மாயா அந்த விடிஞ்சும் விடியாத சமயத்துல கெய்சர்ல தண்ணி போட்டு தந்தா குளிச்சேன். உடல் துவட்டி அவள் தந்த அவளோட வெள்ளை நிற சல்வார் கமீஸை உடுத்திக்கிட்டேன். சூடா ஒரு கப் பால் கொடுத்தா தூக்கம் கண்ணை சுழட்ட சோஃபாலயே படுத்துட்டன். ஜன்னல் வழியா வெயில் சுள்ளுனு அடிக்குது. நேத்துபோட்டிருந்த பேண்ட் சட்டை அயர்ன் பண்ணி கிடக்கு.எடுத்து உடுத்திக்கிட்டேன். வாஷ் பேசின்ல வாய் கொப்பளிச்சு முகம் அலம்பிக்கிட்டிருந்தேன். கண்ணாடில பாத்ரூம் கதவு திறக்கறதும் மாயா டர்க்கி டவலை மட்டும் கட்டிக்கிட்டு வெளிய வர்ரதும் தெரிஞ்சது. நான் "க்கும்"னு கனைச்சேன். என்னை திரும்பி பார்த்த அவளோ எள்ளளவும் டென்ஷனாகல. தலைக்கு கட்டியிருந்த டவலை பிரிச்சு உதறி தலை துவட்ட ஆரம்பிச்சா. சின்ன சிரிப்போட " என்ன நல்ல தூக்கமா?"ன்னு கேட்கிறா.
எனக்கு கில்ட்டியா இருந்தது. "மாயா நான் புறப்படறேன்"னேன். அவளோ நத்திங் டூயிங். உனக்காக ஸ்பெஷல் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி பண்ணியிருக்கேன்.ரெண்டு பேரும் சாப்டுட்டு ஸ்ட் ராங்கா ஒரு காஃபி சாப்டுட்டு ஒரே ஆட்டோல ட்ராவல்ஸுக்கு போறோம். டைம் என்னாச்சு தெரியும்லன்னிட்டு கடிகாரத்தை காட்டினா. நான் டிவி ரிமோட்டை எடுத்து கையில வச்சுக்கிட்டு சட்டை பாக்கெட்டை தடவினேன். அதை பார்த்த மாயா "என்ன சிகரட் பாக்கட்டை தேடறியா இந்தா"ன்னிட்டு சிகரட் பாக்கட்டையும் தீப்பெட்டியையும் என் மேல வீசினா. நான் சிகரட்டை பத்த வச்சிக்கிட்டு யோசிச்சேன்.
எனக்கும் மாயாவுக்கும் இடையில உள்ள விசித்திரமான உறவை எந்த கேட்டகிரில சேர்க்கிறதுன்னே புரியலை. மாயா எப்போ ட்ரஸ் மாத்தினா ,எப்போ மேக்கப் பண்ணிக்கிட்டா, எப்போ கிச்சனுக்குள்ள நுழைஞ்சா எப்போ டிஃபன் கொண்டு வந்தான்னு கூட கவனிக்கல. என்னென்னவோ குருட்டு யோசனை. அப்போ என் தலைல " நங்" குனு ஒரு குட்டு. ஏய் முதல்ல டிஃபன் வேலையாகட்டும் அப்புறம் யோசிக்கலாம்னா. மவுனமா சாப்பிட்டேன்.
"இதான் சாப்பிடற லட்சணமா? தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன.. இதென்ன அல்சர் பேஷண்ட் மாதிரி இட்லிக்கு சட்னியை காட்டி காட்டி சாப்பிடறே . நல்லா தொட்டு சாப்பிடு" மாயாவின் அதட்டல்கள் என் சிந்தனைவலைய அறுக்க முடியவில்லை. அறையை லாக் செய்து ஹேண்ட் பாகுடன் படியிறங்க ஆட்டோ வந்து நின்றது. நான் ஆச்சரியமாக பார்க்க " ஏய் முகேஷ் ! என்ன தூக்க கலக்கம் போகலியா இன்னும் ஏறு ஆட்டோல" என்று என் தோளை பிடித்து தள்ளினாள் . மவுனமாய் ஆட்டோ ஏறினேன்.
மாயா எங்கள் ட்ராவல்ஸ் ஆஃபீஸ் அருகே இறங்கிகொள்ள நான் பக்கத்திலிருந்த ஓனர் வீட்டுக்கு சென்று சாவி வாங்கி ஆஃபீஸ் திறந்தேன். சற்று நேரத்தில் முனியம்மா வர ஆஃபீஸ் சுத்தமானது. சாமி படத்துக்கு ஊதுவத்தி கொளுத்த கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் என் அப்பா நிற்பது தெரிந்தது.
