Friday, July 24, 2009

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்+போர்டு சேர்மன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்கள்





முன்னுரை:
தமிழக பக்தர்கள் மேல் திருப்பதி என்று குறிப்பிடும் திருமலையில் கொலுவிருக்கும் ஏழுமலையானுக்கு அறிமுகம் தேவையில்லை. திருமலை என்றதும் மொட்டையும் ,லட்டும் உடனே நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் திருமலை என்றால் அங்கு கோலோச்சும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், போலி லட்டுகள், ஏழை-பணக்கார பக்தர்களிடையே வெளிப்படையாக காட்டப்படும் பாரபட்சம் ,தேவஸ்தானத்துக்கென்று துவங்கப்பட்ட எஸ்.வி.பக்தி சேனலில் வீணாகும் ஏழுமலையான் உண்டியல் பணம் எல்லாம் நினைவுக்கு வந்து இம்சை செய்கின்றன. கடந்த ஜூலை 21 ஆம் தேதி தி.தி.தே. நிர்வாக அலுவலர் எஸ்.வி.பக்தி சேனல் தயாரிக்கவிருந்த காசுக்காகாத நிகழ்ச்சிகள் 12 க்கு தடா விதித்தார். உப்பு ஊறுகாய்க்கு உதவாத கேள்வி பதில் நிகழ்ச்சி ,அதில் கலந்து கொள்ளும் வாய்தா போன சினிமா பிரமுகருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் வீதம் செலவழித்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள்.


இப்படியாக அள்ளிவிட்ட பணமெல்லாம் தேவஸ்தானத்துக்கு எப்படி வந்தது . இதெல்லாம் யாருடைய பணம் ? மக்கள் அரசுக்கு இழவே என்று அழுத வரிப்பணமல்ல. ஏழுமலையானுக்கு பக்தர்கள் மனமுவந்து அளித்த காணிக்கைகள்.

ஒரு மானிலத்துக்கு மட்டும் தொடர்புள்ளதல்ல:
திருமலை என்பது ஏதோ ஒரு மானிலத்துக்கு மட்டும் தொடர்புள்ளதல்ல. ஏழுமலையானை சாதி,மதங்களுக்கு அதீதமாக பாரத நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ,ஏன் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள் , திருமலை என்பது உணர்வு ரீதியாக இந்தியர்களின் இதயங்களோடு பின்னிப்பிணைந்துள்ளது
எனவே இந்த பதிவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது சுமத்தப்படும் சரமாரி குற்றச்சாட்டுக்களை அலசுவோம்.

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா (டி)" என்ற திரைப்பாடல் வரிக்கிணங்க பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலை வந்து குவிந்த படியே உள்ளனர். உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளை குவித்துக்கொண்டே உள்ளனர். ஆனால் திருமலை நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு (இனி தி.தி.தே என்று குறிப்பிடுவோம்) தொடர் விமர்சனங்களுக்கு இலக்காகி வருகிறது.
புராணம்:
ஸ்தல புராணம் என்ன சொல்கிறது ? ஏழுமலையானாக அவதரித்த பெருமாள் , அரசகுமாரியாக பிறந்த திருமகளை பெண் கேட்டு தன் தாய் வகுளாதேவியை அனுப்புகிறார். திருமண செலவுகளுக்கு என்ன செய்ய ? குபேரனிடம் கடன் வாங்குகிறார். அந்த கடனை தீர்க்கத்தான் நம்முடைய உதவாக்கரை வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியபடி நாம் கொடுக்கும் நூறு இரு நூறுகளை கானிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.கலியுக முடிவில் குபேரனிடம் வாங்கிய பணத்தை செட்டில் செய்தாக வேண்டும். ஆனால் தேவஸ்தானம் என்ன செய்கிறது? ஏழுமலையான் நாளெல்லாம் நின்று அருள்பாலித்து ஈட்டிய காணிக்கைகளையெல்லாம் வந்தது வந்தபடி வேட்டு விட்டுக்கொண்டே இருக்கிறது.
ஏதோ மானவ சேவா மாதவ சேவா என்று செலவிட்டாலும் பரவாயில்லை. யானைக்கு அல்வா வாங்கிய கதையாய் வேட்டு விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.


