Saturday, July 18, 2009

துலங்கி என்ன பயன் கவி புவி செவி சேரனுமே


தவமிருந்தேன் வரம் பெற்றேன்
என்றே அமைதியுற்றேன்
எங்கெங்கு காணினும் சக்தியடா
என்றே பாரதி ஆர்பரித்தான்.
சக்தி நீயே காப்பென்று
கவிஞன் நானும் உயிர் தரித்தேன்
சக்தி நீயென் உளமிருந்தும்
எங்கும் சதியே நான் கண்டேன்
பணமும் காசும் எண்ணித்தந்தாய்
பாவியர் உறவை அள்ளித்தந்தாய்
சோம்பிக்கிடந்தே சோறுண்டு
தொந்தி வளர்த்தேன் அம்மாவே !
தாயகம் காக்க நானெழுந்தேன்
தரம் தாழ்ந்தே சகதியில் நான் விழுந்தேன்

தொந்தி கொழுத்து புண்ணியம் என்ன ?
அந்திப்பொழுதில் அன்னியமானேன்
அம்மா உனை நான் மறந்திட்டு
ஆயிரம் பெற்று என்ன பலன் /

சந்தியில் நின்று கதறுகின்றேன்
கசடர் உறவே உதறுகின்றேன்

கண்டுணர்ந்த உண்மைகளை
உலகிற்குரைத்து நாட்டுக்கே
நன்மை பலவும்
கூட்டுவிக்க நாட்டம் கொண்டேன் நாயகியே !
உலகம் உய்திட உழைத்திட்டேன்
நான் உயர்ந்தால் உய்வித்தல்
எளிதென்று உயர்வுக்காக நோட்டமிட்டேன்
அம்மவோ சதி யது ஒன்றுத்தான்
எண் திக்கும் நின்றுஎள்ளுதெனை
நாளும் பொழுதும் அலை மோதி
உடலும்,உள்ளமும் பழுதாகி
கணிணியில் காவியம் தீட்டிடவே
கவிஞன் நானும் வந்தமற
அதுவும் என்னை கெக்கலித்தால்
யாதோ செய்வேன் என் தாயே
எரிமலை வெடித்த கதையாக
உணர்வுகள் லாவா போலாகி இதயத்தட்டை முட்டிடவும்
எரிதழல் வீசி தீர்த்திட்டேன்
அவளே என்னை பெற்றாளோ
நானே அவளை பெற்றேனோ

உனை போல் என் பால் கருணை காட்டும்
மழலை மனதை நோகடித்து
சற்றே தெளிந்த என் மனதை
சகதியாக்கி போட்டதுவே
இவ்விரவை நரகாக்கி
என் உயிரை விறகாக்கி
உதிரம் கொதிக்குதடி
சக்தி நீ எந்தன் தவம் மெச்சி வரம் தந்தாய்.
சக்தி தந்த வரம் சாபமாகி வாட்டுதலோ ?
நீ சொரிந்த தேன் மலர்கள் தேளாகி கொட்டுவதோ?
செவிட்டு ராஜ்ஜியத்தின் செவியென்று திறக்குமோ ?
செறிவு நிறை என் உரையே இவர் செவியை திறக்குமோ ?
என்ன பாவம் செய்தனடி
எனது கரம் கொய்கின்றனை
கரம் கொய்தால் முளைத்திடுமே
சிரம் கொய்தே என் கதையை கற்பகமே நீ முடி
தாய் மடியை தேடி வந்தேன்
சேய் என்னை தவிக்க விட்டாய்
கேட்டவரம் தா என்றே தாயுன்னை கேட்டேனே
யுத்த சன்னத்தம் நிறைவு பெறத்தான் கேட்டேன்.
வெற்றி வேண்டி கொற்றவையே
உன் முற்றம் வரவில்லை
அயற்சி அறியாத முயற்சி தோற்கலாமோ ?
உன் கரமே இங்கெனக்காய் சவத்துணி நூற்கலாமோ?
பிரளயம் உன் நோக்கம்
என் கவியோ அதை தடுக்கும்
எதையும் தடுப்பதல்ல என் குறி
ஏகாம்பரி நீயறி
சுவர்கம் நரகமெலாம் என் நோக்கில் இல்லையடி
என் உயிரோடு வந்ததொரு ஞானக்கிள்ளையடி
அக்கிள்ளை மொழி கேட்டு பிள்ளை மனம் கொண்டே
சிந்தனை செய்து வந்தேன்
உருவம் எதுவாயினும்
ஊறும் சக்தி ஒன்றல்லோ
பாதை மாறி நானே போதையில் கிடந்த போதும்
ஒரு குரல் ஒலித்திருந்து என்னை காத்ததடி.
அக்குரலும் என் குரலும் எக்குரலும் உனதல்லோ !
உதவி கேட்டு உமையாளே கூக்குரலிட்ட போதும்
எங்கே உன் பதில்
என்னதான் உண்டு உமையே உன் மனதில்
தாய் என்பது உறவு
அதனை பதவியென்று எண்ணி விட்டால்
துள்ளி எழுந்திடுமே
ஆழ நான் புதைத்த பூதம் ஒவ்வொன்றாய்

