சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆந்திரஜோதி தெலுங்கு நாளிதழ் சில தினங்களாய் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இத்தனைக்கும் சிரஞ்சீவி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அவர் மகள் காதல் கடி மணம் புரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளி வராத நிலையில் வெறும் வாய்க்கு அவல் கொடுத்து வருகிறது ஆந்திர ஜோதி. என்.டி.ஆருக்கும் சிரஞ்சீவிக்கும் பெங்களூருக்கும்/புங்கனூருக்கும் உள்ள அத்தனை வித்யாசமிருக்கிறது. என்.டி.ஆர் காலத்தில் காங்கிரஸின் டெல்லி தலைமையால் முதல்வர்கள் பந்தாடப்பட்டார்கள். என்.டி.ஆர் தரித்த வேடங்கள்,அவரது கள்ளம்,கபடற்ற குழந்தை மனம்,ஆவேசம் நிறைந்த பேச்சு , மக்களை கவர்ந்தது. திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென்று ஒரு சரித்திரம் இருந்தது. அவர் அரசியலில் குதித்தபோது ஈநாடு பத்திரிக்கை மோனோபலியாக இருந்தது. அது ஜாதி அபிமானத்தில் கொடுத்த விளம்பரம் ஓரளவு என்.டி.ஆர் வெற்றிக்கு உதவியது.
சிரஞ்சீவி கதையே வேறு. விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் தவிர அவர் படங்கள் எல்லாமே டீன் ஏஜர்களை குறிவைத்து எடுக்க பட்டவையே. இப்போதைய டீனேஜர்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 20 வருடங்களுக்கு முன்பு அவரை தம் ஆதர்ஸ புருஷனாக வரித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை புரிந்து கொண்டுவிட்ட முக்கால் கிழங்களாகி விட்டார்கள். நான் உட்பட. ஆனால் ஆந்திர ஜோதி சிரஞ்சீவி அரசியலில் குதித்து முதல்வராகவே வந்துவிட்டது போல் ஏக பில்டப் கொடுத்துவருகிறது.
இந்த நேரத்தில் நாம் யோசித்தே ஆகவேண்டிய அம்சம்
நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்பதே.
பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.
நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்பது குறித்து சில வரிகள். தலையங்கம் ஒன்றை தவிர மற்றெந்த பகுதியிலும் நாளிதழ் தன் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்பதே சரி. ஆனால் நானறிந்த தமிழ்,தெலுங்கு பத்திரிக்கைகளில் ஒரு தினத்தந்தியை தவிர எல்லோரும் தம் கருத்துக்களை வாசகர்களின் தலைக்குள் திணிக்க பார்க்கிறார்கள். இது சரியா ? தவறா?