தாயே..நான் வித்யாசமானவன். உன் விதியை அதன் கதியை கற்கும் மாணவன் இவர்கள் சாதாரண்மானவர்கள் தமக்கு எல்லாம் வேண்டும் ஆனால்அவற்றைப் பெற தாம் எதையும் இழக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். நான் வித்யாசமானவன் இதோ முப்பத்து முக்கோடி தெய்வங்களும் கூடிப் பேசி என்னை காரிருளில் ஆழ்த்தினாலும் தாமே சூரிய சந்திரர்களாகி ஒளியை உமிழும் என் கண்களைப்பார்..அவற்றிற்கு இந்த சக்தி எப்படி வந்தது தெரியுமா? அவை என் விரோதிகளுக்காகவும் கசிந்தன.. குறுக்கு வழிகளை, பசப்பு வரிகளை பார்க்க மறுத்தன. அகிலத்தின்மிசை நடக்கும் சகல அநியாயங்களையும் கண்டுமூடிக்கொண்ட பலகோடி விழிகளை பின்பற்ற மறுத்தன. ஜீரோ வாட்ஸானாலும்,மெழுகு வர்த்தியானாலும் நள்ளிரவு வரை இவ்வுலகத்து ஏழ்மையையும் சுரண்டலையும் ஒழிக்க வரைபடம் தயாரித்தன. அதனாலேயே தாமே சூரிய சந்திரர்களாகி ஒளியை உமிழ்கின்றன. இப்போது பார் என் கண்களை.. பறித்துக்கொள் இவற்றை! அமுதம் சேவித்து உன் ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்துஉன் பார்வை பழுதுபட்டு விட்டதால் இவற்றை நீ பொருத்திக் கொள் என்று கூறமாட்டேன். இவற்றை இழக்க நான் முன்வந்தது உனக்கு என் பார்வையை தருவதற்காக அல்ல..இழந்தால்தானே பெறமுடியும்.. நான் பெறவிரும்புவது ஒன்றே . அது மாநிலம் பயனுற வாழ்தல் என் மூளை, அதில் மின்னும் சிந்தனைகளை ஏதேனும் ஒரு வழியில் என் மக்களுக்கு பகிரும் ஒரு வழி இவையிரண்டை மீதம் வைத்து நீ என்னை வதம் செய்தாலும் சம்மதமே.. அம்மா.. நான் உன் மகவல்லவா! உன் பிடிவாதத்தில் சற்றேனும் எனக்கும் உண்டல்லவா? நான் படைக்க எண்ணும் புதிய உலகம் உன் பிரளய கால நிகழ்ச்சி நிரலுடன் முரண்படுவதாலல்லவா? சரண் புகுந்த என்னை மண்ணை கவ்வ வைக்கிறாய். புரிகிறது.. அதனால்தான் நான் கட்டி எழுப்பும் ஒவ்வொரு கோட்டையும் சரிகிறது. சரிந்தால் என்ன என் முயற்சி நிற்கவா போகிறது. பலி கொடுக்கப் போகும் ஆட்டுக்கு மாலை போடுவது எம் வழக்கம். அந்த மாலையாக வேணும் அனுமதிக்கக் கூடாதா நான் கனவு காணும் பசி சுரண்டலற்ற உலகத்தை? ஓம் சக்தி! |