Friday, February 12, 2010

ஒரு அந்தரங்க உரையாடல்

"வணக்கம் சாமி"
"வாப்பா .. என்னாச்சு வேலை விசயம்?"
" நீங்க சொன்ன மாதிரியே ஆச்சு சாமி.சக்ஸஸ் தான்"
" நான் சொன்ன மாதிரினு மொட்டையா சொல்லகூடாது. எனக்கு நடக்க இருந்ததை நீங்க கெஸ் பண்ணி சொன்னது நடந்ததுன்னு வேணும்னா சொல்லலாம். ஓகேவா"
" நீங்க சொன்னதெல்லாம் நடக்குதே சாமி"
"முண்டம் ! நான் சொன்னதெல்லாம் நடந்துர்ர மாதிரி இருந்தா ரஜினி காந்த் அரசியல்ல குதிச்சு விஜயகாந்தை விட செமர்த்தியா மொக்கையாகனும் இத்தனை நாள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புல்க் காட்டினதுக்கு புலி வருது கதை கணக்கா அவரோட கதை முடியனும்னு சொல்லிருவனே ..."
"ஆங்க்..இப்ப புரியுது சாமி ! நீங்க சொன்னது செரி சாமி!"
"சாமி இன்னொரு விசயம்?"
"தபாரு.. ஜோசியர்கிட்டே அடிக்கடி வரக்கூடாது. எதுனா முக்கிய முடிவு எடுக்கறப்ப,தசா புக்தி மார்ரப்ப, முக்கிய கிரகம் ஏதாவது மார்ரப்பதான் வரணும் புரியுதா?"
"சரி சாமி. இப்போ நீங்க சொன்னாப்ல ஒரு முக்கிய முடிவு எடுக்கனும்..அதான் வந்தேன்"
"சரி சொல்லு"
"சாமி.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவிக வேற சாதி."
'சாதி என்னப்பா சாதி. நல்ல குடும்பம்தானா"
"அதெல்லாம் ஒன்னும் தப்பா இல்ல சாமி பக்காவா இருக்கு"
"பின்னே என்ன பிரச்சினை?"
"எங்கப்பாதான்.. சொந்தத்துல தான் கட்டனும்னு இம்சை பண்றார்"
"உங்கப்பா வந்திருக்காரா?"
"உம்.."
"அவரை வரச்சொல்லுப்பா"
***
"வணக்கம் சாமி !"
"வணக்கம் வாங்க.! உட்காருங்க"
"சாமீ.. நீங்களே நியாயத்த சொல்லுங்க..தங்கச்சி மக காத்திருக்கா அவளை விட்டுட்டு இவன் வேற எவளையோ கட்டறேன்னு ஒத்தகால்ல நிக்கறான்"
"அப்படியா .. அடப்பாவமே ! இதுல நான் என்ன செய்யறது?"
" நீங்க எடுத்துச்சொல்லுங்க சாமி.."
"நான் ஏதோ வயித்து பொழப்புக்கு பஞ்சாங்கம் சொல்றவன்பா எனக்கென்ன தெரியும்.?"
"ஹ.. அப்படி சொல்ட்டா எப்டி சாமி.. உங்களை பத்தி தான் பேப்பர்ல நிறைய்ய படிக்கிறமே..இந்தியாவையே பணக்கார நாடா மாத்த போறிங்களாம்..10 கோடி பசங்களுக்கு வேலை தரப்போறிங்களாம்.."
"கிழிஞ்சது கிஸ்னகிரி.. இப்டிதான் போய் சொல்லிரு.. யோவ் அதெல்லாம் வெறும் ப்ரபோசலுய்யா செய்யவேண்டியது அரசாங்கம்யா"
"எதோ ஒன்னு அவ்ளோ அறிவிருக்கிற சாமி ..இந்த சின்ன விசயத்துல புத்தி சொல்ல கூடாதா?"
"சரி அப்டியே சொல்ட்டா போவுது.. சொல்றேன். போன வாரம் உங்க வீட்டு பசுமாடை ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தே"
"அட! ஆமா சாமி.. நீங்க எங்கே பார்த்திங்க..?"
"எங்கயோ பார்த்தேன்யா.. நீ பசுமாட்டை ஓட்டிக்கிட்டு எங்கே போயிட்டிருந்தே?"
"வெட்டினரி ஹாஸ்பிடலுக்கு"
"எதுக்கு?"
"பசு மாட்டுக்கு ஊசி போட"
"மாட்டுக்கு ஜுரமா?"
"அட என்னங்க நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கிங்க.. மாட்டை சினைப்படுத்தறதுக்குங்க"
"இதென்னய்யா லொள்ளு உங்க கிராமத்துல இல்லாத காளை மாடா?"
"அடடா என்ன நீங்க இப்படி விவரமில்லாம கேட்கிறிங்க.. நம்ம கிராமத்து காளைமாடுங்களோட விட்டா அரை படி பால் கறக்கற கன்னுதான் கிடைக்கும். ஆஸ்பத்திரில ஸ்விட்ஜர்லாந்து காளை கிட்டருந்து சேர்த்த வீரியத்தை ஊசி மூலமா ஏத்தி விட்டா பத்து படி பால்கறக்கற கன்னு பொறக்கும் சாமி"
"ஏன்யா .. கேவலம் மாட்டுக்கு நல்ல கன்னு பிறக்கனும்னு எந்த ஜாதி, எந்த நாடுனு தெரியாத காளை மாட்டோட வீரியத்தை ஊசி மூலம் செலுத்துவிக .. நீ பெத்த புள்ளைக்கு நல்ல அறிவு,உடல் வலிமை உள்ள குழந்தை பிறக்க சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணமாட்டே.. ஒன்னுக்குள்ள ஒன்னு ஒன்னுக்குள்ள ஒன்னு நெருங்கிய சொந்தங்கள்ள கல்யாணம் பண்ணி உங்க வமிசாவளியினருடைய நோய்கள் உங்க வமிசத்தை விட்டுடாம இருக்க எந்தளவுக்கு கஷ்டப்படறிங்கய்யா சூப்பர் லாஜிக் இது"
"இன்னா சாமி சொல்றே?"
" ஆ சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேனு.. போய் அந்த பொண்ணை பத்தி, பொண்ணு வீட்டுக்காரவுக பத்தி நாலு தெருவுல விசாரி. கல்யாணத்த பேசி முடி.அப்பத்தான் உண்மையான வம்ச விளக்கு பிறக்கும். இல்லேன்னா தேஞ்சு போன விளக்குமாறுதான் பிறக்கும் .போ போ ..போய் வேலைய பாரு"

