Saturday, November 3, 2007
கிராஃபிக் III
குடிக்க கூழில்லை கொப்பளிக்க பன்னீர் என்ற பழமொழிக்கு எங்கள் பரசு ராமனைத்தான் உதாரணமாக சொல்ல வேண்டும். தங்கை கணவர் இவன் காலுக்கும்,கண்ணுக்கும் வைத்தியம் பார்த்து,இவன் பெண்குழந்தைகளுக்கு காது,மூக்குக்கு நகை வாங்கி கொடுத்து ,இவன் அம்மாவின் கேன்ஸருக்கு வைத்தியம் பார்த்து,பிணமெடுத்து,காரியம் செய்து,சித்தூர் வீட்டை ரிப்பேர் செய்து பூக்காரியை குடிவைத்து வாடகைக்கு வழி செய்த பிறகு காலுக்கு கட்டுப் போட என்று தங்கை கணவரிடம் பணம் வாங்கிக் கொண்டு காட்பாடி காவல் நிலயத்தில் புகார் கொடுத்துவிட்டு ஷாட் கட் செய்தால் சித்தூர் ,கிராஃபிக் ஆர்ட்ஸ். அப்போது நான் ஆந்திரபிரபாவில் ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் என்பது பிறகு அதற்கு முன்பே கூட மனிதாபிமான அடிப்படையில் இது போன்ற கேஸ்களை நான் டேக் அப் செய்வது வழக்கம். அந்த ஆயிரம் கேஸ்களில் பரசு ஒரு கேஸ்.
சத்யா பாஷையில் சொன்னால் துட்டு ,துக்காணிவராத கேஸ். நம் மொழியில் சொன்னால் தேங்காய் மூடி கேஸ். விவரம் அறிந்து ஆணித்தரமாக(துருப்பிடித்து விடாதோ) சொன்னேன். தர்மப்படி பார்த்தா சித்தூர் வீடு ராமலிங்கத்துக்கு தான் சொந்தம். ஆனால் சட்டப்படி பார்த்தால் உனக்கு மூணில் ஒரு பாகம் வரலாம். மயிரைக் கட்டி மலையை இழுப்போம் வந்தால் மலை போனால் மயிர் என்று ராமலிங்கத்துக்கு போன் போட்டேன். பந்தாவாய் ஆந்திர ப்ரபா ரிப்போர்ட்டர் என்று அறிமுகம் செய்து கொண்டேன்.மனிதர் பாவம் பயத்தில் வேட்டியை ஈரமாக்கிக் கொண்டிருக்கவேண்டும். நேரில் வந்தால் விவரம் சொல்வதாகவும்,பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்வதாகவும் கூறினார். நானும் சென்றேன்.
பார்ட்டி பஞ்சாயத்து துறையில் நிர்வாக அலுவலர். கிம்பளம் வாங்கியே பழக்கப்பட்டு உலகமே கிம்பள மயமாக காட்சியளிக்கும் மனநிலையில் இருந்தார். என் ஜாதகராசி இரண்டு கட்சியில் எவன் சோப்ளாங்கியோ அவன் தான் எனக்கு மாட்டுவான். நான் அந்த சோப்ளாங்கிக்காக சில சமயம் தர்மம் தவறியும் செயல்பட்டு அந்த சோப்ளாங்கியிடமே மொக்கையாவது தொடர்கதை. ரா.லி. என் வாயை மூட எத்தனை வேண்டுமானாலும் தரத்தயாராக இருந்தார். ஆனால் நான் பில்/குல் பரசுவுக்கு பாகம் வாங்கியே தீருவதாய் இருந்தேன்.என்றாலும் அவர் என்னை வெறுங்கையுடன் அனுப்பவில்லை.