என் தமிழே மந்திரமாம்
கட்டிக் கொணருமடி
என் காலடியில் வீழ்த்துமடி.
பாடு பாடு எனில் பாடிட மாட்டேனோ
படு படு என்றே பாடுற வைத்திட்டால்
பண்ணில் பரவசம் கூடுமோடி
பின் புத்தி கொண்டதினால்
எனை பின்னிருந்து தாக்குகின்றாய்
முன்னொரு காலத்தில்
மூவேளை உணவுண்டே
உயிருக்கு உணவுன்னை மறந்தேன்
மூன்றை இரண்டாக்கி பனிரண்டு வருடமாச்சு
ஒரு வேலையில்லாது
என் வேலை கெடுப்பதுவே
உன் வேலை ஆகிவிட்டால்
வேலை பிடித்தவனாம் மழலை முருகனுக்கும்
அவன் தாய் இங்குனக்கும் என்னடி வேறுபாடு
என் தமிழே தரணியெங்கும் வலம் வந்தால்
இடம் போகும் உலக பீழையெல்லாம்
என் திட்டம் அமலானால் செல்வமகன் ஆகானோ உலக ஏழையெலாம்
விரல் நுனியில் வைத்துள்ளேன் விசுவத்து நோய்க்கெல்லாம்
விரைவான தீர்வுகளை
வேலை தனை எடுத்தாய்
புது வேலை நீ தரவே அதை பறித்தாய் என்றிருந்தேன்
தொழிலை துவள வைத்தாய்
தொழிலில் எழிலை கூட்ட
உந்தியில் தழலை வைத்தாய்
என்றே மழலை நான் நினைந்தேன்
இடி பல இறக்குகின்றாய் இங்கென் தலை மேலே
மின்னல் ஒளி கொண்டு
என் தலை மேல் எழுத்தினையே
படித்து திருத்துவை என்று கவி நான் கவி புனைந்தேன்.
ஆருண்டு உனக்கென்று அகிலமிசை பாட்டு தர
உனை விடுத்தால் பல கோடி தேவர்கள் எனக்குண்டு
அவரும் உன் போலே ஊற வைத்திட்டால்
பகுத்தறிவு பகலவனாம்
பெரியார் தந்திட்ட நாத்திகம் தானுண்டு நெஞ்சுக்கு உறுதி தர
இறுதியாய் கூறுகின்றேன்
இன்னல் யாவுக்கும் இறுதி என்றிடுவாய்
என் பாட்டின் மறைபொருளை
உணர்ந்து கன்னம் கன்றிடுவாய்
அம்மா நானுனக்காய் பாடி வைத்த பாட்டெல்லாம்
பார் மிசை இசையானால்
தீரா விசையாகும்
மண்ணுலகே பொன்னுலகாய் பேரொளி வீசுமடி.
அதற்கொரு வழி காட்டி
கொண்ட பழி துடைக்காது
மேலும் வருத்துகின்றாய்
வறுமையிலே பொருத்துகின்றாய்
நித்தியம் தொழுதிட்டேன்
சத்தியம் துலங்கியது
துலங்கி என்ன பயன் கவி புவி செவி சேரனுமே
உளம் நொந்து சொல்லுகின்ற சொல்லு
அந்த ஸ்ரீராமன் கை கொண்ட வில்லு
காத்து விடு காத்து விடு என்னை
காக்க விடு காக்க விடு தாய் நாட்டு மண்ணை.