ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் உள்ள தொடர்பு
ஜோதிடம் என்பது ஒன்பது கிரகங்களை கொண்டு சொல்லப்படுகிறது. வாஸ்துவும் ஒன்பது திசைகளை கொண்டு ( பாரதியார் கூட சென்றிடுவீர் எட்டு திக்கும் என்றுதானே குறிப்பிட்டார் என்று குழம்பிவிடாதீர்கள். திக்குகள் எட்டே ஆனாலும் நடுபாகத்தை சூரியன் ஆளுகைக்கு உட்பட்டதாய் வாஸ்து கூறுகிறது) சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் கிரகங்களுக்கான காரகத்துவம்( அந்த கிரகத்தின் ஆளுகைக்குட்பட்ட விஷயங்கள்) விவரிக்கப்படுவதை போலவே வாஸ்துவில் ஒவ்வொரு திசைக்கும் காரகத்துவம் கூறப்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் எப்படி அமைந்தால் நலம் தரும். எப்படி அமைந்தால் தீமை தரும் என்று கூறப்படுகிறது. அதே போல் வாஸ்துவில் ஒவ்வொரு திக்கும் எப்படி அமைய வேண்டும் (மேடு,பள்ளம், திறந்தவெளியாக இருப்பதோ , மூடப்பட்டு இருப்பதோ, )என்று விவரிக்கப்படுகிறது.
ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் உள்ள வித்யாசங்கள்:
1.ஜோதிடத்தில் எந்த கிரகம், எந்த ராசியில்,எந்த கிரகத்துடன் சேர்ந்தால் என்ன பலன் என்பதும், அது எப்போது நடக்கும் எனபதும் கச்சிதமான முறையில் கூறப்படுகிறது. ஆனால் வாஸ்துவில் பார்க்கும் போது என்ன நடக்கும் என்று கூற முடியுமே தவிர எப்போது,எந்த அளவில் நடக்கும் என்று கூறவே முடியாது.
உதாரணமாக: தென் கிழக்கில் )ஆக்னேயம்) மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது என்று வையுங்கள். அந்த வீட்டில் விபத்து,தீவிபத்து,கொலை,அகால மரணம்,துர்மரணம் நடைபெறும் என்பது வாஸ்து பலன். ஆனால் இந்த பலன் எப்போது நடக்கும். எத்தனை முறை நடக்கும் என்று கூற முடியாது. பொதுவாக வாஸ்து என்பது வீடு கட்டி குடிபோன பின்னே ஒன்னரை மாதம் கழித்து கால் பலன் , 3 மாதங்களில் அரைப்பலன், ஒன்னரை வருடங்களில் முழுப்பலன் தரும் என்று ஒரு விதி உள்ளது. இது பலன் ஆரம்பத்துக்கான விதிதானே தவிர பலனின் அளவுக்கோ , எத்தனை முறை என்பதற்கோ கூறப்பட்ட விதி அல்ல.
2.ஒருவர் பிறந்த ஜாதகத்தில் நான்காமிடத்தை பொறுத்தோ கிருக(வீடு) காரகனான சுக்கிரன் நின்ற இடத்தை பொறுத்தோ அவரவர்க்கு வீடு அமைகிறது. (இவையிரண்டில் எது பலமாக இருந்தால் அதைப்பொறுத்து அமையும்.) ஆனால் ஒருவர் கட்டிக்கொண்ட வீட்டின் வாஸ்துவை பொறுத்து அவர் ஜாதகம் மாறாது வாழ்வும் மாறாது. உதாரணமாக: எம்.ஜி.ஆர் உபயோகித்த பிரச்சார வாகனத்தை பயன்படுத்தியதை போலவே அவர் வாழ்ந்த வீட்டில் விஜயகாந்த் குடியேறி வாழ்கிறார் என்று வைப்போம். விஜயகாந்த் எம்.ஜி.ஆரை போல் முதல்வராகிவிட முடியுமா ? முடியாது.
3.ஜாதகம் என்பது ஒன்றே . அது எப்போதும் மாறாது. ஆனால் வாஸ்து அப்படியல்ல. ஜாதகரின் ஜாதகத்தை பொறுத்து ,தசாபுக்திகளை பொறுத்து மாறிவிடும். உதாரணமாக ஒருவருக்கு சுக்கிரன் யோககாரகன். நான்காமிடம் சுபபலம். சுக்கிரதசை நடக்கிறது என்று வையுங்கள். வீடு கட்டுவார். வாஸ்துவும் அமோகமாக அமைந்து விடும். அந்த தசை முடிந்து சூரியதசை ஆரம்பமாகிறது. சூரியன் பாவியாக உள்ளார். வலுத்தும் உள்ளார் என்று வையுங்கள். அந்த வீட்டில் அவர் தொடர்ந்து வாழமுடியுமா ? முடியவே முடியாது. ஒன்று இன்றைய மாடர்ன் அரைகுறை வாஸ்து பண்டிதன் எவனோ அவரது மூளையை குழப்பி வாஸ்துவில் குறை ஏற்படுத்தி விடுவார். அல்லது வீட்டையே மாற்றிவிட வேண்டியதும் வரலாம். ஒருவேளை அந்த வீட்டையே விற்க வேண்டியும் வரலாம்.
