Tuesday, July 7, 2009

இந்த கொலைமுயற்சி விவகாரத்தில்

கண்ணிவெடி வெடி‌த்ததில் ஆந்திரமாநிலம், சித்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் தூக்கி எறியப்பட்டு நசுங்கியது. இந்த கண்ணிவெடி சம்பவத்தில் ஒரு கன் மேன் செத்தார். மூன்று கன் மேன் கள், இரண்டு டிரைவர்கள்,காருடன் ஒட்டி டூ வீலரில் பயணம் செய்த இளைஞரணி தலைவர் தீவிர காயங்களுக்குள்ளாயினர்.

இத்தனைக்கும் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதிதான் மர்ம நபர்கள் சி.கே பாபுவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றனர். இந்த சம்பவத்தில் ஒரு கன் மேன்,ஒரு நகராட்சி ஊழியர், கொலை செய்யவந்த கும்பலில் ஒருவர் செத்தனர்.மேலும் தொடர்ந்து சி.கே.பாபுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த படியே இருந்தது.

ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி போக்கு வரத்து நிறைந்த சித்தூர்‍ திருப்பதி சாலையில் கட்டமஞ்சி, எஸ்.கே.திருமணமண்டபத்தின் எதிரில் உள்ள வடி நீர் கால்வாய் மேம்பாலத்தின் கீழ் ஜாக்கிகளை பொருத்தி அவ‌ற்றின் மீது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு , சி.கே வின் கார் கிளைச்சாலையிலிருந்து, சித்தூர் திருப்பதி சாலைக்கு திரும்புகையில் ரிமோட் மூலம் வெடிக்கச்செய்துள்ளனர்.இதை பொருத்தியவர்கள் , வெடிக்கச்செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளித்தது மட்டும் சித்தூர் போலீசார்தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

சித்தூர் நகராட்சியின் 26 ஆவது வார்டு கவுன்ஸிலருக்கும் , பிப்ரவரி 9 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய வாட‌கை கொலையாளிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை மேற்படி கவுன்ஸில‌ர் கட்டாரி மோகனையும், இதர குற்றவாளிகளையும் சுதந்திரமாக உலவ விட்ட குற்றம் போலீசாருடையதுதானே.

.சரி ஒழியட்டும் குற்றவாளிகளைத் தான் பிடிக்கவில்லை பாதுகாப்பு ஏற்பாடுகளையாவது ஒழுங்காக செய்திருந்தால் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. வடி நீர் கால்வாய் மேம்பாலம் என்பது வெடி குண்டு வைக்க தோதான ஒன்று என்பதை பால் குடி குழந்தையும் அறியும் (டி.வி. சீரியல்கள் உபயத்தில்) மேலும் அது கிளைச்சாலையை முக்கியச்சாலையுடன் இணைக்கும் திருப்பத்தில் உள்ளது. அந்த இடத்தில் நிச்சயமாக வாகனம் மெதுவாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். அந்த இடத்தில் கு.ப. ஒரு ஹோம் கார்டை போட்டிருந்தால் கூட ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச்செய்த ஆசாமியை துரத்தி பிடித்திருக்க முடியும்.

சரி அதுவும் ஒழியட்டும். வெடித்தாயிற்று வாகனம் கவிழ்ந்தாயிற்று. சி.கே.பாபு வணங்கும் ஷிரடி சாய்பாபா மகிமையால் அவர் உயிர் பிழைத்தார். அவருக்கு முதலுதவி கொடுத்து பேசும் நிலைக்கு வந்ததுமே மீடியாவிடம் பேச வைத்திருக்கலாம். "ஆண்டவன் அருளாலும் ,மக்கள் ஆசியாலும் உயிர் பிழைத்தேன் எனக்கு எந்த ஆபத்துமில்லை, என் ஆதரவாளர்கள் புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்யுங்கள், மக்கள் புத்தாண்டை வழக்கம் போல் கொண்டாடுங்கள்" என்று அறிவிக்கச் செய்திருக்கலாம்.

அதை செய்யவில்லை. இதனால் ஜனவரி 1 ஆம் தேதி முழுக்க பதட்டமும்,கலவரச்சூழலும் நிலவியது. முன் புத்தி,பின் புத்தி என்பார்களே அவற்றில் முன் புத்தி,பின் புத்தி ஏதுமில்லாத போலீஸ் இருந்தென்ன லாபம்.

சரி இந்த கொலைமுயற்சி விவகாரத்தில் கட்டாரி மோகனின் மைத்துனர் கிஷோரை போலீசார் பிடித்தனர்.(அந்த நேரம் கிஷோர் தம் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார் என்று தகவல்) ரகசிய இடத்தில் விசாரித்தனர். எத்தனை நாள் திங்கள்,செவ்வாய்,புதன், வியாழக்கிழமை இரவு 7.55 வரை விசாரித்தனர். அட ..அந்த கிஷோரே வெடிகுண்டு வைத்து,அவரே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து கூட இருக்கட்டும். பிடித்தீர்களா? கைது செய்யுங்கள், நேரே நீதிமன்றம் கொண்டு வந்து ஆஜர் படுத்துங்கள். அதை விட்டு விட்டு பல்வேறு வதந்திகளுக்கு வழி செய்தீர்கள்.

பீலேர் சப்ஜெயில் வளாகத்தில் வைத்து போலீசார் கிஷோரிடம் ரகசியமாக விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு மீடியாவின் படையெடுப்பு,மக்கள் கூட்டம்.பரபரப்பு. இதெல்லாம் தேவையா?

மேலும் சித்தூர் மாவட்டம்,தவனம்பல்லி மண்டலம்,நல்லப்பரெட்டிபல்லியில் டாட்டா சுமோ கார் ஒன்று கேட்பாரின்றி கிடப்பதை மக்கள் தெரிவிக்க என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் சீஸ் செய்தீர்கள். கடைசியில் பார்த்தால் அது ட்யூ பெண்டிங் காரணமாய் எங்கே பறிமுதல் செய்யப்படுமோ என்று ஒளித்து வைக்கப் பட்ட வாகனம்.

இந்நிலையில் புதன் கிழமை ஸ்ரீதேவி சித்தூர் மூன்றாவது ஏ.டி.எம் (அடிஷ்னல் டிவிஷ்னல் மேஜிஸ்ட்ரேட்) நீதிபதியிடம் தம் கணவரை போலீசார் அழைத்துச் சென்று 2 நாட்கள் ஆகியும் விடுவிக்கவுமில்லை,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுமில்லை என்று மனு கொடுத்தார். இது தொடர்பாக ஸ்ரீ தேவியும் மூன்றாவது ஏ.டி.எம். நீதிமன்றம் அருகில் காலை 10 முதல் மாலை 5 வரை கண்ணீரும் கம்பலையுமாய் காத்திருந்தார்.
க‌டைசியில் இர‌வு 7.45 ம‌ணிக்கு நீதிப‌தி இல்ல‌த்தில் அவ‌ர் முன் கிஷோரை ஆஜ‌ர் ப‌டுத்த‌ அவ‌ர் 15 நாட்க‌ள் ரிமாண்டில் வைக்கும்ப‌டி உத்த‌ர‌விட்டார்.