அந்த கால டைரக்டர் பாலசந்தர் மாதிரி காதோரம் நரைச்ச க்ராப், பட்டை ப்ரேம் கண்ணாடி, கம்பளி பூச்சி கணக்கா அடர்த்தியான புருவம். ஹிட்லர் மீசைக்கு ரெண்டு பக்கம் அரும்பு மீசை ஒட்டிவச்ச மாதிரியான மீசை , கொட்டிப்போன தலை முடி கொடுத்த கூடுதல் நெற்றியில் விபூதி பட்டை, இரண்டு புருவங்களுக்கும் நடுவே தீக்குச்சியின் மருந்து முனையளவே குங்கும பொட்டு, காதுகள்ள இருந்து கரப்பான் பூச்சி மீசைய மட்டும் ஆட்டிக்காட்டற மாதிரி புஸு புஸு முடி. வெள்ளை கலர் அரைக்கை சட்டை ,ப்ளாக் கொரியா பேண்ட். அப்பாவை பார்த்ததும் சீரியசா ஸ்லோகமெல்லாம் சொல்லி சாமி படங்களுக்கு அனாவசியமா மறுபடி மறுபடி ஊதுபத்தி புஐ காட்டினாலும் அப்பா அசையறதா காணோம். ஊதுவத்திய அதுக்கான ஸ்டாண்ட்ல செருகிட்டு வெளியே வந்தேன். அவர் உள்ளயே இரு இதோ வந்துட்டேன்னு மூக்கை நல்லா சிந்திட்டு ஃப்ரஷ்ஷா இன்னொரு சிட்டிகை மூக்கு பொடியை ரெண்டு ஓட்டைலயும் பேக் பண்ணிக்கிட்டு கர்சீஃபை கயிறு மாதிரியாக்கி மூக்கு முனைய ஒரு தேய் தேச்சுட்டு உள்ள வந்துட்டாரு.
மாயா தலை நிமிர்ந்து அவரை பார்த்துட்டு என்னை பார்த்தாள்.மாயாவுக்கு என் அப்பாவ பத்தி நிறைய சொல்லியிருக்கேனே தவிர அவள் நேர பார்த்ததில்ல. சுருக்கமா "அப்பா"ன்னேன். உடனே எந்திரிச்சு நாடகத்தனமா கை கூப்பி " நமஸ்தே"ன்னா. அப்பா என்னதான் ஏகபத்தினி விரதனா இருந்தாலும் பொம்பளைங்க அதுவும் ச்சுமாரா இருக்கிற பொம்பளைங்களை பார்த்தா கொஞ்சம் அதிகமாவே பேசுவார். அதுலயும் அந்த சந்தர்ப்பத்துல என்னை காச்சனும்னா உபமானம், உபமேயமெல்லாம் ஏ.சி.பி ரெயிட்ல லஞ்சப்பணம் மாதிரி கொட்டும்.
"எங்கடா போயிருந்தே.. ஒரு நாளைப்போல ராத்திரி 12 ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தே இப்போ வெளிய ராத்தங்க கூட ஆரம்பிச்சுட்டயா? அப்படி என்னடா புடுங்கற வேலை..ராத்திரியெல்லாம் எவளோட இருந்த?"
என் அப்பா இதை விட மோசமாக தேவகவுடா ரேஞ்சில் எல்லாம் பேசினதுண்டு. ஆனால் இப்ப மாயா எதிர்லன்னும் போது கொஞ்சம் சுர்ருன்னுச்சு. மாயாவோட முகத்தை பார்த்தேன். அதுல சின்ன கீறல் மாதிரி ஒரு சிரிப்பு. மாயா சகஜமா எடுத்துக்கிட்டாங்கறது கன்ஃபார்ம் ஆனதுமே அப்பா புலம்பலை கன்டின்யூ பண்ணிட்டார்.
"நான் தான் சொல்லியிருக்கேன் இல்லியா ராத்திரி எந்த நேரத்துக்குன்னாலும் சரி வீட்டை வந்து சேரு, பெல்லடிச்சா நான் வந்து திறக்கறேன்னு சொல்லியிருக்கெனில்லயா..இன்னம் என்னடா கேடு உனக்கு? உண்மைய சொல்லு ராத்திரியெல்லாம் எங்கே இருந்தே?"
