சிரஞ்சீவி மீது ஆ.வி,.க்கு திடீர் பாசம் கொட்டுவது ஏன்? ஆந்திர அரசியல் பற்றிய ஆனந்த விகடன் விமர்சனம்
ஆந்திர அரசியலுக்கு வக்காலத்து வாங்க இந்த பதிவை இடவில்லை. அதே நேரத்தில் சிரஞ்சீவிக்கு ஜால்ரா போடுவதானால் போட்டு விட்டு போக வேண்டும் அதை விடுத்து ஆந்திர அரசியல்,சினிமா எல்லாவற்றையும் வம்புக்கு இழுத்ததன் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கம். புத்தக கண்காட்சியில் ஒதுக்கப்பட்ட ஸ்டால்களோடு தம் செல்வாக்கால் இன்ன பிற ஸ்டால்களையும் ஆக்கிரமித்த விகடனுக்கு, என் படைப்புகளை குறித்த உம் முடிவை தெரிவிக்காமல் உமது விளம்பரங்களை எனக்கு தபாலிலும்,இமெயிலிலும் அனுப்புவது மன உளைச்சலை தருகிறது அனுப்பாதீர் என்று பன் முறை கூறியும் திருத்திக் கொள்ளாத விகடனுக்கு ஆந்திர அரசியலை ,சினிமாவை விமர்சிக்கும் தகுதி உண்டா என்பதையும் இந்த பதிவில் ஆராயவேண்டி இருக்கிறது.
இந்திய அரசியலே கேடு கெட்டு போய் கொண்டிருக்கும்போது ஆந்திர அரசியல் மட்டும் மணக்கிறது என்று விதண்டாவாதம் செய்யும் விருப்பமில்லை. இருந்தாலும், நான் தமிழனாகவே இருந்தாலும்,ஆந்திரன் என்ற உணர்வில் எமது அரசியல் தமிழக அரசியலை விட தட்டு கெட்டு விடவில்லை என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது.
ஆந்திர சட்டமன்றத்தில் எந்த பெண்ணுக்கும் துகில் உரியப்படவில்லை, ஒரு தலைவரின் "ஆள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண் அரசாண்டதுமில்லை. லட்சுமி பார்வதி என்.டி.ஆரின் சட்டப்பூர்வமான மனைவியாக இருந்தாலும் மக்கள் அவரை தலைவியாக அங்கீகரிக்கவில்லை. என்.டி.ஆரும் நடிகர் தான் . ஆனால் எம்.ஜி.ஆரை போல் மற்றொரு கட்சியின் நிழலில் வளர்ந்து முதல்வராக வில்லை. என்டிஆர் எம்ஜி ஆரை போல் முதல்வராக வேண்டும் என்ற ஹிடன் அஜெண்டாவுடன் இமேஜை பூஸ்ட் அப் செய்ததுமில்லை. சரி குப்பையை கிளறுவானேன். எல்லா அரசியலும் சாக்கடை தான் இதில் ஆந்திர அரசியல் ஒன்றும் விதிவிலக்கில்லை.
நடிகர் ராஜசேகர் தன் ரசிகர்களால் தாக்கப்பட்ட உடன் சிரஞ்சீவி அவர் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்டாராம். இது அரசியல் அற்புதமாம். அட இழவே! மேற்படி செய்தி வெளியானதுமே சிரஞ்சீவியின் தம்பி "தாக்கியவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ரசிகர்கள் அல்ல " என்று முத்து உதிர்த்தார். ராஜசேகரும்,ஜீவிதாவும் சிரஞ்சீவியை மீடியாவில் கிழி கிழி என்று கிழித்தனர். மக்கள் கருத்து ராஜசேகர்,ஜீவிதா தம்பதிக்கு அனுகூலமாக இருப்பதை உணர்ந்து,வேறு வழியில்லாமல்,நாளைய தனது அரசியல் வியாபார நலம் கருதி ராஜசேகர் வீட்டுக்கு சென்றார்,மன்னிப்பு கேட்டார்.
ராஜசேகர் என்னவோ செந்தில் ரேஞ்ஜ் நடிகர் போலவும்,சிரஞ்சீவி பெருந்தன்மையை காட்டி மன்னிப்பு கேட்டது போலவும் ஆ.வி லாலி பாடியிருக்கிறது. என்.டி.ஆர் சந்திரபாபுவின் துரோகத்தால் பதவி இழந்த போது மன உறுதியுடன் இறுதிவரை அவர் பக்கம் நின்ற ஆண்மையின் சிகரம் ராஜசேகர். சிரஞ்சீவியை போல் மாமனாரின் தயவில் முன்னேறியவரல்ல. எந்த ஒரு பின் புலமும்,பக்க பலமும் இல்லாது ஜெயித்து காட்டியவர் ராஜ சேகர். சிரஞ்சீவி ஓடோடி சென்று மன்னிப்பு கேட்டிருக்கா விட்டால் காங்கிரஸ் அரசியல் சாணக்கியர்கள் ராஜசேகரை வைத்து சிரஞ்சீவியை சடுகுடு ஆடி விட்டிருப்பார்கள்.
என் கேள்வியெல்லாம் ஒன்றே.. சிரஞ்சீவி மீது ஆ.வி,.க்கு திடீர் பாசம் கொட்டுவது ஏன்? எவனேனும் ஓய்வு பெற்ற பார்ப்பன அதிகாரி சிரஞ்சீவியின் கிச்சன் கேபினட்டில் இடம் பெற்றுவிட்டானா?