்காகவே எழுதப்பட்ட தொடர்னு நான் சொல்றேன் மறுக்க முடியுமா ?
ஒரு காலத்துல அதிக வட்டி தரோம்னுட்டு தனியார் ஃபைனான்ஸ் கம்பெனிகள் ஏழை,பாழை,நடுத்தர வகுப்பு மக்களோட பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போன கதை. அந்த கம்பெனிகளோட விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கா கல்லாவை நிரப்பின அதே பத்திரிக்கைகள் ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போவதையும் , கம்பெனி மூடிப்போவதையும் வைத்து நூற்றுக்கணக்காண ஜோக்குகளை போட்டு தம் பக்கங்களையும் நிரப்பியதை மறக்க முடியுமா ?
எங்கள் சித்தூர் தமிழக எல்லையில் ரெண்டுங்கெட்டானாக இருப்பதால் தினத்தந்தி,தினகரன் மாதிரி பத்திரிக்கைகள் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த கதையாக தம்து வேலூர் பதிப்பில் நேற்று,முந்தா நேற்று செய்திகளை டப் செய்து வெளியிட்டு அவற்றை காட்டி தமது நிருபர்களுக்கு ஓசி பாஸ்கள் ,தமக்கு லட்சக்கணக்கில் திருமலை,காணிப்பாக்கம் விளம்பரங்களை பெற்று வருகின்றன.
ரெஜிஸ்ட்ரார் ஆஃப் ந்யூஸ் பேப்பர் வழங்கிய ஆர்.என்.ஐ நெம்பர் இருந்தால் போதும். தபால் துறை வழங்கும் சலுகை (ஆர்.என்.ஐ எண் இல்லாத பத்திரிக்கைகளை தபாலில் அனுப்ப ரூ.4 க்கான தபால் தலை ஒட்ட வேண்டும் ஆர்.என்.ஐ எண் இருந்தால் நாலணா) , சலுகை விலையில் ந்யூஸ் ப்ரிண்ட் ,நிருபர்களுக்கு இலவச பஸ்பாஸ் . இப்படி ஆயிரம் சலுகைகள்.
சலுகைகளின் நோக்கம்:
இந்த சலுகைகளின் நோக்கம் பத்திரிக்கைகளை ஊக்குவிப்பதே. ஏன் ஊக்குவிக்க வேண்டும் ? அவை பொருளாதார ரீதியிலான சிக்கல்களை புறந்தள்ளிமக்கள் கருத்தை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்பதே ! ஜன நாயகத்தின் நான்காவது தூண் வலுவாக இருக்க வேண்டும் என்பதே !
பத்திரிக்கைகளின் கடமை:
பத்திரிக்கைகளின் கடமை மக்கள் கருத்தை வெளிப்படுத்துவதே ! ஆனால் எந்த பத்திரிக்கையும் மக்கள் கருத்தை வெளிப்படுத்துவதில்லை. தன் கருத்தை , தப்பு தப்பு தன் முதலாளியின் கருத்தை வெளியிட்டு , அவரது உள்ளக்கிடக்கையை நிறைவேற்ற தன் கருத்தை மக்கள் மீது திணிக்க பார்க்கிறது.
ஆந்திரத்தில் அரசியல்விளையாட்டு:
ஆந்திரத்தில் ராமோஜிராவின் ஈ நாடு பத்திரிக்கையும், ராதாகிருஷ்ணாவின் ஆந்திர ஜோதி பத்திரிக்கையும் ஆளும் காங். கட்சி மீது கருக்கட்டி கொண்டு குறைந்த பட்ச பத்திரிக்கை தர்மங்களையும் குழி தோண்டி புதைத்து கெட்ட ஆட்டம் போட்டன. அதன் விளைவு என்னவாச்சு ? முதல்வரின் மகன் இரண்டு ரூபாய் விலையில் சாட்சி என்ற தினசரியை கொண்டு வந்தார். இப்போது அவர் ஒரு எம்.பி.யுமாகியுள்ளார். ராமோஜிராவின் மார்கதர்ஸி ஃஃபைனான்ஸ் மக்களிடம்முறைகேடாக டிப்பாசிட் வசூல் செய்தும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் கருப்பை வெளுப்பாக்குவதில் ஈடுபட்டும் கோர்ட்டில் குடித்தனம் வைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் என்னவாம்:
ஒரு சில குடும்பங்கள் ஜாதிக்கொன்றாய் (தப்பா நினைச்சுராதிங்கணா நான் பத்திரிக்கைல இருக்கிற ஜாதிகளை சொல்றேன் தினசரி, வாராந்தரி இப்படி) பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு மத்திய அரசு தரும் சலுகைகளை அனுபவித்தபடி, சந்தனக்கட்டை ஓட்டினால் கூட கிடைக்காத அத்தனை லாபமீட்டி வருகின்றன. ஜர்னலிசம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் நபர்களுக்கு அரசு தரும் இலவச பஸ் பாஸ்களையும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை கூலியாக கொடுத்து கொள்ளையடித்து வருகின்றன. பத்திரிக்கைகள் அடிக்கும் கொள்ளையை பார்த்து சில நிருபர்கள் சொந்த சுய லாபங்களுக்காக சொந்த பத்திரிக்கை ஆரம்பித்து சிலர் ஸ்திரப்பட்டு போவதும்,பலர் கையை சுட்டு கொளவதும் நடந்து வருகிறது.
