இப்பொழுது அறுவடைக்காலம்.... இப்பதானே ஆடி வந்து விதைச்சோம்...
அதுக்குள்ளாகவா? இல்லை... இந்த அறுவடை என் அன்றாட நடவடிக்கைகளில் நடந்து
கொண்டிருக்கிறது.
ஒரு சாபத்தின் வாயிலாக தன் சக்தி மறந்திருந்த அநுமனுக்கு ஞாபகமூட்டியது
போல திரு. சு. முருகேசன் எனக்கு வாய்ப்பளித்து தந்தார். மனம் கனிந்த
நன்றி!.
தளத்தின் தடம் புரளாமல் நானும் கருத்துக்கள் அளிப்பது முக்கியமானதால் சிறு தாமதம்.
சோதிட உலகில் நான் நுழைந்து பரவசமடைந்தது என் பதினாறு வயதில்... பள்ளி
சென்ற காலத்திலேயே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமாகிவிட்டதால் உலக அநுபவ
அறிவு கொஞ்சம் இருந்தது... வாழ்வு விடைகாண சோதிடம் உதவுமா? என்ற எண்ணம்
அன்றிருந்தது. என் வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' (என் தாத்தா
உபயோகப்படுத்திய நூல்) ஆர்வமேற்படுத்தியது. நண்பர்கள் குழு அதற்கு
உரமிட்டது... சேர்ந்து தேர்ந்தோம்...
நான் தொழில் சார்ந்த சோதிடனல்ல. சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவிர
எனக்குத்தெரியுமென்று சொல்லிக்கொண்டதும் இல்லை.
நான் அசுவினி நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்தவன். புதனுச்ச, நீச சுக்கிரன்
பெற்றவன். இதுவே போதுமானது... இத்தளத்தை வாசிப்பதற்கும், தற்பொழுது
எழுதுவதற்கும்.
சோதிடம் யாருக்கானது?
நான் சோதிடத்தை நம்ப மாட்டேன்.... ஆம். உன் இரண்டும் எட்டும்
அப்படித்தான் சொல்லுகின்றன.
அட. முயற்சிதானப்பா... கிரகமென்ன செய்யும்?... ஆம். நாலும், ஆறும்
அப்படித்தான் சொல்லுகின்றன.
ம்... அது பாட்டுக்கு அது, என்பாட்டுக்கு நான்... ஆம். பன்னிரெண்டு
அப்படித்தான் சொல்லுகிறது.
ஆக... எல்லாமே பதிவாக இருக்கிறது... இயற்கைக்கு மாறாக நீ ஒரு பயிரைக்கூட
பிடுங்கமுடியாது. காக்கை, குருவி எங்கள் சாதியென்று பாடினானே ஒருவன்...
அப்படி உன்னை வரித்துக்கொள்வதில் நீ என்ன குறைந்துவிடப்போகிறாய்?
சரி. அப்படி என்னதான் இருக்கிறது?
நீ உன் குழந்தையை கொஞ்சுவது இருக்கட்டும். உன் நண்பரின் குழந்தையை நீ
வசீகரித்தது உண்டா? ஒரே தடவையில் உன் தகுதி பாதாளம் போய்விடும்...
'நான் யாரென தெரியுமா?' கேட்டுப்பாருங்களேன்... நீங்கள்
அவமானப்படக்கூடும்... உங்கள் அகங்காரம் உங்களை வறுத்தெடுக்கும்... சட்டென
அவ்விடமிட்டு நகர முற்படுவீர்கள்...
கிரகங்கள் அத்தகைய குழந்தைகள்தான்... கொஞ்சம் பழகிப்பாருங்கள்... பாசத்தை
பொழிவார்கள்... உங்கள் குழந்தைகள் போல கடமைக்காக அல்ல...
எந்த வயதில் சோதிட அறிவு, ஆர்வம் வேண்டும்?
