Thursday, February 28, 2008

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான்.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான். ஜோதிடம் குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன கருத்துகளை கண்டித்தவ‌ன் ,கிண்டலடித்தவன். ஆனாலும் அவரது பெரும்பாலான படைப்புகள் (கனவு தொழிற்சாலை,அன்று உன்னருகில்,வைரங்கள் முதலானவை) எனக்கு இன்றுவரை கூட இன்ஸ்பிரேஷனாக இருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இது சம்பிரதாயமான மரண அஞ்சலி அல்ல . என் உயிரிலிருந்து வரும் கருத்து. நாட்டு பொருளாதாரம்,அரசியல்,சினிமா குறித்த அவரது விமர்சனங்கள் கூட எனக்கு சம்மதமே. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் கூறியுள்ள 'சில' தீர்வுகள் எனக்கு சம்மதமில்லாமலிருக்கலாம்.


அதே நேரத்தில் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட இல்லாத தத்து,பித்து பிராமண குழுவில் சுஜாதா மிகவும் வித்யாசமாக சிந்தித்தார். எழுதினார். தமிழ் நவீன படைப்பியலில் சுஜாதாவின் முத்திரை மறுக்க முடியாதது. இன்று வரை கூட நான் உட்பட ஆயிரக்கணக்கான இளைய படைப்பாளிகளின் எழுத்தில் அவரது பாதிப்பு இருப்பதை நினைத்து பார்க்கிறேன். பாரத பீஷ்மர் போல் தான் சார்ந்திருந்த குழுவின் கட்டாயங்களுக்கு,ஃபோபியாக்களுக்கு (உ.ம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ) சுஜாதா அடி பணியாதிருந்திருந்தால் அவரது எழுத்து நிச்சயம் ஒரு ஒட்டு மொத்த புரட்சிக்கு அடிகோலி சரித்திரம் படைத்திருக்கும்.


பல்லாயிரம் சிற்றிதழ்களையும்,புதிய படைப்பாளிகளையும் மாஸ் மீடியாவுக்கு அறிமுகம் செய்த,புலமைக்காய்ச்சல் தீண்டாத அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இனியாவது மத்திய ,மாநில,அரசுகள் சுஜாதா சமூக அக்கறையுடன் தெரிவித்த யோசனைகளையும்,திட்டங்களையும்(கலைச்சொல்லாக்கம்,தமிழ் எழுதுகருவிகள் முதலானவை) உபயோகித்துக்கொண்டால் நல்லது.