சரித்திரம்:
பழந்தமிழ் நாட்டின் எல்லையைப்பற்றிய பழம்பாடல் "வடக்கே திருவேங்கடம் முதல் தெற்கே குமரி வரை என்று குறிப்பிடுகிறது. திருவேங்கடம் என்றால் திருமலை என்று பொருள். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மொழிவாரி மானிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கர்கள் "மதறாஸ் மனதே (நம்முடையது)" என்று கோஷம் போட, தமிழ் நாட்டில் காலஞ்சென்ற ம.பொ.சி போன்றவர்கள் திருவேங்கடம் தமிழகத்தின் வட எல்லை எனவே அது தமிழகத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடினர். ஆனால் ஏழுமலையான் சங்கல்பம் வேறாக இருக்க திருமலை ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது.

அரசியல் வரலாறு:
தமிழகத்தில் ஒரு பெரியாரின் தாக்கம் அவருக்கு பின் வந்த அனைத்து ஆட்சிகளிலும் இருந்தது. இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி ஒரு விதி விலக்கு. ஆனால் ஏழுமலையான் செய்த புண்ணியம் ஆந்திரத்தில் நாத்திக வாதம் வலுப்பெறவில்லை. ஜன விக்னான வேதிகா (மக்கள் அறிவியல் மேடை) , விப்லவ ரசயித்தல சங்கம்(புரட்சிகர எழுத்தாளர் சங்கம்) , போன்றவை நாத்திக வாதத்தை முன் வைத்தாலும் ஆந்திர அரசியல் ஆத்திகமாகவே தொடர்கிறது.

என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு முன்:
என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு முன் திருமலை அனேக புண்ணியக்ஷேத்திரங்களில் ஒன்றாகவே இருந்தது. ஏதோ கும்பலில் கோவிந்தா போட்ட கதையாகத்தான் திருமலையில் வளர்ச்சிப்பணிகளும் ,பக்தர்களுக்கான வசதிகளும், உள் கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு பின்(1989) :
என்.டி.ஆர் அரசியலில் குதித்து முதல்வரானார். ஏழுமலையானின் பக்தரான என்.டி.ஆர் வாடிகன் நகரம் போல் திருமலைக்கு பிரத்யேக அந்தஸ்து கொடுத்தார். அங்கு அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. என்.டி.ஆரே திருமலை வந்தாலும் சாதாரண பக்தர் போல் ரூ.50 டிக்கட் வாங்கி க்யூவில் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அங்கே அக்காலத்தில் ஸ்திரம்,சம்பிரதாயம்,ஆகமம்,பராம்பரியம் என்ற வகையில் பிராமணர்கள் அடித்து வந்த கொள்ளைக்கு ஆப்பு வைத்தார். (ஏழுமலையானுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களில் கூட அவர்களுக்கு பங்கு இருந்ததென்னால் பார்த்துக் கொள்ளுங்கள். திருமலையிலான இதர தலங்களுக்கு இலவச பஸ் வசதி,பக்தர்களுக்கு இலவச மொட்டை,இலவச உணவு ,ஒருவருக்கு ஒரே லட்டு போன்ற சீர்திருத்தங்கள் அமலாகின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ஸ்ரீனிவாசம் போன்ற கட்டிடத்தொகுப்புகள் கட்டப்பட்டன. முக்கியமாக பக்தர்கள் நீண்ட நேரம் க்யூவில் நின்று அவதிப்பட தேவையில்லாது க்யூ காம்ப்ளெக்ஸுகள் கட்டப்பட்டன. விமான நிலையத்து லவுன்ச் போன்ற வசதிகளுடன் (டீ,காபி,டிஃபன்,டி.வி,பாத்ரூம், கழிவறைகளுடன்)

காங். ஆட்சியிலும் தொடர்ந்த வளர்ச்சி திட்டங்கள்(1989-1994):
இடையில் வந்த காங்கிரஸ் ஆட்சியும் என்.டி.ஆர் துவக்கி வைத்த வளர்ச்சி பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்தது. கீழ் திருப்பதியில் இறங்கியதுமே பஸ்,ரயில் நிலையங்களின் அருகிலேயே ஸ்ரீ வாருவை தரிசிக்க கம்ப்யூட்டரில் முன் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

என்.டி.ஆர் முதுகில் குத்தி சந்திரபாபு முதல்வரானார் (1994):
1994 ல் என்.டி.ஆர் மீண்டும் முதல்வரானார். சந்திரபாபு கட்சியை பிளந்து என்.டி.ஆர் முதுகில் குத்தி முதல்வரானார். என்.டி.ஆருக்கும் சந்திரபாபு அடிப்படையில் இருந்த வித்யாசம் என்னவென்றால் என்.டி.ஆர் லட்சியத்திலான வெற்றியை இரண்டாம் பட்சமாககருதியவர் . அதை அடைவதற்காக தமது சுயமதிப்பையோ , தான் நம்பிய கொள்கையையோ எள்ளளவும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால் சந்திரபாபு கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். என்றாலும் திருமலை விஷயத்தில் இவரும் வளர்ச்சிப்பணிகளை தொடரவே செய்தார். தமது தாராளமயமாக்கல்,தனியார் மயமாக்கல், போன்ற கொள்கைகளை திருமலை விசயத்தில் அடக்கியே வாசித்தார்.