போலி நிருபர்கள் :
போலி நிருபர்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவதை பார்க்கிறோம்.போலிகளை தவிர்க்க நிருபர்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும் ப்ரஸ் ஸ்டிக்கர்களையும் அரசாங்கமே அச்சடித்து தரும் நிலை ஏற்பட்டுள்ளது.போலி நிருபர்கள்பிரச்சினையை கிளப்புவதே அசல் நிருபர்கள்தானோ என்பது என் சந்தேகம். போலி நிருபர்கள் மீது சாட்டப்படும் அனைத்து குற்றங்களிலும்(ப்ளாக் மெயில் பணம் பறிப்பு) பத்திரிக்கை நிர்வாகங்களே ஈடுபட்டு வருகின்றன. அதை அசல் நிருபர்கள் சிறிய அளவில் செய்து வருகின்றனர். போலி நிருபர்கள் பற்றிய கூச்சலுக்கு காரணமே கொள்ளையில் பங்கு குறைவது தான்.
பத்திரிக்கை விலை அதிகரிப்பும் பக்க அதிகரிப்பும் ஏன் ?
இயற்கை விதி ஒன்றுண்டு .எது அளவுக்கு மீறி கொழுக்கிறதோ அது இரண்டாக பிளந்துவிடும். ஒரு செல் அங்க ஜீவியான அமீபா முதல் அச்சு ஊடகம் வரை ஒரே விதிதான்.
பத்திரிக்கை துறையில் பணம் கொழிப்பதை பார்த்து வட்டமிட்ட கழுகுகள் அறிவியல் முன்னேற்றத்தின் பலனாய் வந்த விஷுவல் மீடியாவையும் விட்டு வைக்கவில்லை. விஷுவல் மீடியா ஒரு புறம் , புற்றீசலாய் கிளம்பிவரும் இணைய தளங்களொருபுறம் பத்திரிக்கைகளின் ஏகாதிபத்யத்துக்கு ஆப்பு வைத்துவிட்டன. இதையடுத்து உள்ள வாசகர்களை தக்க வைத்துக்கொள்ள வண்ணப்பக்கங்கள், மழமழ காகிதங்கள் என்று புலி வேஷம் போட்டு காட்ட வேண்டியுள்ளது. கடந்த 10 வருடங்களில் ஒரு புதிய தலைமுறை ஏற்பட்டுள்ளது .அவர்களை ஈர்க்கத்தான் பத்திரிக்கைகள் படாத பாடு பட்டுவருகின்றன. அவர்களை கவரத்தான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்ச்சுக்கு செக்ஸ் வெளியிடுகின்றன. சோகம் என்னவென்றால் அவர்களின் நோக்கம் நிறைவேறாததுடன் கடந்த தலைமுறை வாசகர்களையும் வேகமாக இழந்து வ்அருகிறார்கள்.
நியூஸ் ப்ரிண்ட் மோசடி :
பத்திரிக்கை முதலாளிகள் எல்லாம் கஞ்சிக்கு இல்லாதவர்கள் .அவர்களால் வெளிமார்க்கெட்டில் காசு கொடுத்து பேப்பர் வாங்கமுடியாது என்று மத்திய அரசு அவர்களுக்கு சலுகை விலையில் ந்யூஸ் ப்ரிண்ட் பேப்பர் தருகிறது. இந்த ந்யூஸ் ப்ரிண்ட் பேப்பர் என்பது சற்று பழுப்பு நிறத்துடன் இருக்கும் . இந்த பேப்பரில் அச்சிட்ட பேப்பர்களை இப்போது மார்க்கெட்டில் பார்க்கவே முடியாது. காரணம் விஷுவல் மீடியாவுடன் போட்டியிட பத்திரிக்கைகள் மழ மழ பேப்பர்களில் பத்திரிக்கை அச்சிட துவங்கி பல காலமாகிறது. அதற்காக அரசு ஒதுக்கித்தரும் ந்யூஸ் ப்ரிண்ட் கோட்டாவை வேண்டாம் என்று கூறிவிட்டனவா ? என்றால் இல்லை. அதை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்றுவிட்டு அதிகப்படியான பணத்தை போட்டு நல்ல பேப்பர் வாங்கி அச்சிட்டுவருகின்றன.
ரேஷன் அரிசியை விற்றால் குற்றம்:
அரசு சலுகை விலையில் தரும் அரிசியை விற்றால் அது கிரிமினல் குற்றம். கார்டு தாரரே விற்றாலும் அது குற்றம் தான். சட்டம் இப்படியிருக்க ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் விலையுள்ள ந்யூஸ் ப்ரிண்டை விற்பது எத்தனை பெரிய குற்றமோ ..
முன் குறிப்பு:
பத்திரிக்கை எஜமானர்களுக்கும் ,எடிட்டர்களுக்கும் ராம்ஜெத்மாலானி கணக்காய் கீழ் காணும் 10 வினாக்கணைகளை தொடுக்கிறேன். பதில் தரட்டும் நேர்மை துணிவிருந்தால்.
ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?