Thursday, July 30, 2009

இறைவன் உலகச்சிறையின் ஜெயிலர்

இறைவா !
நீ அழுத்தக்காரன் .உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை
நான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை
நீ ராமனிலும் ராவணனிலும்
ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ
உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு
நான் கொடுத்துள்ள செயல் திட்டம்

புராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்
பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்
ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்
நீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்

ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்
வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் !
அதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !

"பிட்டா பிடி" என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை
சூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்

இறைவா ! எங்கும் உறைபவா !
என் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா !

ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்
ஒளிர்ந்தவா !

நீ உலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற
பிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்
இது உனக்கு ஃபன் ! இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்
கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்
உன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு
பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்
ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது
கப்பலையே காலி செய்கிறாய்
நான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்
செவிடனாய் நடிக்கிறாய்

ஆம் நீ ஒரு செவிடன்
உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்

நீ ஒரு ஊமை
உன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர்
விளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது
பாப்கார்ன் சாப்பிடுகிறாய்
அவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது
காது குடைகிறாய்
இவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது
ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !
நீ ஒரு நல்ல செவிலித்தாய்
ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்
பிரசவிக்கப்படும்போது
தலை கீழாய் தொங்க விட்டு
புட்டத்தில் அறைகிறாய்

இறைவா !
நான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்
என் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்
உன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை
திரட்டுகின்றன

நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்
என்று புரிவித்தாய்
காதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு
உன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்
என்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்
கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்
உன் பாதம் பணிதலும்
உனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்
நன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே
உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்
நான் கேளாமலே தந்தாய்

அதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்


********
நீ ஒரு ஆசிரியன் .
கடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை
முன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்
தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்
நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்
தங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின் முன் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்
உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி
உன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது அம்னீஷியாவுக்கு
அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்.
நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்
அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்

துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்
அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி
ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு
உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்
எம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை
உனக்கு முகமன் கூறாவிட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி
நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்
பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)
எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை
அல்ஜீப்ரா கணக்காய்