இப்போதைய லிக்கர் கிங் தி.தி.போர்டு சேர்மனான கதை:

தற்போது தி.தி.போர்டு சேர்மனாக உள்ள லிக்கர் கிங் டி.கே ஆதிகேசவுலுவின் கதை பெரிய கதை. இதில் அவர் தி.தி.போர்டு சேர்மனாக ஆன கதை தெலுங்கு டப்பிங் சினிமா கதைகளையும் தூக்கி சாப்பிட்டுவிடும்.

ஒரு காலத்தில் சித்தூர்-திருப்பதி சாலையில் உள்ள சித்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இஞ்சினீயராக வேலை பார்த்த இவர் போலி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று குற்றச்சாட்டு எழவும் ஆதி கேசவுலு ராஜினாமா கொடுத்து விட்டு ஊரை விட்டுப்போனதோடு இவர் கதை ஆரம்பமாகிறது. 2004 முதல் தெலுங்கு தேசத்தில் சித்தூர் எம்.எல்.ஏ டிக்கட் பெற முயன்று அது முடியாது போகவே , 2009 தேர்தல்களில் பிரஜாராஜ்ஜியத்தில் சித்தூர் டிக்கட் வாங்கி போட்டியிட்ட் தோற்ற ஜங்காலபல்லி சீனிவாசுலு இந்த 5 வருடங்களில் செலவிட்ட தொகை மட்டும் ரூ.40 கோடி. (2009ல் சித்தூரில் நடந்த சட்டமன்ற தேர்தலிடம் திருமங்கலம் இடைத்தேர்தலெல்லாம் பிச்சை வாங்கனும்) அவர் ஆதிகேசவுலுவின் சீடர் என்றால் ஆதி கேசவுலுவின் ரேஞ்ச் என்ன என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ஆந்திரம்,கர்னாடகா ,மற்றும் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கில் புரளும் வியாபாரங்கள் உண்டு. இஞ்சினீரிங் கல்லூரி ஒன்றும் இவருக்கு சொந்தம். சிரஞ்சீவியின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்ததே இவர்தான் என்றால் இவரது செல்வம்,செல்வாக்குக்கு வேறென்ன ஆதாரம் தேவை. சித்தூரில் பளிங்கு மாதிரி தண்ணீரை கொண்டிருந்த நீவா நதி இன்று சாக்கடையாக கிடக்க காரணமே இவர் சித்தூர் வேலூர் சாலையில் நடத்திய மதுபானத்தொழிற்சாலையிலிருந்து மேற்படி ஆற்றில் விடப்பட்ட கழிவு நீர்தான். மேலும் சித்தூர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ வாக வெற்றிபெற்று ஹேட்ரிக் அடித்த சி.கே.பாபு மீது நடந்த இரண்டு கொலை முயற்சிகளில் இவரது மகன் டி சீனிவாசுலு குற்றவாளியாக உள்ளார். இப்படிப்பட்ட பின்னணி உள்ள ஆதி கேசவுலு தி.தி.போர்டு சேர்மனாக ஆனது எப்படி என்பதை இப்போது பார்ப்போம் ! (இவ்வாறான பின்னணி உடையவரின் நிர்வாகத்தில் என்னதான் நடக்காது ?)

காங்.கட்சி சார்பில் எம்.பி.யாக போட்டி:

சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் சந்திரபாபுவின் தொகுதி. அங்கு சந்திரபாபுவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தற்போதைய தி.தி.தே போர்டு சேர்மனான டி.கே.ஆதிகேசவுலுவை எம்.பி.யாக நிறுத்தியது. பெரும் தொழிலதிபரான ஆதிகேசவுலு பணத்தை பாராளுமன்ற தொகுதியெங்கும் வாரி இறைத்தார். சந்திரபாபு குப்பத்தில் தம் வெற்றிக்காக ரொம்பவே மெனக்கெட வேண்டி வந்து விட்டது. சூடுகண்ட பூனையான சந்திரபாபு ஆதிகேசவுலுவை தம் கட்சிக்கு இழுத்தார். இழுத்ததோடு தி.தி.தே போர்டு சேர்மனாகவும் ஆக்கினார். 2003 ல் திருமலை காட் ரோடில் சந்திரபாபு கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதை அடுத்து அனுதாப ஓட்டுக்களை அள்ள முன் கூட்டியே சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு சென்றார் சந்திரபாபு.அவரது தெலுங்கு தேசம் கட்சி சக்கையாய் தோற்றது .காங். ஆட்சியை பிடிக்க டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வரானார். தி.தி.தே.போர்டு சேர்மனாக தமது பிரிய சீடர் பூமண கருணாகர ரெட்டியை நியமித்தார். அவரும் ஏழுமலையானை சேரி மக்களுக்கு நெருக்கமாக்க தலித கோவிந்தம், இலவச திருமணங்கள் (கல்யாணமஸ்து ) என்று தீவிரமாகவே செயல்பட்டார்.

