1.எதுவுமே 100 சதவீதம் உண்மையுமல்ல, 100 சதவீதம் பொய்யுமல்ல. இந்த நூலின் தலைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். உண்மைகள் 100 தானா ? இல்லை. ஆனால் இந்த நூலைப் பொறுத்தவரை 100 உண்மைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
2.ஒரு விஷயத்தை இது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் அணுகுவதை விட இது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அணுகி ஆராய்வது நல்லது.
3. உணர்ச்சி என்பது குருட்டுத் தனமானது. உண்மை, ஞான கண்களுக்கே கண்ணாமூச்சி காட்டும். கண்களே அற்ற உணர்ச்சி வழியே உண்மைகளை பார்ப்பதும்,கேட்பதும்,சொல்வதும் குருட்டுத் தனமாகத்தான் முடியும். (உ.ம்) ராமர் பாலம்
4.உண்மை என்பது வலியை,வேதனையை,துக்கத்தை தருவதாகும். எனவே எவரும் உண்மையை விரும்புவதில்லை. எனவேதான் உண்மைக்கு இந்த உலகத்தில் இடமில்லை. மனிதன் சுகத்தை தேடுபவன். சுகம் நம்மை பலவீனப் படுத்துகிறது. உண்மையில் சுகம் கிடைக்காது. எனவேதான் எல்லோரும் பொய்யிலேயே வாழ்ந்து முடிகிறார்கள் . எனவேதான் எல்லோரும் பலவீனர்களாக இருக்கிறார்கள்.
5.மனிதன் ஒரு மிருகம். அவனை மிருகமாக எண்ணி டீல் செய்தால் வெற்றி நிச்சயம். நம் அரசியல் சாசனம் மனிதர்களை மனிதர்களாக கருதி எழுதப்பட்டது. அதனால் தான் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டு முடிந்தும் பசியையும்,சுரண்டலையும் ஒழிக்க முடியவில்லை. காவல் துறை ஒரு பிரச்சினையை டீல் செய்யும்போது குறைந்த பட்சம் அந்த நேரத்திற்காவது வெற்றி கிடைக்கிறது, காரணம் அது மனிதர்களை மிருகங்களாக கருதி செயல்படுகிறது. காவல் துறையில் உள்ளவர்களும் அதிக சதவீதம் மிருகங்களே.
6.மனிதன் உண்மைகளை பார்க்க மறுக்கிறான். நாம் பார்க்க மறுத்தாலும் உண்மை மறைந்து போவதில்லை. அது நெருப்பை போன்றது. மனித உடல் என்பது உண்மையானது. அதன் பசி உண்மையானது. வயிற்றுப் பசி,உடல் பசி யாவும் உண்மையானவை. மனிதன் அதை மறுக்கிறான். அது அவனை எரிக்கிறது.
7.அடக்கிவைக்கப் பட்ட செக்ஸ் உணர்வுகளே வன்முறையாகவும்,பணத்தின் மீது ,அதிகாரத்தின் மீது வெறியாகவும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதன் செக்ஸை ஒழுங்காக அனுபவிக்க கற்றுக் கொண்டால் அவன் மனிதனாகிறான். இல்லாவிடில் மனித வடிவிலான மிருகமாக மாறுகிறான்.மனித வடிவிலான மிருகம் எப்போது வெளிப்படும் என்பதை யாரும் ஊகித்து சொல்ல முடியாது