Tuesday, February 12, 2008

ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டம் தான்

சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்!

இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ள (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். ஆனால் என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன். இத்தனைக்கும் கடந்த 3 வருடங்கள் முதல் இன்றைய நிமிடம் வரை என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக கூட இல்லை. இருந்தும் சத்தியம் எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட. என் கான்ஷியஸ் உச்சத்தில் இருந்தது என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டம் தான்.நடந்ததை கூறினால் நம்ப கூட முடியாது. அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.


ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து ஆச்சாரி,ஆச்சாரிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். ஆச்சாரி ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

(தொட‌ரும்)