இது ஏதோ சினிமா டைட்டில் சாயலில் இருக்கிறதே என்று தோன்றினால் உங்கள் ஞாபகசக்திக்கு ஜே!
பெண்கள் வீட்டின் கண்கள்:
என் அம்மா அந்த காலத்திலேயே படித்து டீச்சராகவும் வேலைப் பார்த்தவள். மணியக்காரரின் மகள். என் அம்மாவுக்கான சீர் வரிசைகள் வந்து இறங்கியதை இன்றைக்கும் கதை கதையாக சொல்ல ஆளிருக்கிறது.
என் அப்பாவைப் பெற்ற தாத்தா எல்லா வியாபாரங்களையும் 6 மாதங்களுக்கு அதிகமில்லாமல் செய்துப் பார்த்து விட்ட பார்ட்டி. பாட்டி இட்டிலி சுட்டுத்தான் என் அப்பாவை படிக்க வைத்தாளாம். மணியக்காரரின் மகள்,இட்டிலி கடைக் காரியின் மகளை மணந்தது எப்படி என்று நாளிது வரை தெரியாது.
1967 முதல் 1984 வரை பார்த்திருக்கிறேன், எழுத்தாளன் என்ற ஹோதாவில் ரகசியமாக விசாரித்துமிருக்கிறேன்..ஒரே ஒரு மி.கி. அதிருப்தியை கூட வெளியிட்டதில்லை. என் பாட்டியின் அக்காள் மகனின் ('குடி' மகன்) தெரு நடையிலான மூத்திரத்தைக் கூட கழுவித் தள்ளியிருக்கிறாள். மைத்துனர்கள்,நாத்தனார் கல்யாணங்களுக்கெல்லாம் என் அப்பா வாரிவிட்ட போதெல்லாம் ஒரு பேச்சு கூட தடை சொன்னதில்லை.
மைத்துனர்கள் தனிக்குடித்தனம் போனார்களே தவிர என் அம்மா என்னவோ அதே வீட்டில் வாழ்ந்து செத்தாள்.
என் அப்பாவின் பெரியப்பா மகன் வந்தாலும் எங்கள் வீட்டில் தான் தங்கல். ஆரணி நில தகராறு விஷயமாக ஆண்டு கணக்கில் லாட்ஜு வைத்தியர் போல் வந்து போய் கொண்டிருந்தார். கடைசியில் கோர்ட்டு கேஸ் ஜெயித்து என் அப்பாவின் பங்கு வந்த போது தன் தங்கைக்குத் தான் தாரை வார்த்தார்.இப்படி எத்தனை எத்தனை இலவச சேவைகள். இவ்வளவுக்கு பின்னும் பெயர் என்னவோ கிடைக்காது.
என் அப்பா தாய் சொல்லைத் தட்டாத தனயன். என் பாட்டி சரியான அரசியல் வாதி. இன்னும் கேட்க வேண்டுமா? வாடகை வீடு சொந்த வீடானது.மழையில் இடிந்து வீழ்ந்தது. ஒரு மாவட்ட கருவூல அதிகாரியின் வீடு மழைக்கு இடிந்து வீழ்ந்தது இந்திய சரித்திரத்திலேயே முதலும் கடைசியும் இதுவாகத்தானிருக்க வேண்டும். என் அப்பாவின் நேர்மை அப்படிப் பட்டது.
இடிந்த வீட்டுக்கு கோழிப் பண்ணைக்கு கூட போட தயங்கும் லைட் ரூஃப் போட்டு சாதனை படைத்தார் என் தந்தை. சில வருடங்கள் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தார். அது ஒரு கூத்து. சுவரை(மண்) இடிக்கக் கூடாது,ப்ளான் மாத்தக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள். சிமெண்டு த்ராய்கள் போட்டு,அதன் மேல் சிமெண்டு பலகைகள் போட்டு கட்டினார். ஒரே நாளில் கூரை போட்ட கின்னஸ் சாதனையும் என் அப்பாவுக்கே சொந்தமானது.
இதில் என் அம்மாவின் மார்பில் கட்டி கிளம்பி, நான் அது கேன்ஸராக இருக்கலாம் என்று கூறி வில்லனானதும்,கருப்பையிலான கேன்ஸர்,வயிற்றுக்கு பரவி பரிதாபமாக செத்ததும் தனிப்பட்ட சோகங்கள்.
இப்படிப் பட்ட பெண்களை கண்கள் என்று ஜல்லியடிக்க மாட்டேன். இவர்கள் சற்றே சுயநலம் கற்று,வயிற்றில் புண் (வேளா வேளைக்கு சாப்பிடாது),சைனஸ் (தலையை துவட்ட கூட நேரமில்லாது) போன்றவற்றை தவிர்த்தால் கண்கள் என்று ஒப்புக்கொள்வேன்.
(பெண்கள் வீட்டின் புண்கள் வாதம் மற்றொரு சந்தர்ப்பத்தில்)
(பெண்கள் வீட்டின் புண்கள் வாதம் மற்றொரு சந்தர்ப்பத்தில்)