Friday, November 2, 2007

சிரிப்பா சிரிச்சி

நான் 1987 ல் பாக்யாவில் என் சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாகி கொண்டிருந்த நேரம் அப்போது என் அண்ணன் செல்வராஜின் நண்பர் திரு.வளையாபதி திரு.கே.சி.முனி எனும் ஜோதிடரிடம் அழைத்துச் சென்றார். * சரித்திரத்தில் உங்களுக்கு ஒரு இடம் கர்சீஃப் போட்டு வச்சிருக்கு என்றதால் அவரை மன்னித்தேன். கோபத்துக்கு காரணம் உங்க எழுத்துல சோகச்சுவையை கொண்டுவாங்க என்ற அவர் ஆலோசனை தான்.

1989க்கெல்லாம் " நோவும் என்னை விரும்பவில்லே/சாவும் என்னை நெருங்கவில்லே என்று கவிதை எழுதும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது நினைத்தால் அந்த சிச்சுவேஷனுக்கு அந்த வரிகள் ஓவர் ஆக்ஷன் என்று தோன்றுகிறது. அதன் பிறகு எத்தனையோ முறை என் மானம் ஆக்ஷனில் போனதை பார்த்து பார்த்து பார்ப்பதையே விட்டு விட்டேன். நிற்க..

ஒரு காலத்தில் சோகச்சுவை நிரம்பிய திரைக்காவியங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. காரணம் அப்போது மக்களின் தேவை குறைவு, தேவைகள் நிறைவேறுவதற்கான மார்கங்களில் சிக்கலிருந்தது. எனவே ,மக்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாது பசுமை நிறைந்த நினைவுகளில் மூழ்கியிருந்தனர்.

இப்போது அகன்ற திரையில் தாத்தாவுக்கு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை ஓப்பனிங்க் ஷாட்டிலிருந்து சுபம் போடும்வரை அலம்பல் செய்தால் தான் ரசிக்கிறார்கள்.

காரணம் மக்களின் வாழ்வு சோகமயமாகிவிட்டது. மனித மனம் விசித்திரமானது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவது தானே நம் பாணி. சுக ஜீவனத்தில் சோகம் வெல்கிறது. சோகவாழ்வின் போது சுகஜீவனத்தை கனவு காண்கிறது.

உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம்,மேற்க‌த்திய‌ க‌லாச்சார‌ம்,க‌ன்ஸியூம‌ரிச‌ம்,பெருகிவிட்ட‌ தேவைக‌ள்,போட்டிக‌ள் என்று ம‌னித‌ வாழ்வு புலிவாலை பிடித்துவிட்ட‌ நாய‌ர் க‌தையாகிவிட்ட‌து.

அதை விட‌வும் முடியாது. இந்த‌ நிலையில் மேற்சொன்ன‌ சுக‌ஜீவ‌ன,ஃப்ளாஷ் பேக் கதைகள் (உ.ம்;ஆட்டோகிராஃப் ) கிருபான‌ந்த‌ வாரியார் சொன்ன‌ தேன் துளிக‌ள் ஆகிவிடுகின்ற‌ன‌.

என‌வே என் ப‌ங்குக்கு சிரிக்க‌ வைக்க‌ முடியாவிட்டாலும் முய‌ன்று பார்க்கிறேனே !

என் ந‌ண்ப‌ர் ச‌த்யா. (இவ‌ரும் ஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌ வ‌ளையாப‌தி மாதிரி என் அண்ண‌ன் செல்வ‌ராஜின் ந‌ண்ப‌ரான‌ கிராஃபிக் ர‌வி மூல‌ம் அறிமுக‌மான‌வ‌ர்தான்) வ‌ய‌து 50. குடிகார‌ன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்க‌ள். ச‌த்யா விஷ‌ய‌த்தில் செட்டியார் ஒழுக்க‌ம் இர‌வு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்ல‌வேண்டும்.

தினசரி காலை எழுந்து துள‌சி வாங்குவ‌தென்ன‌,பூ வாங்குவ‌தென்ன‌ ம‌ணிக்க‌ண‌க்கில் பூஜை போடுவ‌தென்ன‌..க‌ராறாய் வியாபார‌ம் செய்வ‌தென்ன‌..ஏழும‌லையானே சும்மா பார்த்துட்டு போக‌லாம்னு வ‌ந்தேன் என்று வ‌ந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.

இரவு 9 ஆனால் போதும் கழுதை கெட்டால் குட்டிசுவர் கணக்காய் வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.

இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).

அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.

சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரிய‌ர் டெக்க‌ரேஷ‌ன் செய்ய‌ப்ப‌ட்ட‌ முத‌ல் க‌டை ச‌த்யாவின் க‌டைதான். செட்டியார்க‌ளில் முத‌லில் ச‌ட்டையை இன்செர்ட் செய்த‌து ச‌த்யாதான். க‌டையை திற‌ந்து வைத்த‌து எஸ்.பி. இடையில் சில‌ கால‌ம் கிருஷ்ண‌கிரியில் அக்காவின் ப‌ல‌ச‌ர‌க்கு க‌டையில் பொட்ட‌ல‌ம் க‌ட்டிய‌ அனுப‌வ‌மும் உண்டு என்றாலும் இப்போது க‌டை மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து கொண்டிருக்கிற‌து .

ஆறு மாத‌ங்க‌ளாய் அட‌கில் மூழ்கிய‌ வ‌ண்டியை ஓட்டி அலுத்து விட்ட‌ ச‌த்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ண‌ம் வ‌ந்து விட்ட‌து. வாங்கியாயிற்று. தீர்த்த‌ம் முடிந்த‌து.

தீனிக்கு விஷ்ணுப‌வ‌ன் சென்றோம். ச‌ர்வ‌ர் இறுதியில் கிடைக்க‌ப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக‌ ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.

ச‌த்யாவின் மூளை ப‌டுவேக‌த்தில் வேலை செய்யும். இத‌ற்கு சாட்சி ப‌ட‌ப‌ட‌த்துக் கொண்டே இருக்கும் கை விர‌ல்க‌ள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உத‌டுக‌ள்.

இத‌னால் ச‌த்யாவின் பேச்சு ஜெட் வேக‌த்தில் வெளிப்ப‌டும் .சில‌ நேர‌ம் எதிராளிக்கு புரிவ‌து க‌ஷ்ட‌மாகிவிடும்.

ச‌த்யா ச‌ர்வ‌ரை கிட்டே அழைத்து நிற்த்து நிதான‌மாக‌ வார்த்தை வார்த்தையாக‌ "கொஞ்ச‌ம் மோர், கொஞ்ச‌ம் ர‌ச‌ம் கொண்டு வா" என்றார். அப்போது ச‌த்யாவின் பாடி லேங்குவேஜில் ஏதோ த‌வ‌று இருந்திருக்க‌ வேண்டும் .

ச‌ர்வ‌ர் ஒரே த‌ம்ள‌ரில் மோரையும்,ர‌ச‌த்தையும் ஊற்றி ,ஆற்றிய‌ப‌டியே கொண்டு வ‌ந்த‌தை பார்த்து திருவிளையாட‌ல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இய‌ங்க‌ ஆர‌ம்பித்த‌தை சொல்லித் தானாக‌ வேண்டும்.