4.பரிகாரங்களை பொருத்த அளவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் நிறைய வித்யாசமிருக்கிறது. ஜோதிடத்தை பொருத்த அளவில் பரிகாரம் என்பது அந்தந்த கிரகம் காரகத்துவம் வகிக்கும் பொருளை அந்த கிரகம் காரகத்துவம் வகிக்கும் பொருளை தானம் செய்வதும், அந்த கிரகத்துக்குரிய க்ஷேத்திரத்தை தரிசிப்பது ,அந்த கிரகத்துக்குரிய தெய்வத்தை வழிபடுவதுமே.
(அனுபவத்தில் தேவைகளும்,சுய நலமும் பெருகிப்போன இந்த காலத்தில் இந்த பரிகாரங்கள் சரி வர பலன் தராததை உணர்ந்து இன்னும் இன்னும் சற்று சுரத்தான பரிகாரங்களை நான் பரிந்துரைத்து வருகிறேன். இவற்றிற்கு நவீன பரிகாரங்கள் என்று நாம கரணமும் செய்துள்ளேன். இவற்றையும் நீங்கள் அதிகாலை டாட் காமில் விரைவில் எதிர்பார்க்கலாம்)
இது இப்படியிருக்க வாஸ்து விஷயத்துக்கு வரும்போது அனேகர் விஷயத்தில் பரிகாரங்களே புதிய பிரச்சினைகளை கிளப்பி விட்டுவிடுவது சகஜம். ஏன் இப்படி ?
ஒரு குழந்தை பிறக்கும் போதே அது எப்படிப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும் எனபது முடிவாகிவிடுகிறது. அந்த குழந்தையின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளனவோ அந்தந்த கிரகங்களுக்குரிய திசைகள் 100சதவீதம் வாஸ்து பிரகாரமே அமைந்திருக்கும்.
அந்த குழந்தையின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் தீமை செய்யும் நிலையில் உள்ளனவோ அந்தந்த கிரகங்களுக்குரிய திசைகள் அந்தந்த கிரகங்களின் பாப பலனை பொறுத்து குறைந்த பட்சம் 30 சதம் முதல் 100சதவீதம் வாஸ்துவுக்கு விரோதமாகவே அமைந்திருக்கும்.
ஒரு வேளை அந்த குழந்தையின் தந்தை வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் அந்த வீட்டை மாற்றி கட்டினால் அந்த குழந்தை அந்த வீட்டில் வாழ்வது சந்தேகமே !
இது ஒருபுறம் என்றால் வாஸ்து படி தோஷம் கொண்ட வீடுகளில் அந்த தோஷம் ஒரு புறம் இருந்தாலும் வேறு சில அம்சங்கள் நல்ல நிலையில் அமைந்து ஓரளவு நல்ல பலனையே கொடுத்துக் கொண்டிருக்கும். உதாரணமாக : வடகிழக்கு (ஈசான்யம்) குறைந்துள்ளது என்று வையுங்கள். அப்போது தென் கிழக்கு (ஆக்னேயம்) வளர்ந்திருக்கும். ஒருவேளை அந்த வீட்டுக்காரர் படு சோம்பல் பேர்வழி அல்லது பட்டாசு, எரிபொருள்,ஓட்டல் வியாபாரம் செய்பவர் என்று வையுங்கள். ஈசான்யம் குறைந்ததால் அவருக்கு வரக்கூடிய நஷ்டம் ஏதுமில்லை. என்ன கண்டதற்கும் எரிந்து விழுந்து கொண்டிருப்பார். பிள்ளைகளுடன் தகராறுகள் இருக்கும் அவ்வளவே. ஒரு வாஸ்து நிபுணர் வந்து அந்த குறையை நிவர்த்தி செய்ய வைக்கிறார் என்று வைப்போம். என்னாகும் ? வியாபாரம் விழுந்து விடும். சோம்பல் அதிகரித்து விடும்.
ஜோதிடத்திலாவது பரிகாரங்கள் ஒன்று பலனை தரலாம் அல்லது தராமல் போகலாம். ஆனால் வாஸ்துவில் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணத்து சிந்தித்து பரிகாரத்தை அமலாக்கா விட்டால் கோவிந்தா தான் !
