ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.
ஆம் ..மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காணமுடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள்,8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படை தத்துவம் இதுதான்…….
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..
நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இனி சற்று விரிவாக பார்ப்போம்.