ஆதி கேசவுலு தெலுங்கு தேசம் எம்.பி.யானார்:
1999ல் சித்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி யாக போட்டியிட்டு குப்பத்தில் சந்திரபாபுவுக்கு தூக்கமில்லாமல் செய்த ஆதிகேசவுலு 2004 ல் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு சித்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் சட்டமன்ற தேர்தல்களில் சந்திரபாபுவை விட அதிகம் வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து சந்திரபாபு மாவட்ட கட்சிக்கே ஆதிகேசவுலுவை அறிவிக்கப்படாத பொறுப்பாளராக்கினார். மத்தியில் இடது சாரிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி அணு ஒப்பந்த விசயத்தில் அவர்களின் ஆதரவை இழந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டி வந்தது. சந்திரபாபு காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அந்த நிலைப்பாட்டுக்கு ஆதிகேசவுலு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததும், வாக்கெடுப்பின் போது காட்டிய தயக்கமும் சந்திரபாபுவை எரிச்சலூட்டியது , கட்சியின் நிலைப்பாட்டுக்கேற்பவே வாக்களித்தும் ஆதி கேசவுலுவை கட்சியை விட்டு நீக்கினார் சந்திரபாபு.

காங்கிரசில் சேர்ந்தார் தி.தி.போர்டு சேர்மனானார்:
சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்ஜியம் கட்சியிலிருந்து சிவப்பு கம்பள மரியாதை உறுதியளிக்கப்பட்டாலும் ஆதிகேசவுலு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புது தில்லி அளவில் காய் நகர்த்தி தி.தி.போர்டு சேர்மனாகவும் ஆனார். உள்ளூர் காங்கிரஸ் கட்சி ஹேட்ரிக் எம்.எல்.ஏவுடனான உரசல்களை தவிர்க்க ஆதிகேசவுலுவை தள்ளி வைக்கவே தி.தி.தே போர்ட் சேர்மன் பதவி அவருக்கு தரப்பட்டது

இதற்கு பின் நடந்த கூத்துக்கள்தான் எத்தனை எத்தனை ?