விட்டுக்கொடு

விட்டுக்கொடு நின் பிடிவாதம் என்றேன்
நீயோ விட்டுக்கொடுத்தாய் என்னை என் எதிரிகளிடம்
என் வறுமையை எரி என்றேன்
நீ என்னை எரிக்க முனைந்தாயோ?
உன் திட்டப்படி பிரளயம் என்றோ வரும்
என் திட்டப்படி சுபிட்சம் நாளையே வரும்
பிரளயம் உறுதி எனும்போது
இந்த கட்டத்திலேனும் ஒரு நல்லாட்சி வழங்கிடக்கூடாதா?
மரண தண்டனை கைதிக்கு தரப்படும் வென்னீர் குளியல் போல்,புத்தாடை போல், நல்லுணவு போல், இனிப்பு போல் நல்லாட்சி தருவாய் தாயே
ஒரு மாற்றம் கொண்டுவர ஏற்றம் கண்டிடவே
காற்றை உணவாக்கி என்னுள் ஊற்றை உருவாக்கினேன்
என்னில் தடுமாற்றம் வரலாமோ?
உனை குறித்த மருமமெல்லாம் விளக்கி
அந்தண‌ர் பிற்சேர்க்கை தமை விலக்கி
தருமமே நின் வடிவென்று நீயே தருமமென்று
தர்கம் செய்து வந்தேன்
சீட்டு மாளிகை போல் சின்ன சித்தாந்தம் செய்துவைத்தேன்
மனிதமே மதம்
இயற்கையே இறை என்று
மக்கள் சேவையே மறையென்று
முறை செய்துவைத்தேன்
நான் பிறையே ஆனாலும்
நின் மகுடத்தில் பிறை என்றேன்
என்னை பிணவறையின் பிறை செய்தாய்
முறையாமோ சொல்லம்மா !
மக்கள் உயிர் குடித்தோர் உல்லாசமாய் வாழ்ந்திருக்க
அதற்கோர் விளக்கம் சொன்னேன்
விட்டுப்பிடிப்பதுவே உன் பழக்கம்
என்றிட்டேன்
எமை கைவிட்டு போவதுவே உன் வழக்கமாமோ
சொல்லாது சொல்லுகின்றாய் சூத்திர சுருக்கங்களை
பௌலிங்கும் நீயே
பேட்டிங்கும் நீயே
ஃபீல்டிங்கும் நீயே
அம்பயரும் நீயே
அம்பிகை நான் என்று அலட்டல் அதிகமாச்சு
ஜன நாயகம் வந்துற்று பல காலம் ஆனதடி
மக்கள் கருத்தையும் மாதா நீ மனதில் கொண்டு
நல்லாட்சி பிறந்திடவே
மீனாட்சி அருள் புரிவாய்
நல்லாட்சி அமைந்திடவே நாவலன் நான் குரல் கொடுத்தேன்
அம்மா நின் விரலசைந்தால்
என் சொல்லே வில்லாகும்
பாடு பொருள் அம்பாகும்
அல்லவை எரிந்து போகும்
நல்லவை செழித்தோங்கும்
இவ்வுலகே நாய் கூட்டம்
என்னை பிடுங்க பார்க்குதடி
மெய் நடுங்க வைக்குதடி
பை நிறைய எலும்பிருந்தால்
ஓரிரண்டை வீசி விட்டால்
வால் வீசி வந்திடுமே
அம்மா நீ அருள் புரிவாய்
மனமருள் சிதைத்திடுவாய்