வாஸ்து சரியில்லாத வீடுகளை மாற்றியமைப்பதை விட அவை தரும் நற்பலன் களை அனுபவித்தபடி அவை தரும் தீய பலன்களை சகித்துக் கொள்வதே மேல் என்பது என் அனுபவம்.
ஒரு வழியாக ஜோதிடம்,வாஸ்து இடையிலான தொடர்பு , வித்யாசங்களை பார்த்துவிட்டோம். இனி வாஸ்து பேரால் நடைபெறும் மோசடிகளை பார்ப்போம்.
1.அளந்து விடுவது :
மனித வாழ்வை பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. ஒவ்வொரு காரணிக்கும் ஓரளவு பாதிப்பு தரும் வல்லமை உண்டு. அவ்வாறான பல்வேறு காரணிகளில் வாஸ்துவும் ஒன்று. இதுவே உண்மை நிலை. ஆனால் சில வாஸ்து பண்டிதர்கள் பிள்ளையில்லையா ? பிள்ளைக்கு வேலை கிடைக்கவில்லையா ? பெண்ணுக்கு திருமணமாகவில்லையா? வ்யாபாரத்தில் சரிவா ? இப்படி எந்த பிரச்சினையானாலும் அதற்கு வாஸ்துவை காரணமாக்கி வாஸ்து ஒன்றே பரிபூரண தீர்வு என்ற வகையில் அளந்து விடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. 100 சதவீதம் வாஸ்து உள்ள வீட்டில் வாழ்ந்துவிட்டால் அலிக்கு குழந்தை பிறந்துவிடுமா என்ன ?
2.ஆளுக்கொன்றை சொல்வது:
ஜோதிடத்திலாவது கிரகங்களின் பலா பலன்களை விவரிப்பதில் கருத்து வேறுபாடு வரலாம். வாஸ்துவில் அதற்கு வாய்ப்பே இல்லையே ! கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்கு தான். ஆனால் இங்கே ஒரு விஷயத்தை சொல்லி வைக்கிறேன். அவரவர் குண நலன்கள், தொழில்,வியாபாரம், குடும்ப நிலையை பொறுத்து பொதுவான வாஸ்துவில் சிற்சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. வசிப்பிடங்களுக்கான வாஸ்து வேறு, வியாபார தலங்களுக்குண்டான வாஸ்து வேறு , சோம்பேறிக்கான வாஸ்து வேறு ,டென்ஷன் பார்ட்டிகளுக்குண்டான வாஸ்து வேறு இவற்றையெல்லாம் தீர அலசி அவ்வீட்டுக்காரரின் முழு விவரங்கள் அவரது நிலை ஆகியவற்றை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் அதை விடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்வதால் தான் ஆளுக்கொன்றை சொல்லி குழப்புகிறார்கள்.
3.சூ மந்திர காளி !
இந்த படியை இடி படி படியா பொற்காசுகள் கொட்டும் ,இந்த கிணற்றை மூடிவிடு ஆனந்த வெள்ளத்தில் மிதப்பாய் என்று உடனடி லாட்டரியில் கூட எதிர்பார்க்க முடியாத விளைவுகளை கூறி வாஸ்துவை ஏறக்குறைய சூ மந்திர காளி ! ஆக்கி விடுகிறார்கள். ஜோதிடத்தையாவது மிஸ்டிக் சைன்ஸ் என்று கூற வாய்ப்பு இருக்கிறது. வாஸ்து என்பது 100 சதவீதம் கணிதமாகும். வாஸ்துவில் கூறப்படும் பலன்கள் யாவும் மேலுக்கு லக்ஷ்மி கரம், கரம் , பீடை என்று ரொம்பவே மடிசஞ்சி தனமாக இருந்தாலும் வாஸ்து என்பது ஒரு அறிவியலாகும்.
உதாரணமாக தெருக்குத்து கூடாது என் கிறது வாஸ்து . ஒரு வீடு . அதன் வாசலுக்கு நேரே சாலை இருக்கிறது என்று வையுங்கள். அது வழியாக ஒரு வாகனம் வேகமாக வருகிறது. பிரேக் ஃபெயில் ஆகிறது என்னாகும் ? வாகனம் வீட்டுக்குள் புகும். சரி ஒருவனை மற்றொருவன் கையில் கத்தியுடன் குத்த துரத்தி வருகிறான். என்னாகும் ? நம் வீட்டில் கத்திக்குத்து நடக்கும். பிறகு கோர்ட்டு போலீஸ் ஸ்டேஷன் என்று ஏறி இறங்க வேண்டி வரும்.
இது வெறும் உதாரணமே ! வாஸ்துவில் உள்ள அம்சங்களை "உட்கார்ந்து யோசித்தால் " இது போல் பல நூறு காரண காரியங்களை கூற முடியும். எனவே டுபாகூர் வாஸ்து பண்டிதர்கள் கூறுவதை நூற்றுக்கு நூறு நம்பாதீர்கள் . மூளைக்கு வேலை கொடுங்கள். பிராக்டிக்கலாக சிந்தித்து பாருங்கள். வாஸ்துவில் பரிகாரம் என்றால் அது வீட்டை மாற்றிகட்டுவதுதான்.
