பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல . சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன். சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேணா விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன். மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்த பணத்தில் சும்மா தின்று சுற்றிவர விரும்பாது அஞ்சறை டப்பாக்களில் இருந்து அம்பது, நூறு சுட்டு சித்தூர் வந்து மாமன் பிடியிலிருந்து தாய்வீட்டை மீட்க பாடுபட்டவன் இந்த பரசுராமன். பரசுவின் தாய்க்கு சொந்த தம்பி ராமலிங்கம்.காட்பாடியில் ஈ.ஓ. பரசுவின் சொந்த தங்கையைத்தான் ராமலிங்கம் கட்டினார். பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார். பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ? பேத்திகளை குழந்தையில்லாத தன் தம்பியே கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ? சித்தூர் வீட்டை தன் தம்பி ரா.லி. மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார். இந்த வீட்டில் தான் நவபாரத சிற்பியான நான் குடியுள்ளேன். எனக்கும் பரசுவுக்கும் 20 வயது வித்யாசம். மூஞ்சி..முகம் கூட தெரியாது..ஆனால் நாந்தான் குடியுள்ளேன்..அது எப்படி? இதை நான் விவரிக்கப் போவது சுயதம்பட்டம் அடிக்கவல்ல.. ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை இதில் சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன். கதை ஒரு சாக்கு ..சொல்ல வந்த விஷயம்தான் முக்கியம். என்ன நீங்க ரெடியா? |