1.பக்கத்து வீட்டு பரிமளம்
"டேய் சோமு ! பக்கத்து வீட்டு பரிமளாகிட்டே போய் 2 தக்காளி வாங்கிட்டு வாடா" என்றாள் அம்மா. "சே பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு சொல்றவேலைய பாரு" என்று திட்டிக்கொண்டே புறப்பட்டேன்.
பரிமளாவுக்கு 35க்கு மேல் வயது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று திருமணம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. பார்க்க அம்சமாகவே இருப்பாள். கதவு திறந்திருக்கவே உள்ளே நுழைந்தேன். அவள் குளித்துவிட்டு பாவாடையை மார்பு வரை தூக்கிக்கட்டிக்கொண்டு டர்க்கி டவலால் தலையை துவட்டிக்கொண்டிருந்தாள். " நான் தரையை பார்த்தபடி "அம்மா 2 தக்காளி வாங்கிட்டு வரச்சொன்னாங்க" என்றேன். பரிமளா ஃப்ரிட்ஜை திறந்து ட்ரேக்களில் தக்காளியை தேடிகொண்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதோரம் சூடு பரவியது, நாக்கு உலர்ந்தது. எப்போதோ பார்த்த பாடாவதி படம் ஒன்றின் காட்சி நினைவிலாடியது.
அந்த நேரம் பார்த்து பரிமளாவின் அம்மா பையுடன் உள்ளே நுழைந்தாள். " ஏய் என்னடா வேலை உனக்கு" என்று சீறியபடி பரிமளாவை பார்த்து " சீ சீ.. என்னடி இது கோலம் போய் புடவைய கட்டிட்டு வா முதல்ல " என்றாள்.
பரிமளம் "அட போம்மா ! எனக்கு காலாகாலத்துல கல்யாணமாகியிருந்தா இவன் வயசுல பிள்ளையோ பொண்ணோ இருந்திருக்கும். இன்னம் நீ என்னை காபந்து பண்றதா நினைச்சு அவமானப்படுத்தாத " என்றாள் .
யாரோ என்னை பளார் என்று கன்னத்துல அறைந்தது போல் இருந்தது.
2.அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !
ரொம்ப நாளைக்கு பிறகு சந்தியாவை பார்த்தேன். விடாப்பிடியாய் தன் காரில் ஏற்றிகொண்டு விட்டாள். பங்களா ஒன்றின் முன் நின்றது கார். பெரிய்ய .. தோட்டம். கணக்கற்ற க்ரோட்டன்ஸ் செடிகள். ஒவ்வொன்றையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். "இது கலெக்டர் வீட்லருந்து கொண்டு வந்து நட்டது" "இது எஸ்.பி வீட்ல இருந்து கொண்டு வந்தது....."
அந்த நேரம் தெருவில் காய் கறி வண்டிக்காரன் குரல் கேட்டது. "அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !"
சந்தியா பதட்டத்துடன் "ஒரு நிமிஷம் கீரை வாங்கிட்டு வந்துர்ரேன்" என்றாள். என் இதழ்கடையில் சற்றே கோணலாய் ஒரு புன்னகை மலர்ந்தது. அதன் பொருளை கண்டு கொண்டதாலோ என்னமோ சந்தியா என் பார்வையை சந்திப்பதை தவிர்க்க "இதோ வந்த்ட்டன்பா " என்ற படி கேட்டை நோக்கி விரைந்தாள்.
3.மனித வளம்
2050,புது தில்லி
பிரதமர் அலுவலகம். பிரதமர் தன் எதிரில் அமர்ந்திருந்த சீன உயிரியல் மேதை ஸ்டான்லி பேச தயங்குவது கண்டு "நிலைமை கை மீறி போயாச்சு. இந்திய நாட்டுக்கு தேவை மனித வள புனரமைப்புக்கு ஒரு தீர்வு. எதுவா இருந்தாலும் சொல்லுங்க " என்றார்.
ஸ்டான்லி பேச ஆரம்பித்தார்." எங்க நாட்ல 40 வருடத்துக்கு முன்பு ஜனத்தொகை பெருக்கம் பெரிய பிரச்சினையா வடிவெடுத்தப்போ திருமணமான ,ஆகாதா ஆண்,பெண்கள் அனைவருக்கும் கட்டாய கு.க.பண்ணீட்டோம். அதுக்கு முன்னாடி அவங்கள்ள உடல் ,மன ரீதியா ஆரோக்கியமா இருந்தவங்களோட உயிரணுக்களையும்,முட்டை கருக்களையும் சேகரிச்சு ஃப்ரீஸ் பண்ணி பாதுகாப்பான கண்டெயினர்கள்ள புதைச்சு வச்சுட்டம். கடந்த 2020 க்கெல்லாம் ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்கு வந்து பொருளாதாரம் நல்ல நிலைக்கு வந்து நிலைப்பட்டு போச்சு. ஆனால் மனித வளம் குறைஞ்சு போச்சு. எதிர்காலத்துல இது பெரிய பிரச்சினையாயிரும் போலிருக்கவே ..ஏற்கெனவே புதைச்சு வச்ச மனித உயிரணுக்கள்,முட்டைக்கருக்களை தோண்டி எடுத்தோம். எடுத்தப்பறம்தான் தெரிஞ்சது முட்டைக்கருக்கள் நம்ம உயிரியல் மேதைமைக்கு டேக்கா கொடுத்துட்டு நாசமாகிப்போயிருந்தது. அதனால ஒரு சாகசம் செய்தோம். கொரில்லா குரங்கோட உயிரணுவை சேகரிச்சு ரெண்டையும் சேர்த்து புதிய மனிதனை படைச்சோம். இதுல ஒரே ஒரு பிரச்சினை..புதிய மனிதன் உடம்புல எந்த ஹேர் ரிமூவருக்கும் அசைந்து கொடுக்காத முடி, உடம்பெல்லாம் முடி . மூர்க்கம், அசுரபலம்"
ஸ்டான்லி பேசியதை கேட்ட பிரதமர் முகத்தில் ஏளன சிரிப்பு .".கடைசில உங்க நாட்டை கொரில்லா தேசமாக்கிட்டிங்க" என்றார்.
ஸ்டான்லியின் முகத்தில் ஆக்ரோஷம். ஐந்து நிமிடத்தில் அனைத்து டி.வி.சேனல்களும் அதிக டெசிபல்சில் அலறிக்கொண்டிருந்தன. "பிரதமர் அலுவலகத்தில் கொரில்லா அட்டகாசம்.."