கரும்பு கடித்து சாப்பிடவேண்டுமென்றால் பற்கள் வேண்டும். பொக்கை வாய்க்கு
கரும்பெதற்கு?
உன் சுவாசம் எப்பொழுது இயங்க ஆரம்பித்ததோ, அப்பொழுதே நீ கிரகங்களால்
ஆட்கொள்ளப்பட்டுவிட்டாய்... அது ஏனப்பா உன்னை ஆட்கொள்ள வேண்டும்...?
கிரகங்கள் நீ கருவிலிருந்த பொழுதும் அதைச்செய்தன... தந்தையும், தாயையும்
கூடத்தான் ஆட்கொண்டன... அந்த கூடலையும் அவைகளே செய்தன...
இரு... கிரகங்கள் உன்னை ஒருகணமும் பிரிந்ததில்லை. நீதான் பிறப்பதும்,
இறப்பதுமாக இருக்கிறாய்... (மன்னிக்க! இது நீண்ட கதை... அடுத்த, அடுத்த
பதிவுகளில் அதிசயிப்போம்)
தலைப்புக்கு வருவோம்... இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? ஒருமையில்
சொன்னதற்காக எனக்கு வருத்தமில்லை. இது என் நண்பரை பார்த்து
கேட்கப்பட்டதல்ல. யாரென்று அறியாத ஒருவனிடம் கேட்கும் கேள்வி. உங்கள்
சோதிட குறிப்பை என்னிடம் காண்பித்தால் என்னால் உங்களை யூகிக்க இயலும்.
ஆம், நான்கு சுவருக்குள் எப்படி? சுவருக்கு வெளியே எப்படி? அடுத்தவரை
பற்றிச்சொல்லும் பொழுது இருக்கிற ஆர்வம் தன்னைப்பற்றிச்சொல்ல எழாது. ஆம்,
இது ரகசியமானதும் கூட.
இந்த விசயம் எப்பொழுது தெரிந்து கொள்ளவேண்டும்?
வலைமனைகளில் பலானது பார்க்கும் முன்னமே சோதிடத்தில் ஆனது
பார்த்தாலென்ன... கற்றுத்தெளிதலில் எல்லாமிருக்கும் பொழுது சோதிடம்
தவிர்ப்பானேன்...
உலகத்தில் பாலுணர்வு இருந்தது அந்தக்காலம்... உலகமே பாலுணர்வால் லயிப்பது
இந்தக்காலம்.
இளைஞர்களே (குமரன், குமரி கலந்துதான்) வாருங்கள்... பாதையிருக்கிற
ஊருக்குச்செல்வதுதான் புத்திசாலித்தனம். ஆம்... சோதிடம் என்பது வழி பயண
கையேடு... உங்களுக்கான பாதையின் வழியறிந்து கொள்ளுங்கள், வலி பிறக்க
வலுவே இல்லை.
ஒரு ரஷ்ய நூலில் நான் படித்திருக்கிறேன்... 'கிரகங்கள்... ஆளுமை
செய்வதில்லை... தூண்டுகின்றன, அவ்வளவே!'
அதை நாம் உணர்ந்தால் எவ்வளவு சிறப்பாயிருக்கும்? உணர்வோமா? கவலை
வேண்டாம், இந்த உணர்வை தருவதற்காகவே திரு. சு. முருகேசன் அவர்கள்
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்... அவரின் வார்த்தைகள் மூலமாக
உணர்வோமாக...
மணி இப்பொழுது 12.27AM.(30-08-2010) கிழக்கு வானத்தில் மேஷராசி
மண்டலத்தில் ஐந்தாம் திதி சந்திரன், மீனராசி மண்டலத்தில் குரு... (குருவை
இந்தமாதங்களில் வெறுங்கண்ணால் மட்டுமல்ல, வெறும் கையோடும்
பார்க்கலாம்!...) அப்படியே மாடிக்குச்சென்று கண்டு பரவசமடையுங்கள்...!
அடுத்த பதிவில் நாம் சந்திப்போம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் :)