Wednesday, February 13, 2008

சி.கே.வுக்கு நான் எழுதிய கடிதங்கள்

சி.கே.பாபுவைப் பற்றி எதிர்கட்சியினர் செய்யும் அநேக பிரச்சாரங்களும் பொய் என்பதை அனுபவபூர்வமாக நான் அறிந்தேன். அதற்கும் எனக்கு உதவியது எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 தான். ஆம். ஐ.நா.சபை முதற்கொண்டு அனைவருக்கு என் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி கடிதம் மூலம் தெரிவித்து அலுத்துப் போன கால கட்டத்தில் சித்தூர் மாவட்ட அளவில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த தலைவரான சி.கே.பாபுவுக்கு என் திட்டம் பற்றி தெரிவிக்க திட்டமிட்டேன். அன்று ராஜீவ் காந்தி நினைவு நாள்.ஃபிஷரீஸ் துறையில் பணிபுரியும் ஒரு நண்ப‌ர் சி.கே.பாபுவை அறிமுகம் செய்வதாய் உறுதியளித்ததை அடுத்து பிரகாசம் ரோடில் உள்ள ரெட் க்ராஸ் பில்டிங்ஸ் சென்றேன். நண்பர் என்னை அறிமுகம் செய்ய முனைந்தார். ஆனால் திடீர் என்று ஏதோ தகவல் வரவே குவாலீஸில் ஏறிவிட்டார் சி.கே.

சரி நம்ம வழிதான் சரி என்று என் திட்டம்,திட்டம் குறித்த என் முயற்சிகள் அனைத்தையும் ஒரு கடித‌ம் ஆக்கி குரியரில் அனுப்பி விட்டேன். சி.கே.வை பிடிக்காதவர்கள் செய்யும் பொய் பிரச்சாரங்கள் உண்மையானால் இன்று நான் இந்த பதிவை செய்ய விரல்களே இருந்திருக்காது.

என் கடிதத்தில் நான் என்.டி.ஆர் ரசிகன் என்பதையும்,அவரது அரசியல் விரோதிகளுடன் எனக்கு ஜோதிடன் என்ற வகையிலும்,நட்பு ரீதியிலும் தொடர்புகள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இருந்தாலும் சி.கே.என் திட்ட விவரங்களை படித்ததையும்,கருத்து தெரிவித்ததையும் சில நண்பர்கள் மூலம் அறிந்து ஆச்சர்யப்பட்டேன்.

ஆனால் சி.கே ,என் திட்டத்தை அமுலாக்க நான் எம்.பிக்களின் உதவியை நாடியதை தம் நண்பர்கள் மத்தியில் வேதனையுடன் குறிப்பிட்டதை அறிந்து வியந்தேன் . நான் சிந்திக்காத கோணம் அது.

ஆப்பரேஷன் இந்தியாவில் முக்கிய அம்சம் தற்போதைய கரன்ஸியை ரத்து செய்து புதிய கரன்ஸியை அறிமுகம் செய்வதாகும்.

ஒவ்வொரு எம்.பி.யும் லட்சக்கணக்கிலாவது கருப்புப்பணம் வைத்திருந்தால் தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். யதார்த்தம் இப்படியிருக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா? என்ற ரீதியில் சி.கே கருத்து தெரிவித்ததாக அறிந்து நாக்கை கடித்து கொண்டேன்.