நான் அந்த நேரத்துக்கு நல்ல பிட்டா எதை போடலாம்னு யோசிச்சிட்டிருந்தப்போ மாயா , "அங்கிள் ! ராத்திரி முகேஷ் என்னோட தான் எங்க வில்லேஜுக்கு வந்திருந்தாப்ல. எங்க சொந்தக்காரங்க திருமலால கல்யாணத்துக்கு நம்ம கிட்டே தான் பஸ் புக் பண்ணியிருந்தாங்க. ட்ரைவருக்கு பக்கத்து வில்லேஜ்ல தான் வீடு. பாவம் அவனுக்கு இந்த வாரமெல்லாம் ரெஸ்டே கிடையாது .அவன் தான் முகேஷு! வண்டிய ராத்திரி வில்லேஜுக்கு கொண்டாந்துரு அப்பறம் நான் திருமலா போறேன்னு கெஞ்சிக்கிட்டான்" ன்னா.
என் அப்பாவுக்கு வந்ததே கோபம் " நல்லாருக்கும்மா நீங்க பண்றது. அசலே இவன் குரங்கு. இவனை நம்பி நான் டூவீலர் கூட வாங்கி தரலை நீங்க பஸ்ஸையே கொடுத்திருக்கிங்க. ஒரு நாள் என் டிவிஎஸ்ஸை எடுத்துக்கிட்டு போனான் . எவ்ளதான் ஸ்பீட் போனான்னு தெரியாது இஞ்சின் சீஸ் ஆயிருச்சு. இவனை போய் ட்ரைவரா போட்டு.. " தொடர்ந்து பேச வார்த்தைகள் வராம அவர் தவிக்க மாயா இடை மறிச்சு பேச ஆரம்பிச்சாள்.
" அதான்..அதேதான் ஒரு நாள் இவன் வண்டில ஏறினேன் அங்கிள் அய்யய்யோ வண்டில போறோமா ஏரோப்ளேன்ல போறமானு சந்தேகம் வந்துருச்சு.கண்ல தண்ணியா கொட்டுது .. அந்தமாதிரி ஓவர் ஸ்பீட் போய் எதுனா ஆயிரபோவுதுன்னு நானும் கூடப்போனேன் அங்கிள். கல்யாண கோஷ்டி எல்லாம் புறப்பட பாதி ராத்திரி ஆயிருச்சு. அந்த நேரத்துல எதுக்கு ஜர்னின்னு நான் தான் எங்க வீட்ல படுத்துக்க சொல்லிட்டன் அங்கிள். வீட்ல அக்காங்க, மாமாங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பையன் அரவிந்த் சாமி மாதிரி க்ளாஸா இருக்கான். மாஸா டூர் பஸ்ஸ ஓட்டிக்கிட்டுவந்தனான்னு ராத்திரியெல்லாம் செம உபச்சாரம் முகேஷுக்கு"
குறைஞ்சது அரை மணி நேரமாவது காச்சியிருக்க வேண்டிய மனுஷன் சுதியிறங்கி போய் "சரிம்மா.. இந்த ஒரு தடவை சரி .இனி எப்பவும் இவனை நம்பி ஸ்டீரிங்கை கொடுக்காதிங்க"ன்னிட்டு எதிர்க்க நாயர் கடைல டீ வரவச்சு குடிக்க வச்சுட்டு இன்னொரு பாட்டம் மூக்குப்பொடி போட்டுக்கிட்டுத்தான் போனார்.
அவர் போனதும் மாயா சுத்தி முத்தி பார்த்துட்டு என் தொடைல கிள்ளி "படுவா ராஸ்கல் என் கிட்டே வரப்ப மட்டும் 9 ஆச்சு 9.10 ஆச்சுனு விவிதபாரதி மாதிரி டைம் சொல்வே . பாதி ராத்திரி வரை எங்கே போற நீ.." என்றாள்.
" அதெல்லாம் நீ கேட்க கூடாது .. நான் சொல்லக்கூடாது."ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தபப் ஒரு ஐயப்ப சாமி கோஷ்டி வந்தது. வியாபாரத்துல மூழ்கிட்டோம். ஒன்னு பின்னால ஒன்னு ஏதோ கமிட்மென்ட் ரோட் டாக்ஸ் கட்டறது, அடுத்த மாச டூருக்கு பாம்லெட் ,போஸ்டர் ரெடி பண்றதுன்னு நேரம் ஓடிப்போச்சு.
வெள்ளிக்கிழமைகள்ள ராத்திரி பூஜை போட்டுட்டு 7.30 மணிக்கே ஆஃபீஸ் க்ளோஸ் பண்றது வழக்கம். ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடக்கிறப்ப மாயா "இன்னைக்கு நீ 9 ஆச்சு 9.10 ஆச்சுனு சீன் போட்டு தப்பிக்க முடியாது. உங்கப்பா தான் ராத்திரி 2.30 மணிக்கு கூட வா கதவு திறக்கறேன்னிட்டாரே "ன்னிட்டு கண் சிமிட்டி மர்மமா சிரிச்சா.
(தொடரும்