1.வட இந்தியாவை சேர்ந்த ராம் தேவ் பாபா பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அவர் ஆதிகேசவுலுவின் மதுபான தொழிற்சாலை பின்னணியை விவாதமாக்கினார். ஆதிகேசவுலு மட்டும் இதை மறுக்கவில்லை. ஆமாம் எங்கள் குடும்பம் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தது நிஜம் தான் . ஆனால் இப்போது இல்லை என்றார். மேலும் ராம் தேவ் பாபா மீது ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்ட குற்றச்சாட்டுக்களை (ஹோமியோ மருந்தில் மிருக,மனித எலும்புகள்) புதிது போல் அள்ளி வீசினார்.
2.திருமலையில் விரிவாக்க பணிகளுக்காக அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு மாமாங்கமாகியும் நிர்வாகம் அவர்களுக்கு எந்த வித நஷ்ட ஈட்டுக்கோ ,மாற்று ஏற்பாடுகளுக்கோ முனையவில்லை. இதையடுத்து அந்த மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆதிகேசவுலுவின் காரை மறித்தனர். அப்போது ஆதிகேசவுலு என்ன செய்தார் தெரியுமா ?" காரை நிறுத்தாதே வாகமா ஓட்டு " ட்ரைவருக்கு கட்டளையிட்டார்.
3.திருமலைக்கோடி சாமியாருக்கு புஷ்பாபிஷேகம்:
உங்களில் பலரும் அறிந்திருக்கமாட்டீர்களோ என்னவோ ? திருமலையில் பெருமாளை தவிர பெண்கள்,குழந்தைகள் யாரும் பூச்சூடக்கூடாது என்று ஒரு விதி உள்ளது. தேவஸ்தானம் வெளியிடும் "சப்தகிரி" மாத இதழின் ஒவ்வொரு இஷ்யூவிலும் இந்த விதி தவறாது இடம்பெறும். இது இப்படியிருக்க ஓம் சக்தி அம்மா நாராயணி என்று அழைக்கப்படும் சாமியாருக்கு புஷ்பாபிஷேகம் செய்தார் ஆதிகேசவுலு.
4.ஆதிகேசவுலு பற்றிய அறிமுகத்தில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று புட்டபர்த்தி சாய்பாபாவின் அருமந்த பக்தர். திருமலையில் ஏழுமலையானுக்கு திருக்கல்யாணம் செய்யப்படுவது போல மானிலமெங்கும் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்களிலும் ,உள்ளூர் பெருமாள் கோவில்களிலும் திருக்கல்யாணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. நானே கடவுள் என்று கூறிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் புட்டபர்த்தி சாய்பாபா சோஃபாவில் அமர்ந்து புன்முறுவல் பூக்க வைட் ஃபீல்டில் ஸ்ரீனிவாச கல்யாணத்தை நடத்தி வைத்தார் அவர்.
5.அதோடு விட்டாரா லிக்கர் லாபி விஜய் மல்லய்யா திருமலை வந்த போது விதிகள்,சம்பிரதாயங்கள் சகலத்துக்கும் சமாதி கட்டி அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தார் சேர்மன். பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் துளைத்தபோது "அவர் கோவிலுக்கு எவ்வளவோ செய்தார் அவருக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி என்று எதிர் கேள்வி கேட்டார்.
6.புண்ணியஸ்தலம் என்றாலே விபச்சாரம், மது, இத்யாதிக்கு குறைவிராது.அதிலும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் திருமலையில் சொல்லவே தேவையில்லை. ஆனால் இதையெல்லாம் கட்டுப்படுத்தி புண்ணியதலத்தின் புனிதத்தை காப்பாற்றத்தான் ஒரு போர்டு. அதற்கொரு சேர்மன். ஆனால் சித்தூரில் தமது அரசியல் எதிரியான சி.கே.பாபுவை எதிர்க்க ஆதிகேசவுலு ஒரு சாதி சங்க இளைஞரணி தலைவரை ப்ரமோட் செய்ய ஆரம்பித்தார். அந்த இளைஞர் சித்தூர் எம்.எல்.ஏ.சீட்டுக்கு கட்சி டிக்கெட் கேட்க ஐதராபாத் சென்றார். அவருக்கு ஐதராபாதில் பெருமாள் கோவிலை ஒட்டியுள்ள தேவஸ்தான காட்டேஜில் அறை கொடுக்கும்படி தேவஸ்தான சேர்மன் என்ற வகையில் ஆதிகேசவுலு லெட்டர் கொடுத்திருந்தார். அங்கே மேற்படி இளைஞரும் அவரது நண்பர்களும் புட்டி குட்டி என்று கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி வகையாய் படம் பிடித்து போட்டு போட்டு காட்டியது. ஆதி கேசவுலு அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. அதெல்லாம் மீடியாவோட செட்டப் என்று கூறிவிட்டார்.

கடந்த பொது தேர்தல்களின் போது சித்தூர் தனித்தொகுதியாகிவிட்டதால் ஆதிகேசவுலுக்கு டிக்கெட் ஃபணாலாகிவிட்டது. மேற்சொன்ன இளைஞருக்கு சித்தூர் டிக்கெட் கேட்டு தில்லி வரை அலைந்தும் வேலைக்காகவில்லை. அவரது அரசியல் எதிரி சி.கே.பாபுவுக்கே கட்சி டிக்கெட் கிடைத்தது. வெற்றியும் பெற்றுவிட்டார். ஆதிகேசவுலு தன் மகனுக்கு பலமனேர் டிக்கெட்டுக்கு முயற்சி செய்தார் .அதுவும் பலிக்கவில்லை. கடைசி முயற்சியாக கோடிகள் அள்ளிக்கொடுத்து தன் மகனுக்கு ப்ரஜா ராஜ்ஜியத்தில் ராஜம்பேட்டை எம்.பி டிக்கட் வாங்கினார். பணமழையே பெய்தும் தோல்விதான் மிஞ்சியது.

இப்படி மக்கள் ஆதரவோ, நம்பகத்தன்மையோ,இல்லாத ஆதிகேசவுலு போன்ற குற்றப்பின்னணியும்,மதுபான பின்னணியும் உள்ள நபரின் மேற்பார்வையில் நடக்கும் நிர்வாகம் வேறெப்படியிருக்கும் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

(Foot note: TTD EO YR.Krishnarao )