ஈசான்யத்தில் செம்பில் நீர்வைத்து பூக்களை மிதக்க வைப்பது , அந்த இயந்திரம் இந்த இயந்திரம் என்று மாட்டி வைப்பது இதெல்லாம் மேனா மினுக்கி வேலைகள். வேலைக்காகாத வேலைகள். பருவ வயது பெண்கள் முகப்பருவுக்கு கண்ட கண்ட களிம்புகளை பூசுவதற்கும் இதற்கும் வித்யாசமே இல்லை. (முகப்பருவுக்கு முக்கிய காரணங்கள் வேறாகவும், சிகிச்சை வேறாகவும் இருக்க களிம்புகள் பூசுவது மடமையல்லவா?)
காம்பவுண்டு இல்லையா !
காம்பவுண்டு இல்லையென்றால் வாஸ்து பார்ப்பதே வீண் வேலை. உங்கள் வீடுள்ள லைனில் எந்த வீட்டுக்கு காம்பவுண்டு போடப்பட்டுள்ளதோ அந்த வீடு வரை ஒரே வீடாக கருதித்தான் வாஸ்து பார்க்க வேண்டும். (எத்திசையிலும்). இதை ப்ளாக் வாஸ்து எனலாம்.
சில்லறை விஷயங்களை மறந்துருங்க:
எனது அனுபவத்தில் திசைகள் குறைவது, வளர்வது ,காலியாக இருக்க வேண்டிய பகுதியில் (வடக்கு,கிழக்கு) கட்டிடம், கட்டிடம் இருக்க வேண்டிய திசையில் (மேற்கு, தெற்கு) காலியிடம் ,நைருதியில்,ஆக்னேயத்தில் பள்ளம், ஈசான்யத்தில் மூடி,மாடிப்படி, வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் தவறான திசையில் வெளியேறுவது, தரை அமைப்பு தவறாக இருப்பது, நைருதி பாகத்தில் வாசற்படி, பெரிய ஜன்னல்கள் இருப்பது , தவறான திசைகளில் கிணறு அமைவது (வடக்கு,கிழக்கு,வட கிழக்கு தவிர இதர திசைகளில்), தவறான செப்டிக் டாங்க் அமைவது (வடக்கு,கிழக்கு திசைகளில் மையத்தில் தவிர) போன்ற இன்னும் சில அம்சங்கள் தான் மிக மிக தீமை தருகின்றன. இன்ன பிற ஜன்னல் எண்ணிக்கை இத்யாதியெல்லாம் வாஸ்து பண்டிதர்களால் பூதாகரமாக்கப்படும் அம்சங்களே !
ருணானு பந்த ரூபேணா
பசு பத்னி சுதாலயா
இந்த சுலோகத்தின் பொருளை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன். ருணம் என்றால்
நேரடி பொருள் கடன். பௌராணிகர் மொழியில் சொன்னால் பூர்வ புண்ணியம். வழக்கு மொழியில் "கொடுத்து வச்சது அவ்ளதான் என்கிறோமே அதை தான் இங்கு சுலோகம் "ருணம் " என்கிறது. ருணானு பந்த ரூபேணா என்றால் பூர்வ புண்ணியத்தின் படி / நீ (போன ஜென்மத்துல நல்லவங்களுக்கு ) கொடுத்து வச்சது என்னவோ அதுக்கேத்தபடி என்று பொருள் . பசு என்றால் கால் நடைகள், பத்னி என்றால் மனைவி. சுதா என்றால் பிள்ளைகள். ஆலயா என்றால் வீடு. அதாவது இந்த ஜென்மத்தில் கால் நடைகள், மனைவி,பிள்ளைகள் வீடு இவையெல்லாம் உனது பூர்வ புண்ணியத்தை பொருத்துதான் அமையும்.
கோள்கள் இறைவனின் கேபினெட்டில் மந்திரிகள். அந்த கோள்கள் தான் நீங்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றன. அதை மாற்றவும் உங்கள் ஜாதகமோ, தசா புக்தியோ கு.பட்சம் கோச்சாரத்தில் சனியின் இருப்போ இடம் கொடுத்தால் தான் உண்டு. அந்த மாற்றமும் தற்காலிகமே ! எனவே வாஸ்து விஷயத்தில் அதீத ஆர்வம் நற்பலனை கொடுக்க வாய்ப்பு என்பது மிக மிக குறைவே ! ஆனால் கெட்ட பலன் மட்டும் சர்வ நிச்சயம். எனவே அடக்கி வாசிங்கணா !