உதவி பெறுவது எப்படி? உதவி செய்வது எப்படி? உதவிகளால் மனித உறவுகள் ஏன் பாதிக்கப்படுகின்றன? உதவி செய்பவர்,பெறுபவர் இவர்களில் உயர்ந்தவர் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தர இந்த பதிவில் முயற்சி செய்யப்போகிறேன்.
உதவி பெறுவது எப்படி?
நான் சொல்லப்போவது எப்படி குழையடித்து எப்படி எதிராளி தலையில் மிளகாய் அரைப்பது என்ற யோசனைகளை அல்ல. நாம் பெறும் உதவி நமக்கும்,நம்மை சேர்ந்தவர்களுக்கும், நமக்கு உதவியவர்களுக்கும், நமக்குப் பின் அவர்களை நாடப்போகும் மாந்தருக்கும் உதவியாக இருக்க வேண்டும்.
நாம் கோரும் உதவி முடிவான உதவியாக இருக்க வேண்டும்:
என் நண்பன் சங்கர் அரசுப் பள்ளி க்ளர்க். மாதத்தில் ஒரு தரமேனும் உதவி கேட்டு வருவான். எல்லா உதவியுமே வட்டிக்கு வட்டி கட்டவோ, அல்லது பணம் புரட்ட ஊர் செல்ல பயணச்செலவுக்கு பணம் கேட்டோத்தானிருக்கும். இப்படிப் பட்ட உதவிகள் சீக்கிரம் நட்பை,உறவை பாதித்து விடும்.
உதவி செய்வது எப்படி இருக்க வேண்டும்:
நாம் உதவி செய்வதாய் இறங்கி விட்டால் அது முழுமையான உதவியாய் இருக்க வேண்டும். சித்தூர் டு சென்னை செல்ல வேண்டி உதவி கேட்பவனுக்கு வேலூர் செல்ல பணம் கொடுத்து அங்கே போய் ஏதாச்சும் பார்த்துக்கப்பா என்று சொல்ல கூடாது. கோயம்பேடு வரை டிக்கட்டுக்கு பணம் கொடுத்து,சுங்குவார் சத்திரத்தில் சாப்பிட 4 இட்லி ஒரு வடை கூட கட்டி கொடுத்தனுப்ப வேண்டும்.அதை விட்டுவிட்டு அரை குறை உதவி செய்து விட்டு அவனுக்கு நன்றி இல்லை நன்னாரி இல்லை என்று கதை விடக்கூடாது.
மனித உறவுகள் பாதிப்படைவது ஏன்?
அபாத்திர தானம், அபத்திர தானம்,அரை குறை உதவி,மனம் நோக பேசி உதவி செய்வது,தகுதிக்கு மீறிச்செய்வது,எதையோ எதிர்பார்த்து செய்வது இப்படி எத்தனையோ காரணங்களால் மனித உறவுகள் பாதிப்படைகின்றன.
யார் உயர்ந்தவர்:
மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது இரண்டை தான் . ஒன்று கொல்லுதல், அடுத்தது கொல்லப்படுதல். இந்த விதியை பொருத்தி கூட்டி கழித்து பாருங்கள் ரிசல்ட் ஆக்யுரேட்டாக இருக்கும்.
உதவி பெற வந்தவன்:
உதவி பெற வந்தவன் ஏறக்குறைய தற்கொலை செய்து கொள்ள வந்தவன் போலத்தான். எல்லாவித மாற்று வழிகளையும் சிந்தித்து முடியாத பட்சத்தில் தன் அகந்தையை கொன்று (ஆன்மாவை உணராதவன் தன்னை அகந்தையாகத்தான் உணர்கிறான், எனவேதான் அகந்தை சாகும் போது தானே செத்தது போல் துடிக்கிறான்)
உதவி கேட்டு வருகிறான்.
உதவி கேட்கப்பட்டவனோ..*இவனொருத்தன் என்ன சாகடிக்கிறான்.. அப்படி என்னதான் தொலையாத தரித்திரமோ.. என்று புலம்புகிறான்.
இவன் உதவினால் அவன அகந்தை சாகிறது,அகந்தையை தானாய் எண்ணும் அவனும் சாகிறான். உதவாவிட்டால் இவன் சாகிறான். உதவியை பெற்ற பின் உதவி செய்தவன் மீது பெற்றவனுக்கு கொலை வெறி பிறக்கிறது. அவனை கொல்ல முடியாது நன்றியை கொல்லுகிறான்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு
என்றார் திருவள்ளுவர். நன்றியையாவது கொல்லாவிட்டால், உதவி செய்தவனையே கொல்ல வேண்டியிருக்கும், என்பது வள்ளுவருக்கு தெரியாது பாவம். சிக்மன் ஃப்ராயிடுக்கு முன்னாடியே பிறந்துட்டாரே