உங்கள் தெருவில் உள்ள இட்லிக்கடைக்கு போயிருக்கிறீர்களா?
என் பாட்டி கூட இட்லி கடை நடத்திதான் என் தந்தையை மாவட்ட கருவூல அதிகாரியாக்கினாள். ஓட்டல் தொழிலே சூதாட்டம் போன்றது. இதில் வென்றாலே தவிர பிழைப்பு நடப்பது சிரமம். இட்லி கடை வைத்து வென்றால் கூட பிழைப்பு நாறித்தான் போகும். ஏதோ வீட்டு வாடகை, சாப்பாடு,குழந்தைகள் படிப்பு செலவுக்கு தள்ளிக்கொண்டு போகுமே தவிர எதிர்கால பாதுகாப்பு என்பது பூஜ்ஜியம் தான். குடும்பமே தங்கள் உழைப்பை கொட்டினாலன்றி இட்லி கடை ஜெயிப்பது கஷ்டம் தான். அப்படியே ஜெயித்தாலும் பிழைப்புக்கு கியாரண்டி கிடையாது. ஒரு சாவோ,ஒரு விபத்தோ அந்த இட்லிக்கடையை பணால் ஆக்கிவிடும்.
தப்பித்தவறி தொடர்ந்து நடந்தாலும் இன்று இட்லி விற்ற பணத்தில் நாளைக்கு தேவையான அரிசி,பருப்பு வாங்க முடியுமே தவிர ஒரு இழவும் மிஞ்சுவதில்லை. இதில் குடும்பத்தில் ஒரு நாமர்தாவோ,நந்தூர்னியோ ஏற்பட்டுவிட்டால் கதை கந்தல்தான். உழைப்பை நம்பி வாழும் இந்த இட்லிக் கடைகளின் மேல் ஏன் அரசின் கருணப்பார்வை படுவதில்லை. டெய்லி ஃபைனான்ஸ், நகைச்சீட்டு இப்படியாக இவர்களின் சம்பாதனை மொத்தமும் வட்டி வகையில் நாசமாகிறதே தவிர வேறொன்றுமில்லை.
காலம் காலமாய் கணவனை இழந்தவர்களுக்கு கை கொடுக்கும் ஒரே தொழில் இதுதானே என்று பராசக்தியில் வசனம் எழுதிய கலைஞரின் கருணைப்பார்வை இவர்கள் மீது விழுமா?